Tamil News
Home செய்திகள் கி.மு 7ம் நூற்றாண்டு முதலாக தமிழ் பேச்சுவழக்கு மொழியாக இருந்துவந்துள்ளது-பேராசிரியர் சி.பத்மநாதன்

கி.மு 7ம் நூற்றாண்டு முதலாக தமிழ் பேச்சுவழக்கு மொழியாக இருந்துவந்துள்ளது-பேராசிரியர் சி.பத்மநாதன்

புராதனகால இலங்கை வரலாறு பற்றி போதிக்கப்படும் சிந்தனைகளை மறுபரிசீலனை செய்து மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் என்பதை அண்மைக்காலமாக அறியப்பட்டுவரும் கி.மு கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் செய்திகள் உணர்த்தி நிற்பதாக போராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மூன்றிலொரு பக்கத்திலே தமிழ் சமுதாயம் கிமு முதலிரண்டு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப் பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கிவிட்டனர் என்றும் சொல்லக்கூடிய காலம் வந்துள்ளது.

நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும் ஆதி இரும்புக்கால பண்பாட்டை பிரதானமாக அவர்களே பரப்பினார்கள் என்பதாலும் கி.மு 7ம் நூற்றாண்டு முதலாக தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலைபெற்றுள்ளமை உய்த்துணரத்தக்கது.

தமிழ் மொழியின் தொன்மைபற்றி தமிழ்நாட்டு தொல்பொருள் சின்னங்களை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்க முடியாதவற்றை இலங்கையில் கிடைக்கின்ற தமிழ் பிராமி கல்வெட்டுகளின் அடிப்படையில் சொல்ல முடிகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும் எனவும் அவர் தனது ”இலங்கை தமிழர் வரலாறு ;கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பிராமி வடிவங்களில் காணப்படும், கல்வெட்டுகள்,
மட்பாண்டங்கள்,சிற்பங்கள் என பலதரப்பட்ட பொருட்களை ஆய்வுசெய்து நூற்றுக்கணக்கான ஒளிப்படங்களுடன் அவர் எழுதியுள்ள இந்தநூல் இலங்கை தமிழர் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.

கதைகளால் அல்ல கல்வெட்டுக்களால் நிறுவப்படும் தமிழரின்
தொன்மை வரலாறு

Exit mobile version