பெகாசஸ் உளவு செயலிக்கு இலக்கான தமிழ்நாட்டு தலைவர்கள்

E7IkfD UYAEI6vt பெகாசஸ் உளவு செயலிக்கு இலக்கான தமிழ்நாட்டு தலைவர்கள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘மே 17’ இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் ஆகியரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவுச் செயலியால் குறிவைக்கப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

என்எஸ்ஓ என்ற இஸ்ரேலிய நிறுவனம் உருவாக்கிய உளவு செயலியான பெகாசஸ் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் குற்றச் சாட்டுகள் எழுந்தன.

இந்தச் செயலியால் குறி வைக்கப்பட்ட சுமார் 50,000 எண்களின் பட்டியல் ஒன்று, பிரான்சை சேர்ந்த Forbidden Stories என்ற அமைப்புக்குக் கிடைத்தது. இந்த எண்கள் உலகம் முழுவதும் உள்ள 16 ஊடகங்களுடன் பகிரப்பட்டன.

இந்தியாவில் இருந்து செயல்படும் ‘The Wire’ இணைய தளம், இந்திய பிரமுகர்கள் தொடர்பான எண்களைப் பரிசீலித்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. அகில இந்திய அளவில் பல்வேறு தலைவர்களின் செல்பேசி எண்கள் இந்த உளவு செயலியால் குறி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், சம்பந்தப்பட்ட செல்பேசிகளை ஆராயாமல், அவற்றிலிருந்து தகவல்கள் திருடப்பட்டனவா என்பதைச் சொல்வது இயலாத காரியமாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் சார்ந்து செயல்படும் சிலரது எண்களும் பெரியாரிய அமைப்பைச் சேர்ந்த சிலரது எண்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் இந்த செயலியால் இலக்கு வைக்கப்பட்டதாக கூறுகிறது ‘தி வயர்’ இணையதளம். இந்த பெகாசஸ் விஷயத்தை அம்பலப்படுத்தி வரும் உலக ஊடகங்களில் ஒன்று ‘தி வயர்’.

திருமுருகன் காந்தி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். 2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப் பட்டதிலிருந்து இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை முன்னிலைப் படுத்தி, அதற்கான நீதியைக் கோரி வருகிறது.

இது தவிர, தமிழ் நாட்டின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் குரல் எழுப்பி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் ஒன்றில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசியிருந்தார் திருமுருகன் காந்தி.

ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம் ஒன்றிலும் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்துப் பேசியிருந்தார் திருமுருகன் காந்தி. இந்நிலையில், 2018ஆம் ஆண்டில் சட்டவிரோத செயல்பாடுகள் தடைச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன.

“எங்கள் அரசியல் நிலைப்பாடுகள் பா.ஜ.கவுக்கு எதிரானவை என்பதுதான் நாங்கள் குறிவைக்கப்படுவதற்குக் காரணம். ஜனநாயக வெளியை முற்றிலும் சிதைப்பதற்கான முயற்சி இது. கேள்வி எழுப்புபவர் யாராக இருந்தாலும் அவர்களை அச்சுறுத்துவது, முடக்குவது போன்றவற்றில் ஈடுபடுகிறது இந்த அரசு. பொய்ச் செய்திகளை செல்பேசியிலோ, கணினியிலோ உள்ளிறக்கி, அவர்களை துரோகிகளாகக் கட்டமைக்கிறார்கள். கருத்துகளை எதிர்கொள்ளும் வலிமை இவர்களுக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது,” என பிபிசியிடம் தெரிவித்தார் திருமுருகன் காந்தி.

எந்தவொரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களோ, நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களோ இலக்கு வைக்கப்படாமல், அரசியல் தலைவர்கள், பத்திரிகை யாளர்கள் இலக்காக்கப் பட்டிருப்பதை திருமுருகன் காந்தி சுட்டிக் காட்டுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2018- 19ஆம் ஆண்டுகளில் சிறிது காலம் பயன்படுத்திய செல்பேசி எண் ஒன்றும் இந்த உளவுச் செயலியால் இலக்கு வைக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

2010ல் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் அமைப்பு, பிறகு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன்னிறுத்திப் பேசிவரும் இந்தக் கட்சி, 2016ஆம் ஆண்டிலிருந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.

கு.ராமகிருஷ்ணன்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தொலைபேசி எண்ணும் இந்தச் செயலியால் இலக்கு வைக்கப் பட்டுள்ளது. முதலில் திராவிடர் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்ட கு. ராமகிருஷ்ணன், பிறகு கொளத்தூர் மணியுடன் இணைந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கிச் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பு பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதோடு, மக்கள் பிரச்னைகளுக்காகவும் குரல் எழுப்பி வந்தது.

“இது ஒரு அச்சத்தின் வெளிப்பாடுதான். தமிழ் நாட்டில் பெரியார் இயக்கங்களை கண்காணிப்பதற்கு காரணம், அவை இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்றத் தடையாக இருக்கின்றன என்பதுதான்.

இந்தச் செயலி மூலம் எங்கள் செல்பேசியில் ஏதாவது தகவல்களை அனுப்பி, எங்கள் மீது வழக்குத் தொடர்ந்து, எங்களை முடக்கவே இப்படிச் செய்திருக்கிறார்கள்,” என்கிறார் கு. ராமகிருஷ்ணன்.

பெகாசஸ் செயலி மூலம் அரசியல் தலைவர்களை உளவு பார்ப்பதைக் கண்டித்து சமீபத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப் பட்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட மூவர் தவிர, திராவிடர் கழகத்தின் பொருளாளரான குமரேசன் என்பவரது எண்ணும் இந்தப் பட்டியலில் இருக்கிறது.

பெகாசஸ் செயலியால் இலக்காக்கப் பட்டிருக்கும் இந்த நான்கு பேருடைய எண்களும் ஆண்ட்ராய்ட் செயலி மூலம் இயங்கும் தொலைபேசிகளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பெகாசஸ் செயலியால் இலக்கு வைக்கப்பட்டோர் பட்டியலில் இவர்களது தொலைபேசி எண்கள் இருக்கின்றன என்றாலும், உண்மையிலேயே அந்தத் தொலைபேசிகள் ‘ஹேக்’ செய்யப்பட்டதா என்பது தெரியாது.

நன்றி -பிபிசி ilakku-weekly-epaper-140-july-25-2021