Home செய்திகள் புதிய அரசு அமைக்கப்படும் என சூடான் தலைவர் உறுதி

புதிய அரசு அமைக்கப்படும் என சூடான் தலைவர் உறுதி

புதிய அரசு அமைக்கப்படும்

மிக விரைவாக புதிய அரசு அமைக்கப்படும் என்று சூடானில் இராணுவப்புரட்சி மூலம் கடந்த மாதம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தளபதி ஜெனரல் அப்டெல் பற்றரா அல் போர்ஹான் அமெரிக்காவுக்கு கடந்த வியாழக்கிழமை (4) உறுதியழித்துள்ளார்.

அதேசமயம், தடுப்புக்காவலில் இருந்த 4 அமைச்சர்களை விடுதலை செய்துள்ளதாகவும் இராணுவத்தளபதி அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டனிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

சூடானில் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சி இடம்பெற வேண்டும் என சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராட்சியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியன தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.

இதனிடையே, தடுப்புக்காவலில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் விடுதலைசெய்யப்பட வேண்டும் என்பதுடன், முன்னாள் பிரதமருடனும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என பிளிங்டன் தெரிவித்ததாக அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் நாள் இடம்பெற்ற இராணுவப்புரட்சியின் பின்னர் முன்னாள் பிரதமர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், ஐ.நா மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சூடானில் இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசெல் பசெலெற் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அவசரமாக கூட்டப்பட்ட கூட்டத்தை தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version