அரசியல் தீர்வு குறித்து 2மாதங்களின் பின்னர் பேச்சு – கோட்டாவுடனானா சந்திப்பில் கூட்டமைப்பு இணக்கம்

2மாதங்களின் பின்னர் பேச்சு

அரசியல் தீர்வு குறித்து 2மாதங்களின் பின்னர் பேச்சு நடத்த இன்று கோட்டாவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. இலங்கை ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பில் அரசியல் தீர்வு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே குறித்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்துள்ளது. அது இப்போது மொழிபெயர்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது வந்ததும் அதன் அடிப்படையில் அரசியல் தீர்வு குறித்து பேச்சு நடத்தலாம் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டார்.

அந்த மொழிபெயர்ப்புடன் அந்த யோசனை வெளிவருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று சம்பந்தன் கேட்டார். இரண்டு மாதங்கள் என்று பதில் அளிக்கப்பட்டது.

அப்படியானால், அரசியல் தீர்வு விடயத்தை இரண்டு மாதம் கழித்துப் பேசலாம். அதற்கு முன்னர் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம். அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னர் அதில் இருந்து அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்று இரண்டு தரப்பினரும் இணக்கம் கண்டனர்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், தவராசா கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ இச்சந்திப்பை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.