Tamil News
Home செய்திகள் பாலித தெவரப்பெருமவின் மரணத்தில் சந்தேகம் – இரு பொலிஸ் குழுக்கள் விசாரணை

பாலித தெவரப்பெருமவின் மரணத்தில் சந்தேகம் – இரு பொலிஸ் குழுக்கள் விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்துகம பொலிஸார் மற்றும் களுத்துறை விசேட புலனாய்வுப் பிரிவினர் பாலித தெவரப்பெருமவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. பன்றிகளைக் கொல்வதற்காக வேறொருவரால் இழுக்கப்பட்ட மின்சார கம்பிகள் மரணத்திற்கு காரணமா என்பது பொலிஸ் குழுக்களின் கேள்வியாக உள்ளது.

இதற்கு முன்னரும் இந்த நிலத்தில் சட்டவிரோதமாக பன்றிகளை கொல்லும் வகையில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த காணியை சுற்றி பாதுகாப்பு வேலி இல்லாததால் எவரும் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது, மின்னலுடன் கூடிய காலநிலை நிலவியதால், பாலித தெவரப்பெரும மின்கம்பிகள் தொடர்பான ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், உடல் உறுப்புகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்குபின் நேற்று முன்தினம் பகல் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகளுக்காக உடல் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அந்தத் தருணத்தில் இருந்து தற்போது வரை பெருமளவிலான மக்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளன.

Exit mobile version