அரசை விமர்சித்தமையால்தான் சுசில் பிரேமஜயந்த பதவிநீக்கம்! அமைச்சர் ஜோன்ஸ்டன் விளக்கம்

சுசில் பிரேமஜயந்த பதவிநீக்கம்

அரசுக்குள் உள்ள விடயங்கள் அரசுக்குள்ளே பேசப்பட வேண்டும் எனவும், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதனை மீறியதால் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு ஆளும் தரப்பு அனுமதி வழங்கியுள்ளது நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவிநீக்கம் செய்யப்பட்டார். அரசு மற்றும் அரசின் திட்டம் போன்ற கொள்கைகளை அவர் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் அரசின் கொள்கைகளை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது. அந்தக் கொள்கைகளில் தவறு இருந்தால், அதைப் பற்றி பேச இடங்கள் உள்ளன.

அமைச்சரவையில் பேசலாம். மேலும், இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் அதைப் பற்றி பேசலாம். அவர்கள் ஒரு அணிக்காக விளையாடினால், அந்த அணிக்குள் பேசவேண்டும். அவர்கள் வெளியில் பேசக்கூடாது.

மூத்த அமைச்சர்கள் என்ற முறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும் மற்றும் உள்ளே பேச வேண்டும். ஜனாதிபதி சரியான முடிவை எடுத்துள்ளார். இது முன்னரே எடுத்திருக்க வேண்டிய முடிவு.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை புரிந்து கொள்ளாமல் அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு ஏற்புடையதல்ல. அம்பலமான அரசியலை அமைச்சரவையில் சேர்க்க முடியாது. அமைச்சரவைக்குள் எதனையும் பேசி தீர்த்துக்கொள்ள ஜனாதிபதி முழுமையான சுதந்திரம் வழங்கியுள்ளார்.

மேலும் குழு கூட்டங்களில் பேசக்கூடிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கும் போது பேச முடியும். ஆனால் அதை விமர்சிப்பது தவறு. ஜனாதிபதியை நம்பி இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும்.

எமது அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் விடயங்கள் வெளியில் பேசப்படுவதில்லை. இது எங்களில் யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல என்றார்.

Tamil News