Home ஆய்வுகள் யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலையில் உள்ளனர் |...

யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலையில் உள்ளனர் | மட்டு.நகரான்

கிழக்கு மாகாண தமிழர்கள்மட்டு.நகரான்

கிழக்கு மாகாண தமிழர்கள் இன்று தங்கிவாழும் நிலையில்…

யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலையில் உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, இன்று தமிழ் மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை இந்த பொருளாதார நெருக்கடியானது மிக மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து கடந்த பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருந்தேன். இயற்கை வளம் கொண்ட பகுதியாகவுள்ள கிழக்கு பகுதியில் தமிழர்கள் ஏன் வறுமையில் உள்ளனர் என்பது தொடர்பில் பல கட்டுரைகள் இந்த இலக்கு வார இதழில் எழுதப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இன்றைய பொருளாதார நெருக்கடி கிழக்கு மாகாண தமிழர்களின் வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தினைக் கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுவும் ஒரு இராஜதந்திர யுத்தமாகவே கொள்ளப்பட வேண்டும்.

பெரும்பான்மை சமூகம் இந்த சூழலில் பாதிக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் ஆட்சிகள் மாற்றமடையும்போது அந்த சூழ்நிலையினை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை சிங்கள அரசுகள் முன்னெடுக்கும். ஆனால் தமிழர்கள் நிலையென்பது எதிர்காலத்தில் பாரியளவிலான தாக்கத்தினை செலுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

யுத்த காலத்தில் தமது தேவையினை தாங்களே நிறைவு செய்யும் வகையிலான உற்பத்திகளை முன்னெடுத்த சமூகமானது, இன்று அன்றாட உணவுக்கே வழியில்லாமல் தடுமாறும் நிலையில் இருப்பதைக் காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் எழுவான்கரை, படுவான்கரையென்ற பகுதிகள் காணப்படும் நிலையில், எழுவான் கரையானது கடல் மற்றும் நீர் நிலைகள்சார் மீன்பிடி மற்றும் தோட்டச் செய்கை, ஏனைய வர்த்தக செயற்பாடுகள் மற்றும் துறைசார்ந்த தொழில்களைக் கொண்டவர்களை கொண்டுள்ள அதேநேரம், படுவான்கரை பகுதியை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தினையும் நன்னீர் மீன்பிடியையும் தொழிலாக கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

யுத்த காலத்தில் தமிழர் பகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மிகவும் கஸ்டமான சூழ்நிலை மற்றும் அதிகூடிய விலைக்கு பெற்றுக்கொள்ளும் நிலையிருந்தாலும், தற்சார்பு பொருளாதாரம் காரணமாக அவற்றினை இலகுவில் கடந்துசெல்ல முடியும் நிலையிருந்தது. அவர்களிடம் அதிகளவான சேமிப்பும் இருந்துள்ளது. ஆனால் இன்று அனைத்தும் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில், இனவாதத்தை மூலதனமாக கொண்டு பதவிக்கு வந்த சிறிலங்கா அரசுகள், தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நிலையான உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியை கிடப்பில் போட்டுவிட்டு, தங்களை தேர்வு செய்த பெரும்பான்மை சிங்கள மக்களை பரந்துபட்ட அளவில் குடியேற்றம் செய்த அதேநேரம், பேரினத்துவ அரசியலில் அவர்களுக்கு கவர்ச்சிகரமான இலவச சலுகைகளையும் தொடர்ந்து வழங்கியதோடு, சிறுபான்மை மக்களை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். அதற்கு அவர்கள் இட்டபெயர் ‘பயங்கரவாதத்தினை முறியடிக்கும் யுத்தம்.’

இனத்துவேசத்தின் மூலம் தமது மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் செயற்பாட்டை பதவிக்கு வந்த எல்லா அரசுகளுமே மெல்ல மெல்ல அதிகரித்து, ஓரவஞ்சனை அரசியலைச் செய்து கொண்டே வந்தனர்.

இதன் காரணமாக பொறுமை இழந்த சிறுபான்மையினர், குறிப்பாக வடக்கு கிழக்குத் தமிழர் தமது மக்களின் அரசியல் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள  மெல்ல மெல்ல அகிம்சை ரீதியில் போராட ஆரம்பிக்க, அவையும் இரும்புக் கரங்களால் ஒடுக்கப்பட்டன. இதேபோல் மறுபுறம்  பொருளாதார பாதிப்பின் காரணமாக ஆயுதம் தூக்கிய இடதுசாரி ஜேவிபியின் கீழான சிங்கள இளைஞர்கள் உயிரும் பறிக்கப்பட்டன.

உள்நாட்டு பொருளாதாரத்தில் தளம்பல் ஏற்படவே பேரினவாத மக்களிடையேயும் துளிர்விட ஆரம்பித்த முணுமுணுப்பை சமாளித்து, அவர்களை திசை திருப்ப யுத்தத்திற்கு அதிகளவான பணத்தை கொட்டியதுடன் தேவையற்ற பலவித ஆடம்பர செயற்பாடுகளில் பணத்தை விரயமாக்கி, அவர்களைத் தமது பிடிக்குள் கட்டிப் போட்டுக் கொண்டே வந்தன. இந்த கையறு நிலையில் சூடேறும் உள்ளக அரசியல், பொருளாதார நிலையைச் சமாளிக்க வெளிநாடுகளிடம் மீண்டும் மீண்டும் கையேந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதன் தாக்கம் சிங்கள மக்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன், தமிழ் மக்களையும் தாக்கியுள்ளது. எனினும் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் தற்சார்பு பொருளாதாரத்தினை கைவிட்டதன் விளைவாகவே இன்று மிகவும் கஸ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் மனித வலுவை அடிப்படையாக கொண்டே இருந்து வந்தது. ஆனால் இன்று அனைத்து பகுதிகளிலும் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதன் மூலமாக பொருளாதாரத்தினை முன்கொண்டு செல்லமுடியாத நிலைக்குள் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளும் ஏனைய தொழில் துறையினரும் தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இந்த இயந்திரங்கள் வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்டதன் காரணமாக இந்த நிலைமையினை தமிழ் சமூகம் இன்று சந்தித்துள்ளது. யுத்த காலத்திலும் துவண்டு போகாத சமூகம் இன்று துவண்டு போவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இதுவாக காணப்படுகின்றது.

இன்று டீசல் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம், விவசாய பொருட்களின் விலையேற்றம் காரணமாக விவசாய நடவடிக்கைகளையும், ஏனைய மீன்பிடி உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த தமிழர்கள் அதனை விடுத்து வேறு தொழில் செய்யும் நிலைக்கு அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்சார்பு பொருளாதாரத்தினை கொண்டு தமது கிராமிய வாழ்க்கை முறைக்கு அமைவாக செல்வச் செழிப்போடு வாழ்ந்த மக்களை கடந்த காலத்தில் பல்வேறு முறையான ஆடம்பர பொருட்களை காட்டி அவர்களின் பண்பாடுகளையும், கலாசாரத்தினையும் திட்டமிட்ட வகையில் அழித்ததன் காரணமாகவே இன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை தாங்கமுடியாத நிலையில் தமிழ் சமூகம் காணப்படுகின்றது.

இன்று கூலித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட தமிழர்களின் வாழ்க்கை ஊசலாடுகின்றது. தமது வாழ்க்கையினை சமாளிக்க முடியாத நிலைக்கு பெரும்பாலான தமிழர்களின் நிலை தள்ளப்பட்டுள்ளது. ஓரளவு வசதி படைத்தவர்கள், வயல் நிலங்களைக் கொண்டவர்கள் நட்டமடைந்தாலும் ஏதோ தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லும் நிலையேற்படும். ஆனால் கூலித் தொழிலாளர்கள் மற்றும் அன்றாடம் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இதன் காரணமாகவே நாங்கள் கடந்த காலத்தில் இங்குள்ள வளங்கள் முறையாக பயன்படுத்தி, அவற்றின் மூலம் தொழில்துறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம். இன்று வளங்கள் இருந்தும் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு நமது சமூகம் தள்ளப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எமது சமூகத்தின் நிலை தொடர்பில் இந்த நாட்டில் வாழும் எந்த பெரும்பான்மையினமும் அக்கறை கொள்ளாது. நாங்கள் முடிந்தவரையில் அக்கறை கொள்வதன் மூலமே இந்த மக்களை கைதூக்கிவிட முடியும்.

இந்த பிரச்சினையானது வெறுமனே மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினையாக இருக்க முடியாது. இது முழு கிழக்கு மாகாணத்திற்குமாக உருவெடுத்திருக்கும் பிரச்சினை. இவற்றினை முன்கொண்டு சென்று அவற்றிற்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என்பதே இன்று கேள்வியாகவுள்ளது.

இன்று தேசிய பிரச்சினை குறித்து அதிகளவில் கரிசனை காட்டும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்களின் அடிமட்டத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தும் நிலையில் இல்லையென்பதே உண்மையாகும். நாங்கள் வடகிழக்கு இணைந்த தாயகம் என்ற கருப்பொருளை இன்னும் கொண்டிருப்போமானால், கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பொறுப்பு புலம்பெயர் மக்களுக்கு உள்ளது. இலங்கையை கடனிலிருந்து மீட்கமுனையும் முன்பு இந்த தமிழ் மக்களுக்கு கைகொடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்.

Exit mobile version