ஆப்கானில் தலிபான் ஆதிக்கம் -அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற குழந்தைகள் 

தலிபான்

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலிபான் எனும் கடும்போக்குவாத அமைப்பின் வசம் சென்றது முதல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் வேலைக்குச் செல்ல பல்வேறு விதமான தடைகளை விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சூழலில், பெற்றோர்களை இழந்த 10 ஆப்கான் குழந்தைகள் ஆப்கான்-அவுஸ்திரேலியரான மக்பூபா ராவி உதவியுடன் அந்த அமைப்பின் கொடூர பிடியிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையிலான மலைப்பிரதேசங்கள் நிரம்பிய எல்லைப் பகுதியை கடந்து  பாகிஸ்தானுக்குள் சென்ற குழந்தைகள், காப்பக பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 17 பேர் துபாய் சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கின்றனர்.

“தலிபானின் அச்சுறுத்தலில் இருந்து தப்பியது குறித்து குழந்தைகள் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதே சமயம், தங்களைப் போலவே பெற்றோர்களை இழந்த தனது நண்பர்கள், சகோதர, சகோதரிகள் ஆப்கானில் சிக்கியிருப்பது பற்றி அவர்கள் கவலையாக உள்ளனர்,” என குழந்தைகள் காப்பக பணியாளர் காலித் தெரிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் பனிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு உள்ள 1.4 கோடி மக்கள் போதிய உணவின்றி தவிக்கும் சூழல் உள்ளதை உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. அதாவது 5 சதவீத ஆப்கான் குடும்பங்கள் மட்டுமே போதுமான உணவைக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கணக்குப்படி, 10 லட்சம் ஆப்கான் குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலைமை உள்ளதாகவும் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021