Home செய்திகள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபையிலும் சிறப்புரிமை இல்லையா? கஜேந்திரன் கேள்வி

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபையிலும் சிறப்புரிமை இல்லையா? கஜேந்திரன் கேள்வி

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
பாராளுமன்றத்திலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமை இல்லையா என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேள்வியெழுப்பினார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவது தமிழர்களின் மரபாக மாறியுள்ளது. 15ஆம் திகதி முதல், கொரேனா காரணமாக நான் தனிநபராக அந்த அஞ்சலியை செய்தேன். இறந்தவர்களை நினைவு கூர அனைவருக்கும் அனுமதிக்கப்படும் என உலக நாடுகளுக்கு இந்த அரசு சொல்கிறது. அவர்கள் விடுதலைப் புலிகள் என்றாலும், விடுதலைப் புலிகளின் அடையாளங்கள் இல்லாமல் நினைவு கூரலாம் என்கிறார்கள்.

நான் நினைவேந்தல் நடத்தியபோது, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் வந்து என்னை தடுத்தனர். நீதிமன்ற உத்தரவைக் கேட்டேன். அவர்களிடம் இல்லை. உத்தரவுக்காக அரை மணித்தியாலம் காத்திருந்தேன். நான் சட்டத்தின்படி,அஞ்சலி செலுத்த முற்பட்டபோது, பொலிஸார் அநாகரிகமாக நடந்து, தீபத்தை காலால் மிதித்தனர். என்னை கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

நினைவேந்தல் நடத்தியதற்காகத்தான் என்னை கைது செய்தனர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் என்னிடம் வாக்குமூலம் பெற ஆரம்பித்தபோது, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக என் மீது சோடிக்கப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த கைது எனது சிறப்புரிமையை மீறும் செயல் எனச் சிறப்புரிமை பிரேரணை ஒன்றை பாராளுமன்ற செயலாளர் ஊடாக சமர்ப்பித்திருந்தேன். எனினும், அது மறுக்கப்பட்டது. இந்த நாட்டில் தமிழ் மக்களும், பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களும் புறக்கணிக்கப்படுகிறார்களா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் அவர்களுக்கு சிறப்புரிமையும் இல்லையா?

கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. ஆனால் வவுனியாவின் சில சிங்கள பகுதிகளில் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இது இனவாத செயல்.”


Exit mobile version