சுமந்திரனுக்கு வாக்களிப்பதும் மாவீரர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்-மூத்த போராளி பசீர் காக்கா

என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியும் – மாவீரர் அறிவிழியின் தந்தையுமான பசீர் (காக்கா) என்று அறியப்பட்ட மு.மனோகர் தெரிவித்துள்ளார்.

இன்று (03) யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

தமிழ்த் தேசியத்தைத் தூக்கிலிடுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வரும் இன்றைய சூழலில் ஒரு மாவீரரின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஆகிய நான், சில விடயங்களை வெளிப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய முக்கிய கட்சிகளுடன் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் தேசியத்தை நேசிப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவற்றில் எந்த அணிக்கு வாக்களிப்பது என்பது அவரவர் சொந்த முடிவு.

ஆனால், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழி நடத்திய தலைவர் பிரபாகரனை என்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆபிரஹாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது, எமது மாவீரர்களின் தியாகத்தைக் கணக்கிலெடுக்காத தோற்றத்தைக் கொடுத்து விடும் என்பதைப் பணிவுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எமது தேசியத் தலைவரால் அடையாளப்படுத்தப்பட்ட கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; சரியோ பிழையோ அதற்கு வாக்களிப்பது என்பது எமது கடமை எனக் கணிசமானோர் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.

மேலே சுட்டிக் காட்டியுள்ள ஏனைய மூன்று தரப்புக்களில் ஏதோ ஒன்றுக்கு வாக்களிக்கத் தீர்மானிப்போர் விருப்பு வாக்குகளை தாம் உத்தேசிக்கும் எவருக்கும் அளிக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கத் தீர்மானிப்போர் சுமந்திரனைத் தவிர வேறு மூன்று வேட்பாளர்கள் எவருக்காவது அளிக்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறேன்.

1. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் கலந்து கொண்டு உரையாற்றினார். தனக்கு ஓய்வு வழங்குமாறு தலைவரிடம் கோரிக்கை விடுத்தார் என்று அந்த உரையில் அவர் குறிப்பிட்டார். தனது வேண்டுகோளுக்குப் பதிலளித்த தலைவர் உங்களுக்கு ஓய்வு சாகும்போதுதான் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறான அந்தக் கட்டடத் தொகுதி தற்போது கைமாறியதும் அங்கு நடைபெற்ற வழக்கொன்றில் போராளிகளை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டவர் சுமந்திரன். ஒரு தரப்பினருக்காக வாதிட்ட இவர் மறு தரப்பினரை இவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குறிப்பிட்டார்.

போராளிகள் பற்றிய இத்தகைய கருத்தைக் கொண்ட ஒருவரை தமது வாழ்வையே அர்ப்பணித்த பாலா அண்ணாவுடன் ஒப்பிடுவது சகிக்க முடியாததாகும். இதனை பாலா அண்ணாவை அவமதிக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

2. இனப்படுகொலை பற்றிய தீர்மானம் குறித்து ஏனையோர் குறிப்பிடும்போது உள்ளூர் விசாரணையே போதும் என விடாப்பிடியாக நின்றவர் சுமந்திரன். இவரை மீறிக் காரியங்கள் நடந்தபோது அரசுக்கு கால அவகாசம் வழங்கும் முயற்சிக்காகக் கடுமையாக உழைத்தவர். இனப்படுகொலை என்ற தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குப் போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கருத்துரைத்தவர் இவர். சாட்சியங்களை – ஆதாரங்களைத் திரட்டும் பணி மக்களின் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உரியது. அந்தக் கடமையைச் செய்யத் தவறியதுடன் அரசை எப்படிக் காப்பாற்றுவது என்பது பற்றிய சிந்தனையுடன் செயலாற்றியவர் சுமந்திரன்.

இனப்படுகொலை விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதில் இவரது பங்கே மிகக்கூடுதலானது. ஜெனிவாவில் அரசுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம் என இவர் கூறும் காணொலி சமூகவலைத்தளங்களில் உலாவருகின்றது.

3.அரசியல் கைதிகள் விவகாரத்தை இவரிடமே ஒப்படைத்தது கூட்டமைப்பு. இவரது முயற்சியினால் எந்தவொரு முன்னாள் போராளியாவது விடுதலை செய்யப்பட்டாரா எனத் தெரியவில்லை. மாறாகத் தான் அரசுத் தரப்புடன் கிரிக்கெட் விளையாடியமை தனது இராஜதந்திரம் என்றும் கோட்டாபயவுடன் டின்னரில் கலந்து கொள்ளும் தான் உங்களது விடுதலையைச் சாத்தியமாக்குவேன் எனப் புழுகினார்.

அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் வறுமையைத் தேர்தல் செலவுக்குப் பணமில்லாத விடயத்துடன் ஒப்பிட்டவர் இவர். உண்மையில் அரசியல் கைதிகளின் விடயத்தில் தலைகீழாகவே இவர் செயற்பட்டார். கட்டாய ஆட்சேர்ப்பு விடயத்தில் உண்மை வெளிக்கொணரப்படுவது முக்கியம். அப்படியென்றால்தான் உண்மையான நல்லிணக்கம் என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதேவேளை உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கவே ஜெனிவாவில் முயன்றார். யுத்தத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, ஏற்பட்ட சதி முயற்சிகளில் – அரசியல் குழப்பங்களின் கதாநாயகன் இவரே. இது யு. எஸ். ஹோட்டலில் நடந்த விடயங்கள் தொடர்பாக விந்தன் கனகரத்தினம் வெளியிட்ட தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

உண்மையில் இவர் எவருடைய தரப்பாக செயற்படுகிறார் என்பதை விளக்க இந்த உதாரணங்கள் போதும்.

4.உண்மையில் தமிழரின் ஆயுதப் போராட்டத்தை மட்டுமே ஏற்கவில்லை இவர். இன்றுவரை தாம் ஆயுதமேந்தியது தவறு என்று கூறாத ஜே.வி.பியினரின் வழிமுறைகளை ஏற்கிறார். தமிழரின் அடி நாதமான கோரிக்கையான வடக்கு- கிழக்கு இணைப்பைத் தகர்த்தவர்கள் சுனாமிக் கட்டமைப்பை நொருக்கியவர்கள் என்ற வரலாறு ஜே.வி.பிக்கு உண்டு.

இக்கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் கொள்கைகளில் ஒன்று மலையக மக்கள் இந்தியாவின் கைக்கூலிகள் என்பது. இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொண்டே அவர்களுடன் சிவப்புச் சட்டை அணிந்து கொண்டு மே தின நிகழ்வில் கலந்து கொண்டவர் இவர்.

மந்திரிப் பதவியைத் தவிர எந்த அரசியல் முன்னேற்றத்தையும் இவரால் காண முடியாது என்ற யதார்த்தத்தை நன்கு தெரிந்து கொண்டே இவர் மக்களை ஏமாற்ற முயல்கின்றார். வடக்கு – கிழக்கு இணைப்பு, சுனாமிக் கட்டமைப்பு விவகாரங்களில் தமிழர் தரப்புக்காக நீதிமன்றில் வாதிட முன்வராத இவர், ஜே.வி.பியின் நிலைப்பாட்டுடனேயே உள்ளார் எனக் கருதவேண்டியுள்ளது.

5.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது முள்ளிவாய்க்காலில் தலைவர் எடுத்த முடிவு. களத்தில் நின்ற போராளிகளுக்கும், போராட்ட மண்ணில் நின்ற பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். தனது துரோகத்தனத்தையும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவோரை ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும் என விரும்புபவர்களாக சித்திரிக்க முயல்கிறார் சுமந்திரன்.

அத்துடன் இவர்கள் மீது ஒரு கண் வைத்திருங்கள் என மறைமுகமாக சைகை காட்டுகின்றார் படைத்தரப்புக்கு. உணர்வுபூர்வமாக உயிரைக் கொடுத்து நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் – தேசியத்தின் பெயரால் கிடைத்த வாக்குகளால்தான் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி கிடைத்தது என்பதை நன்றி கெட்டத்தனமாக மறந்து விட்டார்.

யோக்கியமானவராக இருந்தால் இப்போது சொல்லும் கருத்துக்களை இவர் விசுவாசிக்கும் ரணிலின் கட்சி சார்பில் தெரிவித்து அரசியலில் இறங்கியிருக்கலாமே?

தமிழ்த் தேசிய நீக்கத்துக்காகத் துடிக்கும் இவர் தான் ஒரு இலட்சம் வாக்குகள் பெறுவேன் என்பது உணர்வுபூர்வமான இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாவீரர்களின் ஆன்மாவையும் பொருட்படுத்தாததைச் சுட்டிக்காட்டுகின்றது.

எனவே. லெப். கேணல் கில்மன், பிரிகேடியர் தீபனின் சகோதரர், பெற்றோர் உட்பட அனைத்து மாவீரர் குடும்பத்தினரும், முன்னாள் போராளிகளும் சுமந்திரனின் இந்த சவாலை ஏற்க வேண்டும். இவரைத் தோற்கடிக்க சாத்தியமான சகலவற்றையும் செய்ய வேண்டும்.

மாவீரர் அறிவிழியின் அப்பாவாக நான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் சங்கர் உட்பட இந்தப் போராட்டத்தில் ஆகுதியாகிய வடக்கு – கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாவீரர்கள் தளபதிகளின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற வகையில் மாவீரருக்குச் செய்யும் கௌரவமாக சுமந்திரனின் எதிர்பார்ப்பைத் தோற்கடிக்கும் பணியில் கைகோர்க்கும்படியாக அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

எமது மாவீரர்கள் சுமந்திரன் கிளிநொச்சி நீதிமன்றில் குறிப்பிட்டது போன்று பயங்கரவாதிகள் அல்லர் என்பதைக் கூட்டாக அவருக்கு உணர்த்துவோம். இது எமது வரலாற்றுக் கடமை. துயிலுமில்லத்தில் சுடரேற்றுவதற்கு ஒப்பானது.”என்றுள்ளது.