தமிழ் இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர் -இரா.சாணக்கியன்

தமிழ் இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர்

இந்த அரசாங்கமானது தேவையென்றால் எவரையும் தனது மடியில் வைத்துக் கொள்ளவும் தமது தேவைக்காக அப்பாவி இளைஞர்களை சிறையில் வைக்கவும் செய்யும். தமிழ் இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

3000 பனை விதைகள் நடும் வாலிபர்கள் என்னும் தலைப்பில் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் போரதீவுப் பற்றில் பனை விதைகள் நடும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற வளங்களை அழித்துக் கொண்டிருக்கின்ற செயற்பாட்டை காணக் கூடியதாக இருக்கின்றது.

எங்களுடைய மண்வளம், காணிகள், வீதிகள் போன்ற அனைத்து விடயங்களையுமே மோசமாக கையாள்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக இருக்கின்றது. நானும் பாராளுமன்றத்தில் அடிக்கடி பேசுகின்ற ஒரு விடயம். இந்த அரசாங்கமானது எங்களுடைய இளைஞர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி பலரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளது.

பனைவிதைகள் நடும் இந்த நிகழ்வில் எங்களுடைய வாலிபர் முன்னணியின் பல உறுப்பினர்கள் இல்லை. இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்த சோபனன் அவர்களை கிட்டத்தட்ட ஒருவருடமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்து வைத்திருக்கின்றனர். இது அரசாங்கத்தின் இரட்டைவேடத்தினைக்காட்டுகின்றது.

தெற்கில் விடுதலைப்புலிகளை மீளகட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதாக கூறி சிங்களை மக்களை அச்சங்கொள்ளச்செய்வதற்காக இவ்வாறு தமிழ் இளைஞர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்களாகக் கூறி நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி தடுத்துவைத்துள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற ஒரு திறப்பு வழாவிலே கே.பி அவர்களை இந்த நாட்டினுடைய சிறுவர் கல்விக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த அவர்கள் கட்டியணைத்து மிகவும் பாசமாக உரையாடுவதை காணக்கூடியதாக இருந்தது. விடுதலைப் புலிகளுடைய சொத்துக்கள் தன்னிடம் இல்லை என்று அவர் பல விடயங்களை சொல்கின்றார். அவர் என்ன சொல்கின்றார் என்பதை நாம் விட்டுவிடுவோம். கே.பி அவர்கள் போர்க்குற்றம் புரிந்தார் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கின்றது. ஆனால் எங்களுடைய தமிழ் இளைஞரொருவர் முகநூலிலே விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட ஒரு செய்தியை பதிவிட்டது ஒருவருடம் சிறையில் வைத்திருக்கக்கூடிய ஒரு குற்றம் ஆனால் கே.பி அவர்களை நீங்கள் கட்டியணைத்து உறவாடலாம். சிங்கள மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கமானது தேவையெனக் கருதினால் எவரையும் தங்கள் மடியிலே வைத்திருப்பார்கள்,தங்கள் தேவைக்காக அப்பாவி இளைஞர்களையும் சிறையில் வைத்திருப்பார்கள். இதுவே இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான நிலைப்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா – தமிழில்: ஜெயந்திரன்

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை என்பதற்காக கீழ் இறங்கியுள்ள கோத்தா

ilakku-weekly-epaper-150-october-03-2021