“உலகின் தொன்மை மொழிகளில், செம்மொழிகளில் ஒன்று ‘தமிழ்’ மொழி” | இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன்

உலகின் தொன்மை மொழி

உலகின் தொன்மை மொழி ‘தமிழ்’மொழி

செம்மொழி மாநாடு நடைபெற்று  12 ஆண்டுகள்  நிறைவுற்ற நிலையில், இது தொடர்பான செயற்பாடுகள் குறித்து   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் வழங்கிய பிரத்தியேக செவ்வி….

கேள்வி:
செம்மொழி மாநாட்டின் 12வது ஆண்டு நிறைவு நாளாகிய 23 யூன் வரும் இவ்வாரத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராகிய உங்களிடம் உலகத் தமிழர்களுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக நீங்கள் பணிப்பொறுப்பேற்றதன் பின்னரான செயற்பாடுகளை எடுத்துரைக்குமாறு பணிவன்பாக வேண்டுகிறோம்.

பதில்:
தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழர்களின் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது. இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளைப் பெற்று வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாகச் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான்.

உலகின் தொன்மை மொழிஇந்த அறிவிப்பிற்குப் பின்னர் இந்தியக் கல்வி அமைச்சகத்தின் மொழிப்பிரிவின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிலையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) தொடங்கப்பட்டது.

செம்மொழி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இந் நிறுவனத்திற்கென நிரந்த இயக்குநர் நியமிக்கப்படாமலேயே கூடுதல் பொறுப்பு என்ற அளவில் இயக்குநர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் 2020 ஜூன் மாதம் 15 அன்று நான் முழுநேர இயக்குநராகப் பொறுப்பேற்றேன். நான் இயக்குநராகப் பொறுப்பேற்ற பின்னர் உலகம் முழுதும் செவ்வியல் இலக்கியத்தின் சிறப்புகளைக் கொண்டு சேர்க்கும் வகையிலான

    1. தொல்காப்பிய மொழிபெயர்ப்புத் திட்டம்

    2. செவ்விலக்கிய மொழிபெயர்ப்புத் திட்டம்

    3. மணிமேகலை மொழிபெயர்ப்புத் திட்டம்

    4. திருக்குறள் மொழிபெயர்ப்புத் திட்டம்
போன்ற முக்கியமான மொழிபெயர்ப்புத் திட்டங்கள் பல தொடங்கப்பட்டன.

மாதத்திற்குக் குறைந்தது ஐந்து நூல்களையேனும் வெளியிடுதல் எனும் நோக்கத்தைக் கொண்டு பல்வேறு தமிழியல் சார்ந்த ஆய்வு நூல்களை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச ஆய்வு இதழ் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. செவ்விலக்கியச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் 25க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழியல் மாணவர்களுக்கான உதவித் தொகைத் திட்டம், இணையவழிச் செம்மொழித் தமிழ்க் கல்வித் திட்டம், செம்மொழிப் பல்லூடகத் திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கேள்வி:
இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது போல ஐக்கிய நாடுகள் சபையையும் தமிழை உலகச் செம்மொழியாக அறிவிக்க என்ன செய்ய வேண்டும்.

பதில்:
ஐக்கிய நாடுகள் சபை உலகத்திலுள்ள மொழிகளுள் பாரம்பரியம் மிக்க மொழிகளாக ஏழு மொழிகளை அறிவித்தது. அவற்றுள்  தமிழ்மொழி  இடம்பெற்றுள்ளதை பெருமையாகக் கருத வேண்டும். இந்திய மொழிகளில்  ‘பன்னாட்டு மொழி’ என்ற தகுதிப்பாடு தமிழுக்கு   உண்டென்பதும் சிறப்புக்குரியதாகும்.

தமிழ்மொழி சிறந்த இலக்கியப் பரப்பும் இலக்கண வரம்பும் கொண்டு விளங்குகின்றது.  பல இலக்கண நூலாசிரியர்களையும், இலக்கியப் படைப்பாளர்களையும் பெற்றுள்ள தமிழ் மொழியினை உலக அரங்கில் கொண்டு செல்ல ஐ.நா. சபையின் துணை பெரிதும் துணைசெய்யும்.

கேள்வி:
2013இல் இலண்டனில் தனிநாயக அடிகளின் பிறப்பின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆசிரியர் சூ.யோ. பற்றிமாகரன் இணைப்பாளராக இருந்து நடாத்திய தனிநாயக அடிகளின் கனவான தமிழியல் மாநாட்டுக்கு தமிழக ஈழ மலேசிய தமிழ்த்துறைகளினதும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் செம்மொழி மத்திய நிறுவன தமிழ்ப் பேராசியர்களையும் துறைத்தலைவர்களையும் அழைத்து வந்து தமிழ்த்துறைகளுக்கு இடை ஒருங்கிணைந்த செயற்பாட்டைத் தொடங்கி வைத்த பெருமைக்குரிய நீங்கள் உலகமொழியாகத் தமிழ் மேலும் வளம்பெற என்ன ஆலோசனைகள் கூறுகின்றீர்கள்?

பதில்:
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘யாதானும் நாடாமல் ஊராமல்’ என்னும் சங்கப் புலவர்களின் பாடலடிகள் உலகப் பொதுநோக்கை வெளிப்படுத்துகின்றன.

மொழி ஆய்வாளர்களின் கருத்தின்படி வழக்கிலுள்ள உலக மொழிகளில் அதிக சொற்களைக் கொண்ட மொழியாக முதலிடம் வகிப்பது தமிழ் மொழியாகும். தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உலகின் ஐந்து கண்டங்களிலும் வாழ்கின்றனர். தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளில் மூன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிலுள்ளமொழி என்ற பெருமை தமிழ்மொழிக்கு உண்டு.

இலங்கை, இந்தியா, மியன்மார், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், கம்போடியா, இந்தோனேஷியா என்று நாடுகள் விரிவடைகின்றன. அதற்கப்பால் பிஜி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா என்று கிழக்கிலும், மேற்கே மொறிசியஸ், தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து, ஒல்லாந்து, இத்தாலி, கனடா, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டிஷ், கயானா என்று உலகளாவிய அளவில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வாழும் நாடுகளின் பட்டியல் பரந்து விரிகின்றது.

பல நாடுகள் தமிழ்மொழிக் கல்வியில் அக்கறை செலுத்துவது உலக அரங்கில் தமிழ்மொழி பெற்றுள்ள செல்வாக்கைக் காட்டுவதாக உள்ளன. இவற்றை மேலும் வளர்த்தெடுக்க நாமெல்லாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துணையுடன் உலக மொழியாகத் தமிழ் மொழியை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசின் துணையுடன் மேற்கொண்டால் இந்த முயற்சி விரைந்து வெற்றியடையும்.

கேள்வி:
அந்தத் தமிழியல் மாநாட்டின் போது ஆசிரியர் பற்றிமாகரன் உங்களை ஓக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குவது தொடர்பாக ஒழுங்கு செய்த அமர்வில் நீங்கள் முக்கிய பணியாற்றியவர் என்ற வரலாற்றுப் பெருமை உடைய நீங்கள் இன்று அந்தத் திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் எனக் கூறுங்களேன்.

பதில்:
உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருதல்; தமிழின், தமிழரின் சிறப்புகளைப் பரப்புதல், மேம்படுத்துதல் முதலான நோக்கங்களுக்காக வெளிநாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும். தமிழ் மொழியை, தமிழ் அறிவுத் தொகுதிகளை உலக மக்களோடு பகிர்தல், புலம்பெயர் தமிழ் மாணவர்கள் தமிழைக் கற்க உதவுதல், தமிழியல் தொடர்பான உயர் ஆய்வினை மேற்கொள்ளுதல் முதலான பணிகள் தமிழ் இருக்கைகள் மூலமாக மேற்கொள்ளப்படும். அதற்குரிய பணிகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்படும்.
உலகின் தொன்மை மொழிகளில், செம்மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. ஆதிமொழியாகிய தமிழ்மொழி, உலக மொழிகளில் ஒன்றிப் பிணைந்திருக்கிறது என்பதை அண்மைக்கால மொழியியல் ஆய்வுகள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் தொன்மைக்காலம் தொட்டே தமிழர்கள் உலகெங்கும் பரவிவாழ்ந்து வந்துள்ளதை சான்றுகளுடன் அறியமுடிகிறது.

Tamil News