Home ஆய்வுகள் பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள் – சூ.யோ. பற்றிமாகரன்

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்
பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்சூ.யோ. பற்றிமாகரன்

ஐ.நா.வின் அனைத்துலக நாள் – ஆகஸ்ட் 22

பௌத்த சிங்கள மதவெறி அரசால் துன்புறும் ஈழத்தமிழர்கள்; ஐ.நா.வின் அனைத்துலக நாள் – ஐக்கிய நாடுகள் சபை மதத்திற்காக அல்லது நம்பிக்கைக்காக வன்முறைக்கு உள்ளானவர்களை நினைவு கூரும் அனைத்துலகத் தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் திகதியை அனுசரித்து வருகிறது. இத்தினத்திற்கு இரண்டு முக்கிய நோக்குகள் உண்டு. ஒன்று மதம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் என்பது அடிப்படை மனித உரிமைகள் உடன் தொடர்புடையது என்பதால், அதற்காகப் பாதிப்புக்கு உள்ளானவர்களை நினைவு கூருவதன் வழி மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உறுதிப்படுத்துவது. அடுத்தது மதத்திற்காக அல்லது நம்பிக்கைக்காக வன்முறைக்கு உள்ளானவர்களுக்கு நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் பாதுகாப்பும் புனர்வாழ்வும் கிடைக்கச் செய்வது.

ஈழத் தமிழர்கள் இந்த இரண்டு தேவைகளையும் ஒருங்கே கொண்டவர்களாகச் சமகால அரசியலில் கடந்த 65 ஆண்டுகளாகச் சிறீலங்காவின் பௌத்த சிங்கள அரசுகளால் தொடர்ச்சியாக இனஅழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இவ் ஈழத்தமிழ் மக்களையும் மதத்திற்காக அல்லது நம்பிக்கைக்காக வன்முறைக்கு உள்ளாகி வரும் மக்கள் என்ற வகைமைப் பாட்டுக்குள்  நினைவு கூர்ந்து, அவர்களுக்குப் பாதுகாப்பும் புனர்வாழ்வும் கிடைக்க வழக்கில் உள்ள நடைமுறைச் சட்டங்கள் மூலம் ஐக்கிய நாடுகள் சபை உதவிட வேண்டும்.

இதனைச் செய்யுமாறு உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையைக் கோரவேண்டிய பொறுப்புள்ள நாளாக ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை உலகத் தமிழர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். .

இன்று சிறீலங்காவில் ஒருநாடு அது சிங்கள நாடு,  ஒரு சட்டம் அது பௌத்த பீடாதிபதிகளின் பௌத்த ஆகமச் சட்டம் என்பதை அரசியலமைப்புச் சட்டமாக மாற்ற, அரசியலமைப்புக் குழு அமைத்து, இலங்கையின் பன்முகத் தன்மையை ஏற்க மறுத்து, இலங்கையின் மற்றைய மதநம்பிக்கை உடையவர்களை வன்முறைப் படுத்தும் அரசாக ராசபக்ச குடும்ப அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந் நேரத்தில் 2021ஆம் ஆண்டின் மதத்திற்காக அல்லது நம்பிக்கைக்காக வன்முறைக்கு  உள்ளானவர்களை நினைவுகூரும் ஐ.நாவின் அனைத்துலகத் தினம் இடம் பெறுகிறது என்பதால், பௌத்தம் எவ்வாறு சிறீலங்காவில் ஒரு அரசியல் மேலாண்மைத் தத்துவமாக உருமாற்றம் செய்யப்பட்டு, பௌத்த மடாதிபதிகளும், பிக்குகளும் நேரடியாக நாட்டின் அரசியல் சட்ட ஒழுங்கு முறைகளை மீறி, அமுக்கக் குழுக்களாகச் செயற்படுகின்றனர் என்பதை இந்நாளில் உலகுக்கு உலகத் தமிழர்கள் உரக்க உரைத்திட வேண்டும்.

சிங்கள பௌத்த பேரினவாதிகள்

சிங்கள பௌத்த பேரினவாதிகள் 1956ஆம் ஆண்டில் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த 2500ஆம் ஆண்டின் உறுதிமொழியாக “இலங்கை புத்தர் எங்களுக்குத் தந்த எங்களுடைய பௌத்த சிங்கள நாடு – இலங்கையின் ஆட்சி மொழி எங்களுடைய சிங்கள மொழி – எங்களுடைய பௌத்த ஆகமம் எல்லாவற்றுக்கும் மேலாகப் போற்றப்பட வேண்டும்”.  இவற்றுக்கே இலங்கையில் அரசியல் முன்னுரிமை என்ற கோசத்தை எஸ் டபிள்யூ. ஆர். டீ பண்டாரநயாக்காவின் சிங்களம் மட்டும் சட்டவாக்கம் மூலம் நாட்டின் சட்டமாக்கும் முயற்சியைத் தொடங்கினர். இதுவே சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழரைக் கொன்றழிக்கவும், வீட்டை விட்டுத் துரத்தவும் தங்களுக்கு உரிமையுண்டு என்கிற வேகத்தைப் பெறவைத்தது.

அன்று முதல் இன்று வரை   பௌத்த சிங்களவர்களுக்கு முன்னுரிமை என்பதையே தங்களின் அரச கொள்கையாக எல்லா சிங்கள அரசுகளுமே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையைச் சிங்கள பௌத்த குடியரசாக 22.05.1972இல் பிரகடனப்படுத்தித் ஈழத் தமிழர்களை நாடற்ற தேச இனமாக்கினார்.

ஜே. ஆர். ஜயவர்த்தனா

ஜே. ஆர். ஜயவர்த்தனா நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை 1978இல் தோற்றுவித்து, பாராளுமன்றச் சட்டவாக்க அதிகாரத்தையும், நிர்வாகத்தையும், சட்ட அமுலாக்கலையும் வலுவேறாக்கலின்றி சிறீலங்காவின் அரச அதிபரிடம் குவிய வைத்தார். படைகள் கண்ட இடத்தில் சுடவும், சுட்ட இடத்தில் எரிக்கவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் அதிகாரங்களைப் படைத் தலைமைகளுக்கு வழங்கினார். இதன்வழி உருவானதே இன்று வரையான ஈழத் தமிழின அழிப்புக்கான நியாயப் படுத்தலான, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான நடவடிக்கை என்னும் தத்துவம்.

ஈழத்தமிழர் வெளியக சுயநிர்ணய உரிமை

ஈழத்தமிழர் வெளியக சுயநிர்ணய உரிமை, இந்த சிங்கள பௌத்த ஈழத்தமிழின அழிப்புத் தத்துவத்திலிருந்து தமிழ் இளையவர்கள் ஆயுத எதிர்ப்பு மூலம் போராடுவதற்கான பயிற்சிகளையும், ஆயுத வழங்கலையும் செய்து உதவியர் 1972- 1983இற்கு இடைப்பட்ட காலத்துப் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள். இவரது காலத்தில் சிறீலங்காவின் இறைமையை மீறி இந்திய விமானப்படை விமானங்கள் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறைத் தமிழ்ப் பகுதிகளின் மேல் உணவு வழங்கலைச் செய்து, ஈழத்தமிழர் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உலகம் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.  1983ஆம் ஆண்டு யூலைத் தமிழின அழிப்பை அடுத்து, இந்தியா ஆர்ஜென்டீனா மூலம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு யூலை இனக்கலவரப் பிரச்சினையைக் கொண்டு சென்று, ஈழத்தமிழர் பிரச்சினையை அனைத்துலகப் பிரச்சினையாகவும் மாற்றியது.

இந்திரா காந்தி

இந்தக் காலகட்டத்தில் இந்திரா காந்தி அவர்களின் மறைவை அடுத்து, சிறீலங்கா ஜனாதிபதி  ஜே. ஆர். ஜயவர்த்தனா  இந்தியாவுக்கு ஈழத் தமிழர்கள் மேலிருந்த அக்கறையையும், ஆர்வத்தையும் திசை திருப்பும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்வித்து, ஈழத் தமிழர்களுடைய போராட்ட முயற்சிகளைத் தனிமைப்படுத்த முயன்றார்.

சந்திரிகா பண்டாரநாயக்க

அடுத்த அரச தவைரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் மக்களிடை இருந்து, தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் தாயக விடுதலை அமைப்பாக எழுந்த தமிழீழ விடுதலைப் புலிகளையும், மக்களையும் வேறு வேறு என்னும் அரசியல் தந்திரத்தைக் கையாண்டு, தான் புலிகளை ஒடுக்குவதாகத் தமிழர்களை இனஅழிப்பு செய்ததும் அல்லாமல் அனைத்துலகம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அமைதிவழித் தீர்வு காண முயற்சித்த நோர்வேயின் சமாதான முயற்சிகளையும் தாமதப்படுத்தினார்.  முன்வைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தைத் வழங்காது தாமதப்படுத்தி, ஈழத்தமிழர்களின் அரசு நோக்கிய அரச நிலையைச் சிங்கள அரசுக்குச் சமானமான முறையில் மதித்த  உலகை, அந்நிலையில் இருந்து மாறச் செய்தார். இதன்வழி கூட்டாட்சி ஒன்றின் மூலம் அமைதி ஏற்படுவதற்குரிய முறையில் வளர்ந்து வந்த வளர்ச்சியை அவர் முறியடித்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம்

இவரின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களின் ஆயுத எதிர்ப்பை இல்லாதொழிப்பதற்கான அனைத்துலக வலைப்பின்னலையும் உருவாக்கிப் பின்னர் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் ராசபக்ச குடும்ப ஆட்சி இலங்கையில் உருவாகப் பேருதவி புரிந்தார்.

இந்தப் பின்னணியில் இன்று ராசபக்ச குடும்பம் பௌத்த மகாசங்கங்களின் பணிவான தலைமைகளாகத் தம்மைச் சிங்கள பௌத்தர்கள் முன் வெளிப்படுத்தி, ஈழத்தமிழின அழிப்பை தமிழர்களினதும் தமிழ்பேசும் முஸ்லீம்களினதும் மத மற்றும் நம்பிக்கைகளை வன்முறைப்படுத்தி, இனஅழிப்பு மூலம் நூறாயிரத்திற்கு மேலாகக் ஈழத்தமிழர்களைக் கொன்றழித்த ஆட்சியாளர்களாகவும்,  பதினைந்து இலட்சம் தமிழரை இனங்காணக் கூடிய அச்சத்தை ஏற்படுத்தி தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வைத்து, இன்றும் படைபல ஆட்சியை சனநாயக ஆட்சி என  நடத்துபவர்களாகவும் தொடர்கின்றனர்.

இன்று ஈழத் தமிழின அழிப்புக் கொள்கை வழி ஆட்சி செய்யும் கோட்டாபய ராஜபக்ச, பௌத்த மதத்தின் பேரால் தான் தமிழர்களின் நம்பிக்கைக்காக அவர்களை வன்முறைப் படுத்தி வருவதை உலகுக்கு நியாயப்படுத்த, தமிழர்களின் தாயகப் பகுதிகளையே பௌத்த மண் எனப் பிரகடனப்படுத்தும் அரச அதிபர் செயலணிக் குழுக்களையே நிறுவி, வேகமாகச் செயற்பட்டு வருகின்றார். தமிழ்மொழி மூலம் தமிழர்கள் வழியாக பௌத்தம் இலங்கையில் பரவிய தொன்மை வரலாற்றால் தமிழர் பகுதிகளில் காணப்படக் கூடிய பௌத்த மதத் தொல்பொருட்களைச் சிங்களவர் களுடைய ஆட்சியின் சின்னங்கள் எனத் திரிபுவாதம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் கோத்தபாயா படைபல நிர்வாகம் கொண்டு செய்து வருகின்றார். சைவஆலயங்கள் முன் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

அதே வேளை தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கு வழி செய்யுமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசின் வேண்டுகோள் வெளிவந்த மறு வினாடியே இலங்கையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என ராசபக்ச சகோதரர்கள் கூட்டுப் பதில் அளித்து, இலங்கையில் மற்றைய மத இன உரிமைகளைத் தாங்கள் வன்முறைப் படுத்தல், தங்களைப் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்த சிங்கள மக்களுடைய ஆணையைத் தாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடு என நியாயப்படுத்தியும் உள்ளனர்.

இந்த உண்மைகளை உலகுக்கு உரக்கச் சொல்லி ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மறுப்பு என்பது, சிறீலங்கா,  மதத்திற்காக அல்லது நம்பிக்கைக்காக ஈழத் தமிழரை வன்முறைப்படுத்தும் அரசியல் செயற்திட்டமாகவும் பார்க்கப்படக் கூடியது என்பதை வெளிப்படுத்த வேண்டும். இந்த வகையிலும் இதனை அணுகி ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் மீள ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக நாடுகளும் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையைக் காலந்தாழ்த்தாது ஏற்று அவர்களுக்கு உதவுமாறு வேண்டுவது உலகத் தமிழரின் இந்நாளின் கடமையாக உள்ளது.

Exit mobile version