ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்?-க.வி.விக்னேஸ்வரன் பதில்

ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்


ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்? என்ற  ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், “ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள் வசம் இருக்கும் போது சிறுபான்மையினர் பாகுபாட்டுக்கு உள்ளாவார்கள் என்பதால்” எனக் கூறியுள்ளார்.

மேலும்  ஊடகவியலாளர் கேள்விகளுக்கு தொடர்ந்து அவர் பதில் அளிக்கையில்,

கேள்வி:- பெரும்பான்மையினக் கட்சிகளில் சிறுபான்மையினர் போதிய அளவு இடம் வகித்தால் இந்த நிலைமை எழாதல்லவா?

பதில்:- எழும். இலங்கை போன்ற நாடுகளில் எழும். இலங்கையில் பெரும்பான்மையினத் தலைவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டுள்ளார்கள். தமது இனம் இலங்கை நாட்டில் பெரும்பான்மை என்றாலும் பக்கத்தில், தமிழ் நாட்டில், பல கோடி தமிழர்கள் வாழ்ந்து வருவதால் தமக்கு எக் காலத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தில் இலங்கை வாழ் சிறுபான்மையினரைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றார்கள். தமது தாழ்வு மனப்பான்மையின் நிமித்தம் அவர்களை எழ விடாமல் தடுக்க வேண்டும் என்று சிந்திக்கின்றார்கள். அதனால் தம்முடன் சேரும் சிறுபான்மை இன மக்களையும் அவர்களே வழிநடத்துகின்றார்கள். சிறுபான்மை உறுப்பினர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றார்கள். இதற்கு நல்ல உதாரணம் இதுவரை காலமும் பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து பயணித்த தமிழ்த் தலைவர்களே. பாகுபாட்டுக்குட்படும் சிறுபான்மையினரை அவர்களால் சட்ட ரீதியாகக் காப்பாற்ற முடியாது போய்விட்டது. தனிப்பட்டவர்களை அவர்கள் காப்பாற்ற முடியும். ஆனால் இனங்களின் உரித்துக்களைப் பெற்றுத் தரமுடியாது. எனவே ஒற்றையாட்சியில் பெரும்பான்மையினரின் சிந்தனைகளே மேலோங்கி நிற்பன.

ஆனால் சிந்திக்கும் திறன் கொண்ட, பாகுபாட்டு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத,

மனித உரிமைகள் மீது பற்றுக் கொண்ட, நியாய சிந்தனை பெற்ற பெரும்பான்மைத் தலைவர்கள் ஒரு நாட்டில் இருந்தால் அவர்கள் தாமாகவே சிறுபான்மை இன மக்களைக் காப்பாற்றும் வகையில் அவர்களின் உரித்துக்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றுவார்கள். அதாவது அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு சிறுபான்மையர் பெருவாரியாக வாழும் இடங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே ஆள வழிவகுப்பார்கள். ஆனால் பொதுவாக இன்றைய சிங்கள மக்கட் தலைவர்கள் இன ரீதியான சிந்தனைகளிலேயே ஊறியிருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் சிங்களவர் பற்றிய உண்மை வரலாற்றை அவர்கள் உணராததாலேயே. தமிழ் மக்களின் தொன்மை பற்றி அவர்கள் அறியாததாலேயே. ஆகவே அவர்களின் தலைமைத்துவத்தில் செயற்படுகின்ற ஒற்றையாட்சி தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்காது. ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயக நிலங்கள் பறிபோவன. தற்போது அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கேள்வி :- அதனால்த்தான் சமஷ்டி அரசைத் தமிழ்க் கட்சிகள் கோருகின்றனவா?

பதில் :- நிட்சயமாக! அதிகாரப் பகிர்வுக்கு செயல்வடிவம் கொடுப்பது சமஷ்டி அரச முறையே.

கேள்வி :- ஆனால் உங்கள் கட்சி கூட்டு சமஷ்டியை கோரியுள்ளதே?

பதில் :- ஆம்! கூட்டு சமஷ்டி முறை கூடிய அதிகாரங்களை அலகுகளுக்கு அல்லது பிராந்தியங்களுக்கு வழங்கும். அதாவது கூட்டு சமஷ்டி என்பது தனித்துமான நாடுகள் பலவற்றை நிரந்தரமாக சில காரணங்கள் கருதி ஐக்கியப்படுத்துவதேயாகும். தமிழ்ப் பேசும் பிரதேசங்ககள் 1833 வரை தனித்துவ ஆட்சிகளாகவே இருந்து வந்தன.

சமஷ்டி முறையில் மத்திய அரசின் உள்ளீடு வெகுவாக இருக்கும். ஆனால் கூட்டு சமஷ்டியில் தனி அலகுகள் தம்மைத் தாமே ஆண்டு கொண்டு ஒரு சில காரணங்களுக்காக மட்டுமே மத்தியுடன் ஒத்துழைக்கும் விதத்தில் அமைவன. சமஷ்டி, கூட்டு சமஷ்டி இடையேயான வேற்றுமைகளை கோடிட்டுக் காட்டுவது சிரமம். ஆனால் பொதுவாக மத்திய அரசாங்கமானது கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த அதிகாரங்களையே கூட்டு சமஷ்டியில் பெற்றிருக்கும். நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் மேலும் சில சில்லறை அதிகாரங்கள் போன்றவை மத்தியிடம் இருப்பன. ஒரு விசேட அம்சமாக குறிப்பிடுவதென்றால் மத்திய அரசாங்கத்திற்கு கூட்டு சமஷ்டியின் கீழ் நேரடியாக இறைவரியை தனிக் குடிமக்களிடம் இருந்து பெற முடியாது. பதிலாக அவற்றை பிராந்திய அரசாங்கங்கள் மூலமாகவே பெற வேண்டியிருக்கும். நாட்டின் தனி மனிதர்களை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இருக்காது. தற்போது ஒற்றையாட்சியின் கீழ் எங்கள் வளங்கள் பறி போகின்றன. காணிகள் பறி போகின்றன. மக்கள் வறுமையின் விளிம்பில் நின்று தத்தளிக்கின்றார்கள். ஆனால் தாம் செய்த தவறுகளிற்காக இறைவரிகள் மூலமாக எம்மை வருத்தி வருகின்றனர். கூட்டு சமஷ்டி முறை இவை யாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வரும்.

கேள்வி :- அப்படியானால் மத்திய இராணுவத்தை பிராந்தியங்களில் இருந்து வெளியேற்றலாமா?

பதில் :- கட்டாயமாக! வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால்த் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகின்றது. உள்நாட்டுப் பிராந்திய பாதுகாப்பு கூட்டு சமஷ்டியில் பிராந்தியங்களுக்கே வழங்கப்படும். நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வரும். போலிஸ் உரித்துக்கள், காணி உரித்துக்கள், பிராந்திய உள்நாட்டுப் பாதுகாப்பு அனைத்தும் பிராந்திய அலகுகளுக்கே வழங்கப்படும்.

இன்று படையினர் வடகிழக்கு மாகாணங்களில் போரின் பின்னர் தொடர்ந்து இருப்பதால் பல பாதிப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

  1. எமது வாழ்வாதாரம் தடைப்படுகின்றது. எமது நிலங்களை இராணுவம் பயன்படுத்தி இலாபம் பெறுகின்றார்கள்.
  2. எமது சுதந்திரம் தடைப்படுகின்றது. மக்கள் இராணுவம் முகாம் இட்டிருக்கும் இடங்களினூடாகப் பயணிக்க அஞ்சுகின்றார்கள். சுற்று வட்டார பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சத்தில் வாழ்கின்றார்கள்.
  3. தமிழர் தாயக நிலங்கள் பறிபோவதற்கு படையினரே உறுதுணையாக நிற்கின்றார்கள். பல்லாயிரம் ஏக்கர் நிலங்களைச் சுவீகரித்து உள்ளார்கள்.
  4. திணைக்களங்களுடன் படையினர் சேர்ந்து பிறழ்வான வரலாற்றுக் காரணங்களை முன் வைத்து நிலங்களைக் கையேற்கின்றார்கள்.
  5. புத்த பிக்குகளுடன் படையினர் சேர்ந்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர்.
  6. பௌத்த வணக்கஸ்தலங்களை பௌத்தர்கள் அல்லாத இடங்களில் நிர்மாணிக்க படையினர் உதவி புரிந்து வருகின்றனர்.
  7. படையினர் வடமாகாண மக்களின் நடமாட்டங்கள், எவர் எவருடன் அவர்கள் உள்ள10ரில் தொடர்பு வைத்துள்ளார்கள், மற்றும் அவர்களுக்கு யார் யாருடன் வெளிநாட்டிலும் தொடர்பு இருக்கின்றது என்பவை சம்பந்தமான முழு விபரங்களையும் சேகரிக்கின்றார்கள். இவை உத்தியோகபூர்வ காரணங்களுக்கே என்று நாம் நினைக்கக் கூடும். ஆனால் பணம் பறித்தல், கடத்தல் போன்ற பல காரியங்களுக்கும் இவ்வாறான தரவுகள் பாவிக்கப்படுகின்றன.
  8. இங்குள்ளவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களுடன் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் புலிகள் இயக்கத்துடன் முன்னர் தொடர்புடையவர்கள் என்று கண்டால் உடனே இங்குள்ளவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய படையினர் உதவுகின்றார்கள்.
  9. உள்ள10ர் மக்கள் பலரின் வறுமையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சில நன்மைகளைச் செய்து அவர்களைத் தமது கையாட்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மாற்றுகின்றார்கள்.
  10. இன்று மத்திய அரசாங்கக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளாக வட கிழக்கு மாகாணங்களில் வலம் வருபவர்கள் படையினர் இங்கு வேரூன்றி நிற்கின்றார்கள் என்ற ஒரே ஒரு பலத்தின் நிமித்தமாகவே அவ்வாறு வலம் வருகின்றார்கள். அரச பலம் என்பது இவர்களுக்கு இங்கு முகாம் இட்டிருக்கும் படையினர் மூலமே கிடைக்கின்றது. படையினர் வடகிழக்கில் இருந்து வெளியேறி விட்டால் அரச கட்சிகளின் பிரதிநிதிகளின் இருப்பு கேள்விக்கிடமாகிவிடும்.

அது மட்டுமல்ல. தெற்கிலிருந்து இழுவைப் படகுகள் இங்கு வந்து எமது கடல் வளங்களைச் சூறையாடுவது நின்று விடும். திணைக்களங்கள் எமது மக்களின் தாயக நிலங்களைக் கையேற்பது நின்று விடும். புத்த பிக்குகள் பௌத்த வணக்க ஸ்தலங்களை ஏதேச்சாதிகாரமாக வடகிழக்கில் நிறுவுவது நின்று விடும். வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நின்றுவிடுவன. இதுவரையில் கைப்பற்றப் பட்ட நிலங்கள் திரும்பப் பெற கூட்டு சமஷ்டி முறை வழி வகுக்கும்.

படையினர் தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் இருப்பதால் இன்னும் எத்தனையோ விபரீதங்கள் நடைபெறுகின்றன. இவை யாவற்றையும் முறியடிக்க வேண்டுமானால் கூட்டு சமஷ்டி எமக்கு அவசியம். ஒற்றையாட்சியின் கீழ் ‘இராணுவமே வெளியேறு’ என்றால் அடுத்த நிமிடமே எம்மைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்?-க.வி.விக்னேஸ்வரன் பதில்