உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் இணக்கம்-விஜயதாஸ ராஜபக்ஷ

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது  குறித்து தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், அவர்கள் இச்செயன்முறைக்கு இணங்கியிருப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வடக்கு, கிழக்கில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளடங்கலான எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று அறிவித்திருக்கும் அதேவேளை, தெற்கில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் சாதிக்க முடியாததை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சாதிக்க முடியும் என்று தாம் நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று தசாப்த காலமாக நாட்டில் இடம்பெற்ற ஆயுத மோதலின்போது பதிவான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுத்து நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகம் இலங்கையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் தென்னாபிரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டதையொத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அதன்படி, இதுகுறித்து தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருப்பதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்ட நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவ்வாணைக்குழுவின் கீழ் நியமிக்கப்படும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், இனிவரும் காலங்களில் தாம் எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் நம்பி ஏமாறுவதற்கும், காலத்தை வீணடிப்பதற்கும் தயாரில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச விசாரணை மாத்திரமே தமது தேவை என்றும், அங்கும் நீதி கிடைக்காவிட்டால் போராடிச் சாவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

அதேவேளை இதுபற்றி கருத்து வெளியிட்டிருக்கும் தெற்கில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தாம் எதிர்க்கவில்லை எனும் போதிலும், இதுவரை காலமும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக கிடைக்கப்பெறாத தீர்வு, இப்புதிய ஆணைக்குழுவின் ஊடாக கிடைத்துவிடும் என்று தாம் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.