‘பேரறிவாளன் விடுதலை’ குறித்து தமிழக சட்டத்தரணி ஆதி

பேரறிவாளன் விடுதலை, அடக்கப்பட்ட மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர்  ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு உலகையே  அதிர்ச்சி அடைய வைத்தது. CBI  உடனடியாக தனது விசாரணையை தொடங்கியது.   குற்றவாளிகள் என சந்தேகப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தம் 26 நபர்கள்  ராஜீவ் கொலைவழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இதில் 13 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 13 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள்.

தடா சிறப்பு  நீதிமன்றத்தில் விசாரணை நடந்து அனைவரும் குற்றவாளிகள் எனவும் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பின் பிறகு உடனடியாக பழ. நெடுமாறன் ஒருங்கிணைப்பில் 26 தமிழர் உயிர் காப்பு குழு ஏற்படுத்தி தமிழகம் எங்கும் அரசியல் இயக்கங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்றது. இக்குழுவில் கம்யூனிஸ்ட்கள் பெரியாரிஸ்டுகள் தமிழ் தேசிய வாதிகள் மாந்த உரிமையாளர்கள் என பல்வேறு அரசியல் இயக்கங்கள் பங்களிப்பு செய்தனர்.

ராஜீவ் கொலை வழக்கு குறித்து பொது வெளியே பேச முடியாத நிலை தான் அப்போது தமிழகத்தில் இருந்தது. அத்தகைய நிலைமையில் பல்வேறு இயக்கங்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அரசியல் இயக்கங்கள் நடத்தப்பபட்டன. தமிழகம் முழுவதும் 26 தமிழர்களின் வழக்கு நடத்த ஆகும் செலவுகளுக்கு தமிழக மக்களிடமிருந்து பெரும் தொகை  நிதி  வசூல் செய்யப்பட்டது.

தடா நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இரத்து செய்து 19 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

அன்றிலிருந்து இன்று வரையிலும் ஏழுவரை விடுவிக்கும் போராட்டம் தொடர்கிறது. அதில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். மீதி அறுவர் விடுதலை எப்போது வேண்டுமானாலும் விடுதலை  செய்யப்படுவார்கள். அறுவரும் விடுதலை செய்யப்படும் வரை தமிழ் மக்களும் இயக்கங்களும் ஓயப் போவதில்லை.

எழுவர் விடுதவையில் சட்டப் போராட்டத்திற்கு அஸ்திவாரமாக இருந்தது அரசியல் இயக்கங்களின் போராட்டமே அன்றி வேற்றல்ல! பேச முடியா சூழலில் பேசி எழுவர் விடுதலைக்கான மக்களின் மன நிலையை மாற்றினர். தமிழ் மக்களின் மனநிலை தான்  நீதி மன்றத்தில் சட்டப்  போராட்டமாக நடை பெற்றது.

தமிழகத்தின்  ஆட்சியாளர்கள் எழுவர் விடுதலையை தவிர்க்க இயலாமல் பேசும் நிலைக்கும் அரசியல் இயக்கங்களின் தொடர் போராட்டம் தான் காரணம் !

எழுவர் விடுதலைப் போராட்டத்தின் வரலாறு பல பரிமானங்களை கொண்டது. அப் பரிமாணங்களில் முகாமையான பரிமாணம் அரசியல் இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் தான்!

Tamil News