கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான்

தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன்அண்மைக்காலக, தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்து வருவதை அவதானிக்க முடிக்கின்றது.

வடகிழக்கு தமிழர்களின் தாயகம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது, அந்த தாயகத்தில் வாழ்ந்த மக்கள் தமது சுயகௌரவத்தினைப் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் போராட்டங்களை நடாத்தினார்கள்.

இந்தப் போராட்டங்கள் என்பது வெறுமனே வெறும் கோசங்களாக மட்டுமில்லாமல், உடல், பொருள், ஆவி அனைத்தையும் பயன்படுத்தி தமிழ் மக்கள் கடந்த 35வருடங்களாக இந்த நாட்டில் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களானது, சிலருக்கு பயங்கரவாதமாகவும், சிலருக்கு வேண்டப்படாததாகவும், சிலருக்கு ஏதோ வேறு நாட்டில் நடைபெறுவதாகவும் தோன்றினாலும், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் வாழுவதற்கான வழிவகையினை ஏற்படுத்துவதற்கான போராட்டமாகவே பார்க்கப்படுகின்றது.

அதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தினையும், தமிழ் மக்கள் பார்த்தார்கள், அதற்கான தமது முழுமையான ஆதரவினையும் வழங்கினார்கள். அந்த போராட்டமானது வேறு எங்கும், யாரும் நடத்திய போராட்டமாக பார்க்கவில்லை. தமிழ் மக்கள் தங்களுக்கான போராட்டமாகவே பார்த்தனர்.

அக்காலப்பகுதியில் தமது சுயஇலாபங்களுக்காகவும், தங்களது பிள்ளைகளின் நலன்களையும் சொந்த பந்தங்களையும் ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்கள் தமிழர்களின் போராட்டத்தினை விமர்சிக்க, அதனை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இவ்வாறானவர்களின் எவ்வாறான நிலையினை கடந்த காலத்தில் எதிர் கொண்டார்கள், அவர்களுக்கு தமிழ் மக்கள் எவ்வாறான பதிலை வழங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

இவ்வாறான நிலையில் இன்று தமிழ்த் தேசிய சூழ்நிலையில் காணப்படும் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும், அவர்கள் முன்னெடுத்துவரும் கருத்துருவாக்க செயற்பாடுகளும்  வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தினை நேசிக்கும் இளம் சமூகத்திற்கு மத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்துவதை காணமுடிந்தது.

குறிப்பாக இவ்வாறான அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தினை நேசிப்பவர்கள் மத்தியில் கடும் தாக்கத்தினை செலுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட இவ்வாறானவர்களின் செயற்பாடுகளே கிழக்கில் தமிழ் தேசிய அரசியலில் பாரிய சரிவினை ஏற்படுத்தியது என்பதை இவர்கள் உணராத வகையில் செயற்படுவது கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் அண்மைக்காலக கருத்துகள் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்து வருவதை அவதானிக்க முடிக்கின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியம் தொடர்பில் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையினை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றது.

வடக்கிலிருந்து முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையென்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ச்சியாக கூறிவருவதன் உள்நோக்கம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தமிழர்கள் எவ்வளவோ அடக்குமுறைகளுக்கும், அழிப்புக்குள்ளும் உள்ளாகிய நிலையில் அவை தொடர்பில் பேசாத பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவர்கள் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் தொடர்ச்சியாக தமிழர் தரப்பின் மீது பழிபோடுவது கிழக்கு தமிழர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கமானது கிழக்கில் முஸ்லிம்கள் மத்தியில் இருந்த தமிழர் எதிர்ப்பு அணியினரைக் கொண்டு தமிழர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்த நேரத்தில் வடக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் வடக்கிலிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அவர்களின் சொத்துகளும் அன்றைய காலப்பகுதியில் பாதுகாக்கப்பட்டன.

எனினும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் போர்நிறுத்த காலத்தில் முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்தபோது அதனை ஒரு துன்பியல் காலமாக விடுதலைப் புலிகளின் தலைவரினால் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அவ்வாறு அவர்கள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு இருந்த அச்சுறுத்தல்கள் இல்லாமல்போனமை தொடர்பிலும் தெளிவு படுத்தப்பட்டிருந்தது.

பல தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டன

இருந்த போதிலும் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதே காலப் பகுதியில் கிழக்கில் தமிழ் மக்கள் மீது பல படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. பல தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டதுடன், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

வீரமுனைப் படுகொலை, திராய்கேணி படுகொலை, அட்டப்பளம் படுகொலை, கல்முனை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழக படுகொலையென கிழக்கில் ஒரு வருடத்திற்குள் பல படுகொலைகள் முஸ்லிம் ஆயுதப்படைகள் மூலமாக அரங்கேற்றப்பட்டன. சிங்கள அரசுகள் அன்றைய காலத்திலிருந்து சில முஸ்லிம் அரசியல் தலைவர்களை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் இவ்வாறான படுகொலைகள் நடாத்தப்பட்டன. இன்றுவரையில் கிழக்கு மாகாணத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் தடயமே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. பல தமிழ் கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

வடக்கில் முஸ்லிம்கள் எந்த சேதமும் இன்றி வெளியேற்றப்பட்ட அக்காலப்பகுதியில் கிழக்கில் தமிழர்களுக்கு பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டன. இது தொடர்பில் இதுவரையில் எந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எந்தவித கருத்துகளும் தெரிவிக்கவில்லை. தமிழர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்று விரும்பும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூட தமிழர்களுக்கு நடந்த இந்த அநீதிகளுக்கு எந்தவித கருத்தினையும் முன்வைக்கவில்லை.

இவ்வாறான நிலையில், இவ்வாறான இழப்புகளாலும் சோதனைகளாலும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ் தேசிய அரசியல் பயணம் என்ற அடிப்படையில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

கிழக்கினைப் பொறுத்த வரையில், தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. அதனை யாரும் மறுக்கவில்லை. மாறாக தமிழர் தரப்பு மட்டும் பிழை செய்தது போன்று காட்ட முற்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களின் இவ்வாறான செயற்பாடே கடந்த காலத்தில் கிழக்கில் தமிழ் தேசிய அரசியலுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலப்பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் முஸ்லிம் அமைப்பின் உறுப்பினர் மட்டக்களப்பில் தாக்குதல் நடாத்தியது தொடர்பில் கண்டறியப்பட்டு காத்தான்குடியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அன்றைய காலப்பகுதியில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் சந்தித்து உறவு கொண்டாடிய நிலையில், அது தொடர்பில் கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்புகள் ஏற்பட்டன. அந்த எதிர்ப்புகள்தான் காலப்போக்கில் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதாகயிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்தி, தமிழ் மக்களின்பால் உள்ள நியாயங்களை இல்லாமல் செய்யும் செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியம் மீதான பற்றினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளாக இருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் ஆரோக்கியமான விடயமாக தமிழரசுக் கட்சி நோக்குமானால் எதிர் காலத்தில் கிழக்கில் அது தமிழ் தேசியத்திற்கான பாரிய ஆபத்தானதாக அமையக் கூடிய சூழ்நிலையுள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நியாயமான இவ்வாறான எதிர்ப்புகளை எதிர்காலத்தில் உணர்ந்து தமிழ் தேசிய சக்திகள் செயற்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் குறித்தான விடயங்களை பேசும் வகையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதுவெறுமனே அரசியல் சார்ந்த விடயமாக மட்டும் சிந்திக்காமல் தமிழர்களின் உணர்வு சார்ந்த விடயமாகவும் சிந்திக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்.