அனைத்துலக மக்களாட்சித்தின – உலக அமைதித்தின வாரச் சிந்தனைகள் – மக்களாட்சியின் அரசியலில் கலையியல் அறிஞர் சூ.யோ. பற்றிமாகரன் –

மக்களை மையப்படுத்தாத தமிழ் அரசியல் வாதிகள்

தமிழ் மக்களை மையப்படுத்தாத தமிழ் அரசியல் வாதிகள், இவர்களால் ஈழத்தமிழர்  அரசியலுரிமைகள் மீட்கப்பட முடியாதனவாகின்றன
தியாகி திலீபன் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக் கோரி, உயிர்த்தியாகம் செய்து 34 ஆண்டுகளாகியும், அதன் முக்கியத்துவத்தை உணராத தமிழரசியல்வாதிகள்

  • அனைத்துலக மக்களாட்சித்தின – அமைதித்தின வாரத்திலேயே இவற்றுக்கு அடிப்படையான அனைத்துலகச் சட்டங்களை மீறும் சிறிலங்கா
  • கோவிட் 19 க்குப் பின்னான புதிய உலக ஒழுங்கு முறை அமைப்பு முயற்சிகளை மக்களாட்சியை அழிக்கப் பயன்படுத்தும் சிறிலங்கா
  • ஈழத்தமிழ் மக்களின் மக்களாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தலென்பது, இந்திய மக்களாட்சிக்கும் பாதுகாப்பான அமைதிக்கும் அவசியம்.
  • பிரித்தானிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய முக்கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கையின் வெற்றி ஈழத்தமிழர் உறவிலும் தங்கியுள்ளது.

இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மக்களாட்சித் தினமான செப்டெம்பர் 15ஆம் திகதியன்று, கோவிட் 19க்குப் பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு,           “எதிர்கால நெருக்கடிகளை தாங்குவதற்கு மக்களாட்சியைப் பலப்படுத்துவோம்” (Strengthening democratic resilience in the face of future crises) என்னும் அழைப்பு ஐக்கிய நாடுகள் சபையால் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டர்ஸ் அவர்கள் “சமத்துவம், பங்களிப்பு, ஒருமைப்படல் என்பவற்றின் வழி எதிர்கால நெருக்கடிப் புயல்களை வெல்வதற்கான காலநிலையை உருவாக்குவோம்” என அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான நடைமுறைகளாக மனித உரிமைகளையும், அதனை நிலைநிறுத்தும்  சட்டத்தின் ஆட்சியையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடான சிறிலங்கா, இந்த இரண்டுமே இல்லாத இருபத்தியொராம் நூற்றாண்டின் நாடாக அது தன் குடிகளாக உலகுக்கு அறிவிக்கும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றாக ஈழத்தமிழர்களை அவர்களுடைய தாயகத்திலேயே இனஅழிப்புக்கு உள்ளாக்கும் பௌத்த சிங்கள மேலாதிக்க இனஅழிப்புக் கோட்பாட்டைத் தனது அரசின் செயற்திட்டமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வருவதையும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் உட்பட ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை நாடுகள் அனைத்தும் நன்கறியும்.

மக்களை மையப்படுத்தாத தமிழ் அரசியல் வாதிகள்

மக்களுடைய விருப்பில் தான் அரசின் அதிகாரம் உள்ளது எனத் தெளிவாகக் கூறும் ஐக்கிய நாடுகள் சபை, ஈழத்தமிழ் மக்களின் விருப்பைச் சுதந்திரமான படைபலமற்ற குடியொப்பம் மூலம் வெளிப்படுத்தலுக்கான உரிமையை இதுவரை அனைத்துலகச் சட்டங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தாது, ஈழத்தமிழ் மக்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அவர்கள் செயற்படுத்துவதற்கான அவர்களின் உள்ளக – வெளியக தன்னாட்சி உரிமைகளை செயற்படுத்த விடாது, தடுத்து வருவதே ஈழத்தமிழ் மக்கள் இனஅழிப்பால் படிப்படியாக இருப்பு இழந்து வருவதற்கான மூல காரணமாகிறது என்பதை இவ்விடத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக உள்ளோம்.

காலமாகிய தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மாண்பமை ஜெயலலிதா அவர்கள், தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களின் 2009ஆம் ஆண்டு யுத்தப் பாதிப்புக்கான அனைத்துலக விசாரணையைத் தொடங்குமாறும்,  ஈழத்தமிழர்களின் விருப்பை அறியும் குடியொப்பத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் நடாத்துமாறு பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானமாகவே நிறைவேற்றினார். தற்போதைய தமிழக முதலமைச்சர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அவர்களும் தமது கட்சியின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திலேயே இவற்றை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மிக நீண்டகாலமாக தமிழகத்தில் அரசியல் புகலிடம் கோரி வாழ்ந்து வருபவர்களுக்கான குடியுரிமைத் தகுதியை ஏற்காது விடுவதும், இந்தியாவுக்கு அதன் பகைமை நாடுகளில் இருந்தே அகதிகளை வரவேற்கும் இந்தியா, இலங்கையிலிருந்து வரக் கூடிய அகதிகளுக்கு மட்டும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக இந்தியாவுக்குள் வர அனுமதிக்க மறுப்பதும், இந்திய ஒன்றிய அரசு அரசியல் பழிவாங்கும் உணர்வுடன் ஈழத்தமிழர்களை நடாத்துகின்ற செயற்பாடு என இன்றையத் தமிழக சட்டசபையில் எடுத்துரைத்து, இவற்றை நீக்குமாறு ஒன்றிய அரசைக் கோரியுமுள்ளார்.

உலகில் தமிழர்களின் மக்களாட்சிக் கோரிக்கையைச் சுதந்திரமாகத் தமிழர்கள் வெளியிடக் கூடிய ஒரேயொரு மக்களாட்சி அமைப்பாக உள்ள தமிழக சட்டசபை, மிகத் தெளிவாக இனத்துவ உணர்வுடன் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின் வழியாகவே ஈழத்தமிழர்களின் மக்களாட்சி உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும் எனக் கோரிக்கை விடுத்தும், இந்திய ஒன்றிய அரசு உட்பட உலக நாடுகள் தங்களின் சந்தை மற்றும் இராணுவத் தேவைகள் கருதி இவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் முன்னெடுக்காது இருப்பதே என்றும் சிறிலங்கா தான் மக்களாட்சியைக் கொண்டிருக்கும் நாடு என்ற போர்வையுள் ஈழத்தமிழர்களின் மக்களாட்சி உரிமைகளை மறுத்து, அவர்களை இனழிப்புக்குள்ளாக்கி வருவதற்கான மூலகாரணமாகிறது.

எனவே கோவிட் 19க்குப் பின்னரான காலத்தில் என்கிலும், ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்களுடைய அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான அனைத்துலகச் சட்டங்களைக் காலதாமதமின்றி முன்னெடுக்க வேண்டுமென்பது உலகத் தமிழினத்தின் கோரிக்கையாக உள்ளது.

இவ்விடத்தில் புலம் பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் உட்பட்ட உலகத் தமிழினத்தின் கோரிக்கை இதுவாக இருந்த நிலையிலும், 2009க்குப் பின்னரான படைபலப் பணிவால் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவை மீளவும் பெற்று வரும் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள், மக்களாட்சி என்பதே மக்களை மையப்படுத்தி, அவர்களில் தங்கி வெளிப்படுத்தும் பிரதிநிதித்துவ முறைமை. இது  தங்களின் கடமை என்பதை அறியாதவர்களாக உள்ளனர்.

இதனால் இவர்கள் மக்களின் விருப்பைத் தமது தொகுதியின் பிரதிநிதித்துவ விருப்பாக வெளிப்படுத்தாது, தாங்கள் பதவியில் இருப்பதற்கான தமது அல்லது தமது கட்சியின் விருப்பையே தமது தொகுதியின் விருப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவே ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீள நிலைநாட்டுவதில் மிகப்பெரிய தடைக்கல்லாக அமைகிறது.

தமது மனம் போன போக்கில் தமது கால் போகும் இடங்களை நிர்ணயித்து, அதனை மக்கள் விருப்பாக வெளிப்படுத்திச் செயலாற்றுகின்றனர். இதுவே சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் அதிகார பரவலாக்க மறுப்புடைய அடிப்படை மனித உரிமைகளான கருத்துச் சுதந்திரத்தையும், ஒன்று கூடும் சுதந்திரத்தையும் மறுத்துப் பல்லின பண்பாட்டு அரசியலை அனுமதிக்காத, மக்களாட்சித் தத்துவத்தின் வேரான மனித உரிமைகளைப் பேணும் சட்டத்தின் ஆட்சியை,  சிங்கள இனத்தின் பௌத்த மதத்தின் மேலாண்மையை நிறுவும் தன்மையான சட்டவாட்சியாக, ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் ஆட்சி முறைமைக்கு ஊடாக ஈழத்தமிழர்களை இனஅழிப்புச் செய்வதை இவர்களால் தடுக்க இயலாது இருப்பதற்கான மூலகாரணமாகிறது.

தியாகி திலீபன் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக் கோரி, உயிர்த்தியாகம் செய்து 34 ஆண்டுகளாகியும் அதன் முக்கியத்துவத்தை உணராத தமிழ் அரசியல்வாதிகளால் இன்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க இயலாதுள்ளமையே ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீளநிலைநாட்டுவதில் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் அரசியல்வாதிகள் ஆளுபவர்களின் கால்களை நக்கிப் பிழைப்பதன் உச்சமாகவே உலக மக்களாட்சித் தின வாரத்திலேயே சிறிலங்காவின் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சரே தனது ஆடைக்குள் துப்பாக்கியை மறைத்து எடுத்துச் சென்று அநூராதபுரம் சிறையில் இருந்த தமிழ்க் கைதிகளை துப்பாக்கி முனையில் அவர்களைக் கொன்று போடும் கட்டற்ற அதிகாரம் தன்னிடம் உள்ளதாக மிரட்டவும், அவருடன் கூடச் சென்றவர்கள் குரலற்றோர் குரல் என்னும் அமைப்பின் செய்திப்படி தங்களின் கால்களின் காலணிகளை நாக்கால் நக்கித் துப்புரவு செய்யுமாறு வற்புறுத்தவும் செய்த உலகின் மிக மோசமான மனிதாயக் குற்றம் இடம்பெற வழிவகுத்துள்ளது என்றால் மிகையாகாது.

‘ஒரு இனம் ஒரு நாடு’ என்னும் சர்வாதிகார மேலாண்மை, பாராளுமன்றக் கொடுங்கோன்மை வழியாக முன்னெடுக்கப்படும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், தமிழ்த் தலைமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு தங்கள் கண்முன்னால் எதார்த்தமாகவே உள்ள ஈழத்தமிழர்களின் மனித உரிமை இழப்புக்களைக் குறித்த கடிதம் ஒன்றை அனுப்புவதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் எச்சில் இலைக்கு அடிபடும் நாய்கள் போல் குரைத்துக் கடித்துக் குதறிச் செயற்பட்ட கேவலமான அரசியல் உலக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையே விக்கித்து நிற்க வைத்தது.

இந்தத் துணிவில்தான் சிறிலங்காவால் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் தான் மனித உரிமைகள் மேம்பாட்டுக்காக உள்ளக நிலையில் எட்டு விடயங்களை முன்னெடுத்துள்ளதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் வெளியக முயற்சிகளை ஏற்க முடியாதென வெளிப்படையாக அனைத்துலக சட்டங்களுக்குத் தாம் கட்டுப்பட முடியாதென இந்த மக்களாட்சி வாரத்திலேயே கூற முடிகிறது.

இந்தத் தமிழ் அரசியல்வாதிகளால் சிறிலங்கா அந்த எட்டு விடயங்களையும் நடைமுறைப்படுத்துதல் என்பது போலியானதென உடனே பதிலிறுக்க முடியவில்லை என்றால், இவர்கள் எந்த அளவுக்கு மக்களை மையப்படுத்தித் தமது பிரதிநிதித்துவக் கடமையைச் செய்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இளையவர்களை மக்களாட்சியில் பங்கெடுப்பதற்கான பிரதிநிதித்துவ முறைமைகளை ஊக்குவிக்குமாறு விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று, இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் இளையோர் மக்கள் பிரதிநிதிகளாக எழ உரியன செய்தல் காலத்தின் தேவையாகிறது.

இல்லையேல் கோவிட் 19க்குப் பின்னரான புதிய ஒழுங்குமுறையை உருவாக்க முயலும் வல்லாண்மைகளை தம்வசப்படுத்தி, ஈழத்தமிழர்களை இனஅழிப்புச் செய்ய முயலும் இன்றைய அரசாங்கத்தின் ராஜதந்திர வலையை அறுத்தல் என்பது ஈழத்தமிழர்களால் மிகக்கடினமானதாக அமையும். மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பொஸ்கோ அவர்களின் தினக்குரல் தகவலின் படி சிறிலங்கா அரசாங்கம் 750 க்கு மேற்பட்ட அமைப்புக்களுடன் மனிதஉரிமைகள் குறித்துத் தொடர்பு கொண்டமையையும் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் 25க்கும் குறைவான அமைப்புக்களுடனேயே தொடர்பு கொண்டுள்ளமையையும் அறிய முடிகிறது. இது தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தங்களின் தனித்தவத்தை இழக்காது ஒருமித்த முறையில் ஒரு குடைநிழல் தலைமையினை ஏற்றுச் செயற்பட வேண்டிய தேவையினை வெளிப்படுத்துகிறது.

மேலும் 1981ம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையினால், ஓவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 21ம் நாளன்று 1950ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சங்கத்தின் யப்பான் கிளையால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அமைதி மணி அடிக்கப்பட்டு,  அன்றையத் தினம் உலக அமைதித் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2001 முதல் இந்நாள் உலகெங்கும் போர்நிறுத்தம் கடைப் பிடிக்கப்படும் வன்முறையற்ற நாடாகவும் பிரகடனம் செய்யப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

கோவிட் 19க்குப் பின்னரான இவ்வாண்டு உலக அமைதித் தினத்தின் மையக்கருவாக “நியாயமானதும் நிலைத்ததுமான உலகுக்காகச் சிறப்புடன் மீண்டெழுதல்” (“Recovering better for an equitable and sustainable world”) என்னும் கருப்பொருள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி வெறுப்புக்களுக்கும், நிராகரிப்புக்களுக்கும் எதிராக உலகம் எழுந்து நின்று கருணையும் இரக்கமும் நம்பிக்கையும் கொண்ட உலகாக கோவிட் 19க்குப் பின்னரான உலகைக் கட்டி யெழுப்ப வேண்டும் என்னும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை விடுக்கப்படும் சமகாலத்திலேயே சிறிலங்கா ஈழத்தமிழ் மக்கள் மேலான வெறுப்பையும் அவர்களது அனைத்து சுதந்திரமான பங்களிப்புக்களின் நிராகரிப்பையும் ஏககாலத்தில் செய்யும் நாடாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

கோவிட் 19 காலத்தை வெற்றிகரமாகத் தாங்கள் கையாள்வதாக ஐக்கிய நாடுகள் சபையில் வீரமொழி பேசும் சிறிலங்கா, தனது படைத் தளபதிகளை அரசின் மக்கள் நிர்வாகப் பொறுப்புக்களின் தலைமையாளர்களாக்கி போதாக் குறைக்கு தற்போது நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பொருளாதார நிர்வாகத்தையும், படைபலம் கொண்டே முன்னெடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் தலைவராகவும் படைத் தளபதியையே நியமித்து, மக்களின் வாழ்வியலின் உண்மை நிலைகளை உலகறியா வண்ணம் செய்து, தாம் விரும்பியவாறு நடைமுறையின் புள்ளி விபரங்களையும், தரவுகளையும், தகவல்களையும் உலகுக்கு வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் சேர்த்துக் கூறினால், இந்த வெற்றியின் உண்மை நிலை உலகுக்குத் தெளிவாகும்.

புலம்பதிந்து வாழும் தமிழர்களுக்கும் அவர்களுக்கான சமூக ஊடகம் ஒன்று இல்லாத காரணத்தால் நியாயமானதும் நிலைத்ததுமான உலகுடன் மீண்டெழும் பயணத்தில் ஈழத்தமிழ் மக்களின் நியாயங்களையும் நிலைத்தலுக்கான வழிகாட்டல்களையும் செய்ய இயலாதுள்ளது. எனவே இந்த உலக அமைதி, மக்களாட்சி என்பவற்றுடன் ஈழத்தமிழர்களை நாளாந்தம் இணைத்து ஈழத்தமிழர்களை மீண்டெழச் செய்தல் என்பது  அறிவூட்டலையும் வழிகாட்டலையும் செய்யக் கூடிய  ஈழத்தமிழர்களின் உலக ஊடகத்தையும், அதற்கான வாழ்வியலைப் பலப்படுத்தக் கூடிய சமூக மூலதனங்களை இணைக்கும் தமிழர்களுடைய உலக வங்கி அமைப்பையும் உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது.

அமைதித்தின வாரச் சிந்தனைகள்3 அனைத்துலக மக்களாட்சித்தின - உலக அமைதித்தின வாரச் சிந்தனைகள் - மக்களாட்சியின் அரசியலில் கலையியல் அறிஞர் சூ.யோ. பற்றிமாகரன் -இறுதியாக இவ்வாரத்தில் உறுதி செய்யப்பட்ட பிரித்தானிய – அமெரிக்க – அவுஸ்திரேலிய பாதுகாப்பு உடன்படிக்கை இந்து – பசுபிக்மா கடல்களில் சீனாவின் வல்லாண்மையை வளர்ச்சியை மட்டுப்படுத்தும் ஆங்கில நாடுகளின் புதிய பாதுகாப்பு கூட்டமைப்பாக அமைந்து பிரான்சுடன் அவுஸ்திரேலியா செய்திருந்த 48 பில்லியன் பவுண்ஸ்க்கான அணுநீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் திட்டத்தைக் கூடக் கைவிட வைத்துள்ளது.

இதனை பிரான்சு வெளிவிகார அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் கூட்டாக முதுகில் குத்திய செயலாக அறிவித்ததும் அல்லாமல், ஐரோப்பிய – ஆங்கில பழைய கால முறுகல் நிலையின் புதிய வடிவாகவும் பார்க்கிறது. இந்தச் சூழலில் ஈழத்தமிழர்களின் இந்துமா கடல் பகுதியின் உச்சநிலையான திருகோணமலைத் துறைமுகம் அதிமுக்கிய இடத்தை ஏற்கும் என்பது உலகறிந்த விடயம். இந்நேரத்தில்  ஈழத்தமிழ் மக்களின் மக்களாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தலென்பது இந்திய மக்களாட்சிக்கும்  பாதுகாப்பான அமைதிக்கும் அவசியமானதாகிறது.

அவ்வாறே பிரித்தானிய அமெரிக்க அவுஸ்திரேலிய முக்கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கையின் வெற்றியும் ஈழத்தமிழர் உறவிலும் தங்கியுள்ளது என்பதை இந்நாடுகள் உணரப் புலம்பதிந்து வாழும் தமிழர்கள் உழைப்பதிலேயே ஈழத்தமிழர்களின் மக்களாட்சி பாதுகாப்பான அமைதி என்பன முழுமைபெறும்.