தொப்புள்கொடி உறவை உதாசீனப்படுத்தும் தமிழ்த் தரப்பும் அரவணைக்கத் துடிக்கும் சிங்களத் தரப்பும்! | இரா.ம.அனுதரன்

சிங்களத் தரப்புஇரா.ம.அனுதரன்

அரவணைக்கத் துடிக்கும் சிங்களத் தரப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஈழ – தமிழக அரசியல் களங்களில் திடீர் கவனிப்பை ஏற்படுத்தியுள்ள விடயமாக மாறியுள்ளது.

கைக்கெட்டும் நிலையில் தன்னியல்பாக கிடைக்கும் வளங்கள் மீது காணப்படும் அலட்சியப் போக்கானது, அதன் மீது பிறர் பார்வை விழும்போதோ, பிறர்வசமாகின்ற போதோ அதனை எண்ணி வருத்தப்படுவது மனித இயல்பு. ஈழத் தமிழர்களது தொப்புள்கொடி உறவின் வழியே எமது மிகப்பெரும் ஆதரவு தளமாக காணப்படும் தமிழ்நாட்டை நோக்கி இலங்கை அரசின் பார்வை பதிந்துள்ளதை யடுத்து ஈழத்தமிழர் பரப்பில் அவ்வாறான பெரும் தவிப்பு மேலோங்கி வருவதனை அவதானிக்க முடிகிறது.

இந்தப் பின்னணியில், ஈழத்தமிழர்களது விடுதலைக்கான நெடும் பயணத்தில், ஆயுத மௌனிப்பின் பின்னராக தமிழர் தரப்பினால் உதாசீனப்படுத்தப்பட்டு வரும் தொப்புள் கொடி உறவாகிய தமிழ்நாட்டின் வகிபாகம் குறித்தும் முக்கியத்துவம் தொடர்பிலும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

“நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால் தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும், நாம் இந்தியாவை பகை சக்தியாக கருதியதில்லை. இந்தியாவை எமது நட்பு சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்” என கடந்த 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்தியா துரோகம் செய்து விட்டது என கூப்பாடு போட்டுக் கொண்டு இந்தியாவை நிரந்தர பகை சக்தியாக மாற்றுவதிலோ, இந்தியாவை மீறி எதுவும் செய்யவியலாது என அடிபணிவு அரசியலை முன்னெடுப்பதிலோ தற்போதைய தமிழ் அரசியல் தரப்பினர் போன்று இல்லாது ஈழத் தமிழர்களது சுயநிர்ணய உரிமையின் வழியே கொள்கையை முன்னிறுத்தியதாக ஈழத் தமிழர்களது அபிலாசைகளை அடமானம் வைக்காது செயற்பட்டிருந்தமை வரலாறு.

இவ்வாறு இந்திய பேரரசை நோக்கி நேசக்கரம் நீட்டிய போதிலும் ஈழத்தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இந்திய பேரரசை சாதகமான நிலைக்கு இட்டுவருவதற்கு தமிழ்நாட்டை நோக்கியதாகவே எப்போதும் அழைப்பை விடுத்து நின்றிருந்தார்.

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 50 ஆண்டுகால அரசியலை தீர்மானிக்கும் இரு பெரும் ஆளுமைகளாக இருந்த மு.கருணாநிதி, செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து மறைந்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தற்போது ஆட்சிபீட மேறியுள்ளது. எதிர்த் தரப்பாக விளங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மறைவின் பின்னரான காலத்தில் பல அணிகளாக பிளவுபட்டு தன்னைத்தானே பலவீனப்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில், தற்போதைய இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தில் தன்னை நிலைநிறுத்த படாதபாடுபட்டு வருகிறது.

தமிழ்நாடு சுமார் 6 கோடியே 30 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட மாநிலமாகும். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான அடுத்த தேர்தல் 2026 இல் வர உள்ள நிலையில், அதற்கு முன்னதாக 2024இல் இந்திய நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. 2வது தடவையாக நரேந்திர மோடி தலைமையில் பாராதிய ஜனதா கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 2024 இல் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறான முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் தனது ஆதரவு தளத்தை வலுப்படுத்தும் வகையிலான நகர்வுகளை ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களை மையப்படுத்தியதாக ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி ஆரம்பித்துள்ளது. 2021இல் நடைபெற்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் பாரதிய ஜனதா கட்சி கால்பதித்துள்ளது. இவ் ஆதரவுதளத்தை விரிவுபடுத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை வென்றுவிடுவதில் பா.ஜ.க. தரப்பு தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 30 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மத்தியில் நல்ல பிள்ளையாக காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாவுக்கு உள்ளது.

இவ்வாறான பின்னணியில், தமிழ்நாட்டின் வழியே இந்தியப் பேரரசுடனான உறவை கட்டியெழுப்புவதே எமக்கு மிகவும் பாதுகாப்பானதாகும் என்பது வரலாற்று பட்டறிவு. ஆயுத மெனளிப்பின் பின்னர் தனித் தனித் தரப்புகளாகவும் உதிரிகளாகவும் தமிழ்த் தேசிய கட்சிகள் பிளவுபட்டு ஈழத்தமிழர்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் நேரடியாக இந்திய மத்திய அரசுடன் உறவினையேற்படுத்துவதானது பாதகமானதாகவே அமையும்.

ஈழத்தமிழர்களது விவகாரம் இன்றும் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குச் செலுத்தும்வகையிலேயே உள்ள நிலையில், இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களை ஏமாற்றுமாக இருந்தால், தமிழ்நாட்டில் செல்வாக்கினை இழக்க வேண்டியேற்படும். அத்துடன் தமிழ்நாடு-புதுச்சேரி இணைந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய அரசியலில் காத்திரமான அழுத்தங்களை கொடுக்கும் தரப்பாகவே விளங்கி வருகின்றமையும் அவர்களுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் விடயமாகவே அவதானிக்கப்படுகிறது. 2004 – 2009 வரையான காங்கிரஸ் ஆட்சி தி.மு.க.வின் தயவிலேயே அமைந்திருந்தமை உள்ளிட்ட பல சந்தர்ப்பங்கள் இதனை நிரூபிக்கின்றன.

இவ்வாறன நிலையில், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான குரலாகவும், இனப்படுகொலை உள்ளிட்ட இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான நீதிக்கான குரலாகவும் தாய்த் தமிழகத்தை ஒரே குரலாக ஓங்கி ஒலிக்க வைப்பதற்கு ஈழத்திழர் தரப்பாகிய நாம் தவறியே வந்துள்ளோம் என்பது வேதனையான உண்மையாகும்.

இக்கையறு நிலையில்தான், மிலிந்த மொறகொடவின் ஊடாக இலங்கை அரசின் தமிழ்நாட்டை நோக்கிய நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களை பரிமாறிக்கொள்ள உரிய பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு இதன்போது மலிந்த மொறகொட கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், தமிழ் தத்துவவியலாளரும் புலவருமான திருவள்ளுவரின் சிலையொன்றை இலங்கையில் பல்கலைக் கழகமொன்றில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை மிலிந்த மொறகொட ஏற்றுக் கொண்டுள்ளார். அது மாத்திரமல்லாது, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மலிந்த மொறகொட அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பகிரங்கமாகவே தெரிவித்திருந்த நிலையில், இச்சந்திப்பு அமைந்துள்ளமை பலரையும் அதுநோக்கி உற்றுநோக்க வைத்துள்ளது.

இச்சந்திப்பின் தொடர்ச்சியாக மு.க.ஸ்டாலின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது நிச்சயம் நடந்தேறும். நாம் ஒரே குரலாக ஈழத்தமிழர்களது விடயங்களை வெளிப்படுத்துவதுடன், ஈழத்தமிழர்களது அபிலாசைகளை முன்னிறுத்தியதாக செயற்படும் நிலையேற்படாத கையறுநிலையில் மு.க.ஸ்டாலின் இலங்கைக்கான பயணம் அமையுமாக இருந்தால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் போன்று படம்காட்டும் பயணமாகவே அமையும்.

இவ்வாறானதொரு நிலையில்தான், மாபெரும் இனவழிப்பை மேற்கொண்ட கையோடு அப்போதைய தி.மு.க. குழுவினரை இலங்கைக்கு அழைத்து விருந்தும் பரிசில்களும் வழங்கி வழியனுப்பிவைத்தன் மூலம் ராஜபக்ச தரப்பு பெற்றுக்கொண்ட நண்மைகளை நாம் மறந்துவிட முடியாது.

சிங்கள பௌத்த பேரினவாத தரப்புகளின் அபிலாசைகளை முன்னிறுத்தியதான இலங்கை அரச இயந்திரம் தமிழ்நாடு அரசுடன் நல்லுறவை கட்டியெழுப்ப முனைப்புக் காட்டுவதானது எமது விரலை கொண்டே எமது கண்ணைக் குத்தும் சூழ்ச்சியன்றி வேறில்லை.

தொப்புள்கொடி உறவுநிலையில் தன்னியல்பாகவே எமது வலிகளையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றக்கூடிய தாய்த்தமிழகத்துடன் நாம் வலுவான உறவுநிலையை கட்டியெழுப்பியிருக்காத பின்னணியில் இலங்கை அரசு நேரடியாக தமிழ்நாட்டுடன் உறவினை மேம்படுத்துமாயின் ஈழத்தமிழர்களுக்கு பேரிழப்பாகவே அமையும் என்பது திண்ணம்.

Tamil News