Home ஆய்வுகள் “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”

“இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”

இலங்கை போராட்டம்

இலங்கை போராட்டம்-தமிழர்களின் பங்களிப்பின் அவசியம்?


தமிழினம் பட்ட வேதனை, துன்பம், கண்ணீர் என்பவற்றை சிங்கள மக்கள் இன்றுதான் உணர்ந்துள்ளனர்

-பா.அரியநேத்திரன்

வடக்கு கிழக்கு வாழ் தமிழினம் கடந்த 73 வருடங்களாகப் பட்ட துன்பம், கண்ணீர், சோகம் வேதனைகளை இலங்கையில் வேறு எந்த இன மக்களும் அனுபவிக்கவில்லை, ஆனால் அதை இன்றுதான் சிங்கள மக்கள் உணர்ந்துள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகச் செயலாளருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

இலங்கையில் கோட்டாபய அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தும் நிலையில், வடக்கு கிழக்கில் குறித்த போராட்டங்கள் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து   அவர்  மேலும் கூறுகையில்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அதில் 67 இலட்சம் வாக்குகளும் சிங்கள மக்களுடைய வாக்குகள் என்பது உண்மை. இதனை ஜனாதிபதி அடிக்கடி பெருமையாக “நான் சிங்கள மக்களுடைய வாக்குகளால் வெற்றிபெற்ற ஒருவன். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பற்றுவேன்“ என பல முறை தமிழ்பேசும் மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாகப்  பேசியுள்ளார்.

அவர், பதவி ஏற்று  இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், யாரின் வாக்குகளால் வெற்றி பெற்றாரோ, அதே மக்கள் இன்று அவரின் முகத்தில் கரிபூசும் அளவில் அவரைப் பதவியை விட்டு வீட்டுக்குச் செல்லவேண்டும் என கூக்குரல் இடுகின்றனர்.

வடக்கு கிழக்கு தமிழர்களுக்காக ஒரு சமஷ்டி அடிப்படையில் தீர்வைத் தாருங்கள் என பல அகிம்சைப் போராட்டங்களும், ஆயுத ரீதியிலான போராட்டங்களும் இடம்பெற்ற காலமெல்லாம் குண்டாந்தடி தொடக்கம் இரசாயனக் குண்டு, இனப்படுகொலைகளை சந்தித்து, இலங்கையில் மாறி மாறி ஆட்சிசெய்த சிங்கள இனவாத அரசுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எமது தமிழ் மக்கள்தான்.

அந்தக் காலத்தில் பல பொருளாதார நெருக்கடிகளும், ஒருவேளை கஞ்சி குடித்து உயிர்வாழ்ந்த காலமும் உண்டு.  கொக்கட்டிச்சோலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இலட்சக் கணக்கான தமிழினப் படுகொலைகளை நாம் சந்தித்த போது, எந்த ஒரு சிங்கள மக்களும் அது பிழை என்று கூறவில்லை. மாறாக அதை நியாயப்படுத்துவதாகவே சில சிங்கள ஊடகங்களும், பல சிங்கள மக்களும் அரசுகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.

இப்போது நாடு முழுவதும் பொருளாதாரத் தடை, உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்னமே ஒரு நாட்டில் இன்னொரு பகுதியான வடக்கு கிழக்கில் திட்டமிட்ட பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியவர்களே இன்று இலங்கை முழுவதும் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

அன்று தமிழர்கள்  சிந்திய கண்ணீரை இன்று சிங்கள மக்கள் சிந்துகின்றனர். இதற்கான மூலகாரணம் தந்தை செல்வா காலத்தில் கேட்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்கி இருந்தால், தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை ஏற்பட்டு இருக்காது.

ஆயுதப் போராட்டத்திற்காக 1976, தொடக்கம் இன்று வரையும் இலங்கையை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் எத்தனை கோடி பில்லியன்களை வருடாவருடம் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கி வீண்விரயம் செய்தார்கள் என்பதை மனச்சாட்சியுள்ள சிங்கள புத்திஜீவிகளும், சிங்கள மக்களும் சிந்தித்துப் பார்கவேண்டும்.

போருக்காக செலவு செய்யாமல், வடக்கு கிழக்கு மக்களின் சுதந்திர வாழ்வுக்காக சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை வழங்க செலவு செய்து இருந்தால், இன்று இலங்கை சிங்கப்பூராக மாறி இருக்கும் என்ற உண்மையை சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்கள புத்திஜீவிகளும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் சிங்களப் பல்கலைக்கழக மாணவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தனக்குத் தனக்கு வரும் போதுதான் எவருக்கும் உண்மை விளங்கும் என்பதை தற்போதய போராட்டங்கள் சிங்கள மக்களுக்கு உணர்த்தியுள்ளன.

தமிழ் மக்கள் பட்ட 73 வருட துன்பத்தை சிங்கள மக்கள்  இன்றுதான் உணர்துள்ளனரா என்பது தெரியாது. அப்படி உணர்ந்தால், ஒரு நாட்டுக்குள் அடிமைகளாக வாழும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சரியானது. அவர்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை ஒட்டுமொத்த சிங்கள மக்களும் ஆட்சியாளர்களிடம் அடித்துக்கூற வேண்டும்  என்றார்.

தெற்கிலுள்ளவர்கள் புரட்சிகரமான மாற்றத்தை விரும்பும் போது, தமிழ் மக்கள் அதில் பின்தங்கி இருக்கக் கூடாது

 -சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்

தெற்கிலுள்ளவர்கள் புரட்சிகரமான மாற்றத்தை விரும்பும் போது, தமிழ் மக்கள் அதில் பின்தங்கி இருக்கக் கூடாது என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

 “பொருளாதார நெருக்கடி தொடர்பான போராட்டங்கள், வடக்கு கிழக்கில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர்,

நாடு தற்போது கொந்தளிப்பு நிலையிலேயே காணப்படுகின்றது. பல தசாப்தங்களாக ராஜபக்ச என்ற பெயர் தெற்கு அரசியலில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அரசியல் களத்தில் மிக தைரியத்துடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

ராஜபக்சக்களை வெல்ல முடியாது என்ற விம்பம் உருவாகி இருந்தது. இரண்டு தசாப்தங்களாக மிகப்பெரிய பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.

கல்வியாளர்களாக இருந்தாலும் சரி, தொழில்சார் விற்பன்னர்களாக இருந்தாலும் சரி ராஜபக்சவினுடைய அதிகார மேம்பாட்டிற்கு அடி பணிந்து, நன்மைகளை பெறுவதிலேயே குறியாக இருந்தார்கள்.  பௌத்த சிங்கள மேலின வாதத்தை ஏற்றுக்கொண்டு இருப்பவர்களே காணப்பட்டனர்.

ஆனால் அந்த விம்பம் இப்போது சரிந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், மக்கள் அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அடிவயிற்றில் கைவைத்தபடியால் ராஜபக்சாக்களது விம்பம் சரிந்து விட்டது.

எனவே இது தான் சரியான தருணம். அவர்கள் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தி முகத்திரையைக் கிழித்து அவர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டும். அதனைவிட போர்க்குற்றவாளிகள் என்ற விடயமும் வெளியே வரத்தொடங்கி இருக்கின்றது.

பல்வேறு இடங்களில் இடம்பெறும் போராட்டங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பதாதைகளை தற்போது சிங்கள மக்கள் ஏந்திச் செல்லக் கூடிய நிலைமை உருவாகியிருக்கின்றது.

தமிழ் மக்களாகிய நாங்கள் பல வருடங்களாகப் போர்க்குற்றத்திற்கு இவர்கள் உள்ளாக்கப்பட வேண்டும், பொறுப்புக்கூறல் வேண்டும், சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்று   கூறிக்கொண்டு இருந்தும் எதுவித பலனும் இல்லாதிருந்த நேரத்தில், இப்போது விடிவெள்ளி போல இந்த நிலைமை தொடங்கியிருக்கின்றது.

புது முறைமை ஒன்று வரவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். ராஜபக்சக்கள் போய் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்க வந்தாலும் அதே விளைவுகள் தான் தலைதூக்கும். இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெற்கில் எல்லா விதமான பிரிவினரும் எதிர்ப்பிற்குத் துணை நிற்கின்றார்கள். வடக்கு கிழக்கில் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. தெற்கில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், தொழில்சார் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு பேரணியை நடத்தி கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் மண்ணில் தமிழ் மக்கள் , சட்டத்தரணிகள், வைத்தியர்கள் இதில் மும்முரமாக ஈடுபடாமல் இருப்பது எங்களுக்கு கவலை தருகின்றது. எனவே இவ் விடயம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு இந்த போராட்டத்திலும் நாங்கள் பங்கு கொள்ள வேண்டும் என்பது தான் எங்களுக்கு நன்மை பயக்கும் விடயமாக இருக்கின்றது.

தெற்கில் உள்ள அரசியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என இருந்து விட கூடாது. ஏனென்றால் எங்களுக்கு பொது எதிரி ஒருவன் இருக்கிறான். அதனை முதலில் ஒழித்து விட்டால் எங்களுக்கு ஓரளவாவது நிம்மதி கிடைக்கும்.

எனவே இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி சர்வதேச விசாரணை, பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்லல் என்பதனை மீண்டும் நாங்கள் கொண்டு செல்லலாம். இச் சந்தர்ப்பத்தினை நழுவவிடக் கூடாது. தமிழ் மக்களும் இப் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். தங்கள் பிரதேசங்களிலும் மும்முரமாக எடுக்கப்பட வேண்டிய ஒன்று.

எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால் அதனைவிட ராஜபக்சக்களது அதிகாரம், பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கண்டுவிட்டால், வேறு பிரச்சினைகளை சமாளிப்பதற்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். அதன் அடிப்படையில் தெற்கிலே எடுக்கப்படும் போராட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் , எதிர்ப்புக்களுக்கும் தமிழ் மக்கள் மிக மும்முரமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து  என்றார்.

கொழும்பில் நடக்கிறது அரசியல் போராட்டம்

 வடமராட்சி மீனவர்கள் ஆதங்கம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் காரணமாகக் கொண்டு கொழும்பில் நடக்கிற போராட்டம் அரசியல் போராட்டமாகவே இருக்கு. அதனால் எங்கட கஷ்டங்கள் ஒருபோதும் தீரப்போவதில்லை என வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அதனையடுத்து கொழும்பில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து வடமராட்சி மீனவர்களின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது எஸ்.பாபு இவ்வாறு தெரிவித்தார்,

கடலை நம்பித்தான் எங்கட வாழ்க்கை இருக்குது. கடந்த யுத்த காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாடுகளால் கடற்றொழிலை சரியான முறையில் செய்ய முடியாமல் பெரும் துன்பப்பட்டம்.

போர் முடிஞ்சா பிறகு இந்தியன் படகுகள் எங்கட கரைவரை வந்து எங்கட கடல் வளங்களை அழிக்கிறதோட வாழ்வாதரத்தையும் கேள்விக்குறியாக்கும் விதமாக இருக்குது.

இது ஒருபக்கமென்டால், அவ்வப்போது கன மழை, சூறாவளி, புயல் காற்று என இயற்கையும் வெவ்வேறு வடிவங்களில் வந்து தொழில் செய்யமுடியாத நிலையை ஏற்படுத்திவிடுது.

இவற்றையெல்லாம் கடந்து கழுத்தில, காதில கிடக்கிறதுகளை வித்து தன்னும் தொழிலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் வடக்கில் இருக்கிற மீனவர்களின் நிலை காணப்படுது.

இந்த நேரத்தில்தான் இலங்கையில் கொரோனா வந்திச்சு பிறகு பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டு சாப்பாட்டு சாமான்களுக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்தித்திச்சு. அப்பெல்லாம் கடலுக்கு போய் கிடைக்கிறதை கொண்டு சீவியத்தை நடத்த முடிஞ்சுது.

இப்ப அதுக்கும் வழியில்லாமல் செய்து போட்டாங்கள். கடலுக்கு போய் சீவிக்கிறதுக்கு மண்ணெண்ணெய் வாங்கிறது பெரிய கஷ்டமா இருக்குது. நினைத்த நேரத்தில் வாங்க முடிவதில்லை. அப்பிடி கிடைக்கிற நேரத்திலையும் மணித்தியாலக் கணக்கில் காத்திருந்து அதுவும் அவங்கள் குடுக்குற அளவுதான் வாங்கி வரும் நிலை.

இதனால் வெளியால விக்கிறவங்களிட்டை விலை கூட குடுத்து வாங்கித்தான் தொழிலுக்கு போகவேண்டிய நிலை. இப்பிடி எங்கட கஷ்டம் இருக்கேக்க கொழும்பில நடக்கிற போராட்டங்களால் எதுவும் மாறப்போறதில்லை.

அவங்கள் தங்கட அரசியலுக்காக அங்க போராடுகினம் நாங்கள் எங்கட வயித்துப்பாட்டுக்காக தினமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறம்… வேற என்னத்தை சொல்லுறது…

Exit mobile version