தமிழின விடுதலைக் கனவை வெட்டிவீழ்த்தும் கோடாலிக் காம்புகளாக தமிழ்த்தேசிய தரப்புகள்! | இரா.ம.அனுதரன்!

தமிழின விடுதலைக் கனவை வெட்டிவீழ்த்தும் கோடாலிக் காம்புகளாக தமிழ்த்தேசிய தரப்புகள்!

சிங்கள தேசத்தின் ஆட்சி – அதிகார தளங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு போதிலும் தமிழ் மக்களது தலைவிதியைத் தீர்மானிக்கவோ, மாற்றியமைக்கவோ போவதில்லை என்பது கடந்தகால வரலாறு எமக்குத் தீரமானகரமாக உணர்த்தியுள்ள போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய பரப்பில் செயற்பட்டு வரும் தமிழ்த் தரப்பினர் அனைவரும் அதனை வசதியாக புறம்தள்ளிவிட்டுச் செயற்பட்டு வருகின்றமையானது தமிழ் மக்களின் சாபக்கேடாகவே கோட்டா-ரணில் அரசிலும் தொடர்கின்றது.

தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகிய விடுதலைகோரி நிற்கும் தமிழர்களது மூலாதாரக் கோரிக்கையின் அடிப்படையில் 2001ம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள முன்னிறுத்தியதாகவே அளப்பரிய தியாகத்தின் அடித்தளத்தில் வேர் பரப்பி பெரு விருட்சமாக வளர்க்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கியதாக இவ்வாறு பெரு விருட்சமாக வளர்க்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுத மௌனிப்பின் பின்னரான காலத்தில் அதிலிருந்து வழுவி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக தமிழரசு கட்சியின் சுயலாப அரசியலுக்குள் சிக்குப்பட்டுக் கொண்டது.

தலைமை எவ்வழியோ வழித்தோன்றல்களும் அவ்வழியே என்பதனை நிரூபிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையாக இருக்கும் சம்பந்தன் வழியே ஆயுத மௌனிப்பின் பின்னர் ஒட்டகங்களாக தமிழ்த் தேசிய அரசியற் பரப்பிற்குள் உள்நுழைந்தவர்களும் தமிழின விரோதப் பாதையிலேயே செயற்பட்டு வருகின்றமையால் தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதித்துவம் வலுவிழக்கச் செய்யப்பட்டு வருகிறது.

2009 மே-18 இற்கு முன்னரும் பின்னருமாக நடைபெற்றுள்ள தேர்தல்களின் போது வெளிப்படுத்தப்பட்டு வரும் தமிழர்களது முடிவானது தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைத் தீர்க்கமாக உணரமுடியும்.

2001 மற்றும் 2004 இல் தேர்தல் நடைபெற்ற காலகட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தாயகத்தில் நிலைபெற்றிருந்ததும், தமிழர்களின் விடுதலைக் கனவை அரசியல் வெளியில் முன்னெடுத்துச் செல்லும் படையணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் என்பதாலும் வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமது பேராதரவினை வழங்கியிருந்தனர்.

தமிழர்களது விடுதலைக் கனவினை முன்னகர்த்திச் சென்ற விடுதலைப் போராட்டம் உலக நாடுகளின் துணைகொண்டு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதுடன் ஆயுதங்களும் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர் தமிழர்களை தலைமைதாங்கி வழிநடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய கூட்டமைப்பு அடிபணிவு அரசியலிற்குள் முகம் புதைத்து தடம்மாறியது.

இவ்வாறான பின்னணியில் தான் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பானது புதிய கட்சிகள், கூட்டணிகளின் உருவாக்கத்துடன் பிளவுபட்டுப் பலவீனப்பட்டு நிற்கின்றது. இவ்வாறு உருவாகிவரும் புதிய தலைமைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழியே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முகமூடியாக மாட்டிக்கொண்டு செயற்பாட்டளவில் அவற்றை புறம்தள்ளியாதாக பயணப்பட்டு வருவது தமிழினத்தை விடாது துரத்திவரும் சாபமாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று வரலாற்றுப் பட்டறிவை முற்றிலுமாக புறம்தள்ளி சிங்கள ஆட்சியாளர்களுடன் நல்லிணக்க நாடகமாடுவதன் மூலமும், இந்திய, அனைத்துலக தரப்பினருடைய கைப்பாவைகளாக செயற்படுவதன் மூலமும் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுவிடலாம் என்பதாக இவர்கள் அனைவரும் ஏமாற்று அரசியலை முன்னெடுக்கத் தலைப்பட்டுள்ளமையானது அரச ஒத்தோடிகளாக செயற்பட்டு வருபவர்களுடன் இவர்களையும் ஒரே நிலைப்படுத்தியுள்ளது என்பதனை மக்கள் ஓரளவு உணரத்தலைப்பட்டுள்ளனர்.

தந்தை செல்வாவுடன் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் முதல் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வரை சந்தரப்ப சூழ்நிலைகளை திட்டமிட்டு உருவாக்கியே கிழித்தெறியப்பட்ட வரலாறு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையுடன் அழியா சாட்சியா மூச்செறிந்து கிடக்கிறது.

அதே வரலாற்று வழித்தடத்திலேயே ஆயுத மௌனிப்பின் பின்னரான கடந்த 13 ஆண்டுகளும் கடந்து போயுள்ள போதிலும் நல்லிணக்கத்தின் பெயரிலான பேக்காட்டு அரசியலை முன்னெடுப்பதிலும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச தரப்பிடமே தீர்வு உள்ளது போன்றும் சம்பந்தன் தரப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசிய தரப்பினர் செயற்பட்டு வருவது அரசியல் அயோக்கித்தனமன்றி வேறில்லை.

நல்லாட்சியின் பெயரிலான சிங்கள – சர்வதேச கூட்டரசில் இணைந்து புதிய அரசியலமைப்பிற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதாக 2015 – 2019 வரையான 5 ஆண்டுகள் தமிழர்களை ஏமாற்றியவர்கள் இப்போதும் அதே பல்லவியை பாடிவருகின்றனர். புதிய அரசியலமைப்பிற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை தேடுவதாக காட்டிக்கொள்வது, பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளை அல்லது பங்காளி அரசியலை தொடர்வதற்கான தந்திரமேயாகும்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு தமிழர்கள் எதனையும் பெற்றுவிட முடியாது என்பது ஏலவே நிரூபனமாகி பல தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் அதனை முன்வைப்பதானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என்பதுடன் வரலாற்றுத்துரோகமாகவும் அமைகிறது.

இலங்கை நாடாளுமன்ற அரசியலிற்குள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நுழைந்து எதிர்க்கட்சித் தலைவர் பதிவியும் பெற்று நல்லாட்சியை தாங்கிநின்ற போதிலும் நாடாளுமன்ற அரசியல் ஊடாக தமிழர்களுக்கு சிறு துரும்பைத்தன்னும் பெற்றுக்கொடுக்க முடிந்ததா?

முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்கு பின்னரான இன்று வரையான காலகட்டத்தில் எமது உறவுகள் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களது திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளிற்கு முகம் கொடுத்துவரும் இன்னல்களில் எதையாவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியூடாக தடுத்து நிறுத்த முடிந்ததா?

நீதிமன்றத் தடை உத்தரவு இருக்கத்தக்கதாக ஆட்சி-அதிகாரத்தைத் துணையாகக் கொண்டு குருந்தூர் மலையில் தமிழர்களது தொன்மையை அழித்து திட்டமிட்டு பௌத்த விகாரையை கட்டியுள்ள நிலையில் அதனைத் தடுக்க முடியாது நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும் கண்டன உரைகளை நடத்தியதைவிடுத்து என்ன செய்ய முடிந்தது இவர்களால்?

இவ்வாறு தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக தீர்வுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளை செய்வதிலும் பார்க்க மக்கள் பங்கேற்பு அரசியல் மூலம் காத்திரமான முன்னெடுப்புகள் எதனையும் ஆயுத மௌனிப்பின் பின்னரான காலத்தில் எவரும் மேற்கொண்டிருக்கவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின், தமிழ் மக்களை முன்னிறுத்தியதாக மக்கள் பங்கேற்பு அரசியலை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவ்வழியே தமிழின விடுதலையினை முன்னகர்த்த முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் வரதராசப் பெருமாள் மற்றும் பிள்ளையான் வரிசையில் நீங்களும் கையைவிரித்துக்காட்டிவிட்டு பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிடுங்கள்.

அந்த வகையிலாவது வரலாறு உங்களையும் ஞாபகம் வைத்திருக்கும். மாறாக இந்திய – அனைத்துலக – சிங்கள ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டுச் சரணாகதி அடைந்து தமிழினத்தின் விடுதலைக் கனவினை வெட்டிவீழ்த்தும் கோடாலிக் காம்புகளாக மாறிவிடாதீர்கள். தமது தலைமையாக ஏற்றிவைத்த மக்களுக்கு எப்படி இறக்கிவைக்க வேண்டும் என்பதும் தெரியும் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

Tamil News