Tamil News
Home செய்திகள் மலையக மக்கள் பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்பட்டால் ஜனாதிபதிக்கு ஆதரவு-இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்பட்டால் ஜனாதிபதிக்கு ஆதரவு-இராதாகிருஷ்ணன்

மலையக மக்களின் வீடு, காணி, சம்பளம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாரென வேலுசாமி இராதாகிருஷ்ணன்  பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் எதிரானவர்களல்ல. அவரது சிறந்த வேலைத் திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார். எனினும் அவர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கமத்தொழில் அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

2021 மே 06 ஆம் திகதி இரசாயன உரத்திற்கு தடை செய்து வெளியிடப்பட்ட அமைச்சரவைப்பத்திரத்தால், நாட்டுக்கு இடி விழுந்ததென்றே கூற வேண்டும்.

காலில், முள் குத்தினால் அதனை எடுத்தெறிய வேண்டும். அதேபோன்று தவறு நடக்கும் போது அதை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்றுதான், நீண்ட காலமாக நாட்டில் தொடரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். இது, வரவேற்கக் கூடிய விடயம். எனினும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுடனேயே மலையக மக்கள் வாழ்கின்றனர். தற்போது அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கான வசதிகளும் இல்லாது போயுள்ளது.

நெல் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் உரம் மற்றும் கிருமி நாசினிகள் மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதனால்,பெரும்பாலான மக்கள் தற்போது விவசாய நடவடிக்கைகளை கைவிடும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் எவ்வாறு மரக்கறி பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும்?

மலையக மக்களுக்கு வீடுகள் இல்லை. வீடுகளை நிர்மாணிப்பதற்காக காணிகளும் இல்லை. தோட்ட மக்களின் காணிகளை தோட்ட கம்பெனிகள் அபகரிக்கும் நிலையே தற்போது அங்கு உருவாகியுள்ளது. இத்தகைய அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version