மட்டக்களப்பில் தொடர்ந்து அபகரிப்புக்குள்ளாகும் தமிழரின் நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை, திட்டமிட்ட வகையில் பெரும்பான்மை இனத்தவர்கள் அபகரிப்பு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து  வருவதாகவும், அதே நேரம் இராணுவத்தினரும் அதே நடைமுறையைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வாகனேரி, கிரான், ஏறாவூர்ப்பற்று ஆகிய பகுதிகளில் உள்ள அரச காணிகளையும் திட்டமிட்ட வகையில் அபகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் நீண்ட காலமாக பாதுகாத்து வந்த குறித்த காணிகளை தென்னி லங்கையில் இருந்து வரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், அரச நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த செயற்பாடுகளை முன்னெடுப் பதாகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் நேற்று முன்தினம்  அம்பாறை, பொலநறுவை பகுதிகளிலிருந்து வந்தவர்களினால் காடுகள் அழிக்கப்பட்டு, காணிகள் அபகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனே நீதிமன்றத் தடை உள்ள நிலையிலும், காணிகள் அபகரிக்கும் செயற் பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ் சாட்டப்பட்டு வரும் நிலையில், நேற்றும்  காணிகள் அபகரிப்பு  நடைபெற்றுள்ளன.

இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி, ஐயங்கேணி, சத்துருக்கொண்டான் போன்ற இடங்களிலும் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளில் பெரும்பான்மையினர் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்களின் பெயரில் வருவோர் அதிகாரிகளின் ஆதரவுடன் பெருமளவான காணிகளை அபகரிக்கும் நிலை தொடர்வதாக அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று வாகரைப் பிரதேச செயலாளாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் காணிகள் அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் காடு வளர்ப்புத் திட்டம் ஊடாக பாதுகாக்கப்பட்ட இயற்கை வளம் நிறைந்த பகுதிகளை, இன்று தென்னிலங்கையைச் சேர்ந்வர்களால், இராணுவப் பின்னணியுடன் அபகரிக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றது.

எனினும் இதனை தட்டிக் கேட்பதற்கோ அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ முடியாத நிலையில் அரச ஆதரவு அரசியல்வாதிகள் உள்ளதால், தமிழ் தேசியத்தின் பால் உள்ள அரசியல்வாதிகள் மட்டக்களப்பில் தானா உள்ளார்கள் என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலையும் உள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021