Home செய்திகள் சர்வதேச சிறுவர் நாள்: இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...

சர்வதேச சிறுவர் நாள்: இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே

சர்வதேச சிறுவர் நாளை முன்னிட்டு முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள அதே நேரம் யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது, இன்று 1669 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சர்வதேச சிறுவர் தினத்தில் இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? எனக் கோரி நீதி கேட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில்  “எமது குழந்தைகளுக்கு உயிர் வாழும் உரிமை இல்லையா? சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?, தமிழ் குழந்தைகள் பயங்கரவாதிகளா?, ஓமந்தையில் இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே?, உறவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச சிறுவர் நாளை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்  வவுனியாவில் போராட்டம் ஒன்று   முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

“ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் உறுதிமொழியை நம்பி கையளிக்கப்பட்ட எமது குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் எமக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை. ஆயினும் எமக்கான நீதியை வழங்காமல் மரணச் சான்றிதழையும் இழப்பீட்டையும் வழங்குவதாக ஜனாதிபதி சொல்கிறார். அவரது கருத்தை நாங்கள் கண்டிக்கின்றோம். நானே கொலையை செய்துவிட்டேன் எனவே மரணச்சான்றிதழை வங்குகின்றேன் என்றவாறாகவே அவரது கருத்து அமைந்துள்ளது.

எமது தமிழ் குழந்தைகள் ஆயுதம் ஏந்தியவர்களா? அல்லது பயங்கரவாதிகளா? சிறுவர்களின் பாதுகாப்பிற்காக எத்தனையோ அமைப்புக்கள் இருந்தும் எமது குழந்தைகளை பாதுகாக்க அனைவரும் தவறிவிட்டனர். எனவே சர்வதேச சிறுவர் நாள் எமக்கு துக்க தினம்” என்றனர்.

Exit mobile version