தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி -அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (இறுதிப் பகுதி)-குருசாமி அரசேந்திரன்

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழிமொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழின விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி என்ற கருப்பொருளில் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் இறுதிப் பகுதி

கேள்வி?
அண்மையில் கீழடி பற்றிய ஆய்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த கீழடி பற்றிய ஆய்வுகள் உங்கள் பார்வையில் எவ்வாறாக இருக்கின்றது?

பதில்!
தமிழைப் போலவே ஆழமான சிக்கலுக்குரிய வினா இது. நான் தமிழீழத்திற்கு இரண்டு முறை சென்று வந்தேன். 1989ஆம் ஆண்டு கொழும்போடு  வந்து விட்டேன்.  பிறகு 2003 இல் தான் தாயகத்திற்கு சென்றேன். அதன் பிறகு ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாயத்திற்கு  சென்று வந்தேன். அங்கு பார்த்தால், தமிழர் தாயகத்தை  சிங்களமயமாக்குவதற்கு  தொல்லியல் என்ற பெயரிலேயே ஆயிரக்கணக்கான காணிகளை வளைத்து   ஆய்வு செய்வது என்ற பெயரில்   தமிழர் பகுதிகளை சூறையாடி இருப்பதை எல்லாம் கண்ணாலே  பார்த்தேன்.  தமிழ்ப் பகுதியை தமிழ்ப் பகுதி இல்லாமல் ஆக்க வேண்டும். அங்கே புத்தர் இருந்தார். அது இருந்தது. இது இருந்தது என்று சொல்லி ஒரு பொய்யான பரப்புரையை சிங்கள அரசு மேற்கொண்டுள்ளது.

சிங்கள அரசு தமிழையும், தமிழினத்தையும் எவ்வாறு வெளிவர விடாமல், அல்லது அந்த நிலத்தை எவ்வாறு சுவடில்லாமல் அழிக்க நினைக்கின்றதோ. அதே தான் இங்கேயும் கீழடியிலும் நடைபெறுகின்றது. இந்திய நடுவண் அரசு தான் முதலில் ஆய்வு செய்தார்கள்.  அமர்நாத் இராமகிருஸ்ணன் என்பவர் தான் ஆய்வு செய்தார். அவர் எனது நண்பர். 2000ஆண்டுகளுக்கு முன்பு 2500 ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு நகர நாகரிகம் இருந்தது.  கிட்டத்தட்ட மொஹஞ்சதாரோ, ஹரப்பா போல தென்னகத்திலே ஒரே ஒரு பெரிய நகர நகரிகம் உருவாகி  இருந்தது என்பதை அவர் வெளிக்கொணர்ந்த பொழுது, நடுவண் அரசு மூடி மறைப்பதற்கு எல்லா வேலைகளையும்  செய்தார்கள்.  ஆனால் தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து, போராடிய பொழுது, தமிழ்நாடு அரசு அதை அகழாய்வு  செய்தது,  தோண்டத் தோண்ட பூதம் வெளிப்படும் என்பார்கள்.  கிணறு வெட்ட பூதம் என்பார்கள். ஆனால் கிணறு வெட்ட தமிழன் வரலாறு வெளிப்படுகிறது.  அங்கே நகர நாகரிகம் இருந்தது.

உலக நாகரிகங்கள் தொடர்பு கொண்டிருந்ததற்கான தடயங்கள்  கிடைக்கின்றன. தொழிற்சாலையிலிருந்த சுவடு கிடைக்கிறது. சுட்டமண் எப்படிப் பயன்படுத்தினார்கள்.  இன்று கூட பார்த்தேன் முத்திரைகள் எல்லாம் கிடைத்திருக்கிறது.  என்று ஆய்வு செய்கிறவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்  தெற்கே தோன்றிய தமிழ்தான் சிந்துவெளியாக வடக்கே பரவியது. இவர் சிந்துவெளி ஆய்வு செய்கின்றவர்களாக சொல்லிக் கொள்கிறவர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்களாக சொல்லிக்கொள்கிறவர்கள், படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள், தவறாக தலைகீழாக சிந்து வெளியில் இருந்து தமிழர்கள் தெற்கு நோக்கி வந்தார்கள் என்று சொல்கிறார்கள்.

இது  வரலாற்றில் மாபெரும் பிழை.  தெற்கே நாகரிகம் தோன்றியது. வடக்கே சென்று வாழ்ந்தார்கள்.  அது தான் நைல்நதி நாகரிகமாக மாறியது. பின்னர் எகிப்து நாகரிகமாக, ஐரோப்பிய நாகரிகமாக மாறியது. ஆரிய இந்திய நாடாக வட இந்தியா மாறியது. அதேபோல கீழை இந்து ஐரோப்பிய மொழி தான் சிங்களம் என்பது, அவர்கள் ஒட்டுமொத்த இலங்கையில் வந்து விட்டது. தமிழர்கள் பௌத்தம் படித்தார்கள். அதற்காக பாளி படித்தார்கள். பின்னர் பாளி, தமிழ் கலந்து தான் சிங்களம் வந்தது.

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி1

தமிழ், தெலுங்கு, கன்னடத்திற்கு என்ன உறவோ அதே போல தான் தமிழுக்கும் சிங்களத்திற்கும் உள்ள உறவு. வரலாற்றில் எல்லோருமே நம்மிடமிருந்து பிரிந்தவர்கள். ஆனால் நமக்கு எதிரானவர்களாகப் போய்விட்டார்கள்.

கீழடி ஆய்வை போற்றுவதற்கு இந்திய அரசு அஞ்சுகிறது. தமிழன் வரலாறு ஓங்கி வரக்கூடாது என நினைக்கிறது. அங்கேயும் சிங்கள அரசு அதைத் தான் செய்கிறது. அதையும் தாண்டித் தான் தமிழ்நாட்டில் அகழாய்வு நடக்கின்றது. எதிர்காலத்தில் அது இன்னும் பெரிதாக வளரும் என்று தான் நம்புகின்றோம். எனவே புரிதல் இல்லாத காரணம் தான் அவர்கள் நம்மை அடக்குவதும், இந்தப் புரிதலை நாம் உருவாக்க வேண்டும். இந்தப் புரிதலை உலகத்திற்கு நாம் தெரிவிக்க வேண்டும். ஆனால் உலகம் எல்லா அடக்குமுறைகளையும் தாண்டி இந்த இனத்தின் வரலாற்றை, பெருமையை அறிந்து கொண்டு தான் இருக்கிறது.

கேள்வி?
நீங்கள் எங்கள் இளைய சமுதாயத்திற்கு, எங்கள் மக்களுக்கு சொல்ல விரும்புகின்ற செய்தி என்னவாக இருக்கும்.

பதில்!
பெரிய ஆளாக வந்த ஒருவர் தான் அவர் தான் நமக்கு எல்லாம் இந்த உலகத் தமிழினத்தை மீட்டெடுக்கின்ற மீட்பராக வரலாற்றிலே தோன்றினார். அதற்குப் பின்னர் தான் உலகத்தில் தமிழ் என்ற மொழிக்கு ஒரு அடையாளம் தெரிந்தது. தமிழன் என்பவன் யார் என்பதை இந்த உலகம் தெரிந்தது. உலகம் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்தியா என்ன சொல்கிறதோ அதைத் தான் இந்தியா சார்ந்திருக்கின்ற உலகம் கேட்கும். நாம் ஆண்ட இனம் தான். வரலாற்றில் வாழ்ந்த இனம் தான். ஆனால் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் நாம் வேத மாத பார்ப்பனிய ஆட்சியில் சிக்கிக் கொண்டோம். இலங்கையில் சிங்களவனுக்குள் சிக்கிக் கொண்டோம். அதனால் நம் பெருமையை வெளியில் கொண்டு வருவதற்கு, உலகத்திற்கு உண்மை தெரிந்தாலும்கூட இந்தியாவைத் தாண்டி எதையும் செய்துவிட முடியாது.

அதனால் தான் 2009 ஆண்டு இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து நம்மை அழித்தொழித்தார்கள். ஆனால் இன்று இந்தியாவும், ஐரோப்பாவும், அமெரிக்காவும் சீனாவினால் அச்சப்படுகின்ற நிலைக்கு, முதல் வல்லரசாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, ஆசியாவிலேயே முதல் அரசாகவும், அதன் பிறகு அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு பேரரசாக உலக வல்லரசாக சீனாவின் நெடுந்தொலைவு பயணத்தைப் பார்த்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், அவுஸ்திரேலியாவும், யப்பானும் வேறு வழியில்லாமல் இந்தியாவும் சேர்ந்து கொண்டு, தங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் இந்த தென்கிழக்கு ஆசியாவில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்குரிய இடமாக வடக்குக் கிழக்காகிய தமிழர் தாயகத்தை தங்களுக்குரியதாக ஆக்கிக் கொள்வதற்கு சீனாவைத் தவிர்ந்த ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், இந்தியாவும் திட்டமிட்டும் நகர்வைப் பார்க்கிறோம்.

தலைவர் அழகாக சொன்னார்  நியாயம், தர்மம், அறம் என்று இந்த உலகநாடுகள் எவற்றிற்கும் கிடையாது. அரசியல் ஆதாய, வணிக நலன்கள் தான் இவற்றிற்கு முக்கியம். எனவே நாம் அடங்கியிருக்காது உரிமைக்காகப் போராடுவோம். உயிர் பெரியது. அதனிலும் பெரியது விடுதலை என்பதற்கமைய  போராடுவோம். எப்படியாவது எப்போதாவது ஒரு மறுசுற்றில் நமக்கு நாடு கிடைக்கும்.  நம்மை உலகம் ஏற்றுக் கொள்ளும்.

எந்த ஆதரவும் இல்லாத தேசிய இனம் நாம். அதிகமாக இரத்தம் சிந்தி, அதிகமாக உயிர்ப்பலி கொடுத்து, நமக்கான நியாயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லி, உலகத்தின் நெஞ்சத்தில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய  இரக்கத்தைப் பெற்று நாம் தாயகத்தைச் சமைக்க வேண்டும் என்று தலைவர் சொன்னார். அது உலக அரசியல் சூழ்நிலை இன்றைக்கு நம்மை போட்டி போட்டுக் கொண்டு அழித்தவர்கள் இன்று நம்மைப்  காப்பதற்கு வருகின்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. காரணம் அவர்களுக்கு நாம் தேவையானவர்களாக, நம் மண் திருகோணமலை தேவைாயனதாக உள்ளது.

எனவே வரலாற்றில் ஒரு வெளிச்சம் தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் 1995இல் ஐந்து இலட்சம் மக்களும் வெளியேறிய பொழுது, இந்திய அரசு சந்திரிகா அம்மையாருக்கு பெருமளவில் உதவி செய்தது. பெரும் படையைத் திரட்டுவோம் என்ற தலைவரின் தொலைநோக்கு அவருக்குத் தெரிந்திருந்தது. பீனிக்ஸ் பறவை போல் ஒரு பேரழிவிலிருந்து நாம் மீண்டு எழுவோம். எப்பொழுதும் பெரும் அழிவிற்குப் பின்னர் தான் ஒரு வளர்ச்சி வரும். மடிந்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கனவுகளும் வீண்போகாது.

இலங்கையின் பாதி சீனனுக்குச் சொந்தம், பாதி மேற்குலகு, ஐரோப்பாவிற்கு, இந்தியாவிற்கு  சொந்தம் தமிழர் தாயகம்.

இறுதியில் எங்களை அழித்து சிங்களவன் சாதித்துக் கொண்டது என்ன என்பது வரலாற்றில் எழுதப்படும். சிங்கள ஆட்சியாளர்களை சிங்கள மக்களே விரட்டி விரட்டி அடிப்பார்கள். தற்கொலை செய்து கொள்வார்கள், ஓடி ஒளிவார்கள். இது வரலாற்றில் நடக்கும். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நம் தமிழ் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

என்ன வருத்தம் எனில், இவ்வளவு அழிவிற்கும் மத்தியில், இவ்வளவு ஈகத்திற்கும் மத்தியில் அங்கே இருந்து பார்த்த நம் தலைவர்கள் இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து, ஒன்றுபட்டு, நடக்கின்ற இந்த அரசியல் உலகில், நமது உரிமையை இயன்றளவிற்குப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு கட்டத்தில் அவர்கள் இல்லாமல், இன்னும் அவர்கள் மற்ற நாட்டு அரசியல்வாதிகளைப் போல தன்னலத்துடன் இருப்பது தான் வேதனைக்குரியது. ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

அவர்கள் எச்சரிப்பார்கள். அரசியல் தலைவர்களும்  முன்னையதை விட மோசமாக இல்லாது  மாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த மக்களும் தெளிவாக இருக்கிறார்கள். விழிப்பாக இருக்கிறார்கள். எனவே நம்பிக்கையாகத் தான் நான் இருக்கிறேன். எல்லாத் துன்பைத்தையும் தாங்கி நாம் கண்ணீர் விட்டாலும் நம்பிக்கை எப்போதும் குறைவதில்லை. நமக்கு அரசு கிடைக்கும், நமக்கு ஆட்சி கிடைக்கும், நமக்கு அண்ணனும் கிடைப்பார். அது தான் என்னுடைய கருத்து.

தலைவர் தெளிவாக சொன்னார் உலகத்தில் எந்த ஆதரவும் இல்லாத அனாதை சிறுபான்மை தேசியஇனம் என்று சொன்னார். அதனால் தான் இவ்வாறு துன்பத்தை அனுபவிக்கின்றோம். 12 கோடி தமிழ் மக்கள் உலகெங்கும் இருந்தாலும் ஒரு அரசு இல்லாதது தான் இவ்வளவு துன்பத்திற்கும் காரணம். மாண்ட வீரர் கனவு பலிக்கும். மண்ணில் நமது பெயரும் நிலைக்கும். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் உலகில் பேரரசு நடத்திய இனம் என்ற வரலாற்றை நாம் கட்டாயம் பெறுவோம்.

முதல் பகுதி