Home உலகச் செய்திகள் பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை போராட்டம் தொடரும்-விவசாயிகள்

பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை போராட்டம் தொடரும்-விவசாயிகள்

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை

இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தில் இடம்பெற்ற அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த், “பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம், குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமின்றி வேறு சில விஷயங்களுக்காகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அது குறித்து மத்திய அரசு எங்களுடன் பேச முன்வர வேண்டும்.

மேலும் பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை நாங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் போராட்ட களத்திலேயே காத்திருப்போம்,” என்றார்.

இந்திய நாடாளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட மொத்த சந்தைகளுக்கு வெளியே வாங்குபவர்களுக்கு நேரடியாக விற்க இந்த சட்டம் வகை செய்தது. மேலம் இது விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் என்று அரசு தெரிவித்தது. இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற முடியாது, வேண்டுமானால் திருத்தம் செய்யலாம் என்றும் அது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது.

இருப்பினும், விவசாயிகள் தரப்பு முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், மூன்று சட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இதன் பிறகு இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இறுதித்தீர்ப்பு வழங்கப்படும்வரை மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றும் நடைமுறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே பிரதமர் மோடி குறித்த 3 சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விவசாயிகள் அதிகம் வாழும் உத்தரபிரதேச மாநிலம், பஞ்சாப் மாநிலம் ஆகியவற்றில் அடுத்த ஆண்டு சட்டப்ரபேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அரசியல் பின்னணி கொண்டதாக விவர்சனங்கள் எழுந்துள்ளன.

Exit mobile version