13 குறித்து ஆராய்வதற்காக நாளை யாழில் கூடுகின்றன தமிழ் கட்சிகள்; மனோ, ஹக்கீமும் பங்கேற்பர்

13 குறித்து ஆராய்வதற்காக
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்தியாவை கோருவது தொடர்பிலும், 13ஆவது திருத்தத்தில் மேலதிகமாக அதிகாரங்களை பெறுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவும் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன கூடிப் பேசவுள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ. பி. ஆர். எல். எவ்.), தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எனினும், இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின்சார் பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் பங்கேற்பர் என்று ரெலோவின் பேச்சாளர் கு. சுரேன் உறுதிப்படுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் கட்சிகளுடன், சிறுபான்மையின கட்சிகளும் இணைந்துள்ள போதும் சேர்ந்து இயங்கக்கூடிய சகல கட்சிகளுடனும், 13 குறித்து ஆராய்வதற்காக ஆதரவான தென்னிலங்கை கட்சிகளையும்கூட இணைத்துக் கொண்டும் விரைவில் பயணிப்போம் என்றும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் அரசுக் கட்சி பங்கேற்காதது தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் கு. சுரேனிடம் கேள்வி எழுப்பிய போது, தமிழ் அரசுக் கட்சி அதுபற்றி எமக்கு அறிவித்தது. 6ஆம் திகதி கட்சியின் தலைமைக் குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த சந்திப்பை நடத்துமாறு கேட்டிருந்தனர். ஆனால், இது முன்னரே திட்ட மிட்ட கூட்டம் – எனவே, திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். அடுத்துவரும் சந்தர்ப்பங்களில் தமிழ் அரசுக் கட்சி பங்கேற்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தக் கூட்டம் குறித்து கடந்த 23ஆம் திகதி மெய்நிகர் வழியில் கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய பிரதமரை கடிதம் மூலம் கோருவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் இதற்கு ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad 13 குறித்து ஆராய்வதற்காக நாளை யாழில் கூடுகின்றன தமிழ் கட்சிகள்; மனோ, ஹக்கீமும் பங்கேற்பர்