தெரு ஓவியங்களும் மென்வலுவும் (soft power) கலாச்சார சாணக்கியமும் (cultural diplomacy) – பாகம் 2

அழகுகலைப் பண்புகள், கலாச்சார, பண்பாட்டு நுணுக்கங்கள் Joseph Nye குறிப்பிடுகின்ற மென்வலுவாக (soft power)  அடக்குமுறைக்கு எதிராக உள்வாங்கப்பட வேண்டிய தேவை சனநாயக வெளி மூடப்படுகின்ற சூழலில் எழுகின்றது. இவ்வெழுச்சி ஆக்கபூர்வமான அழிவினூடாகவும் முன்வைக்கப் படலாம்.  மேலாண்மை அடக்குமுறைச் சொல்லாடலை சமூகவியல், அரசியல், அழகியல், மானுடவியல், வரலாற்றியல் இன்னும் பிற தளங்களில் கட்டவிழ்ப்பது ஆக்கபூர்வமான அழிவாகக் கொள்ளப்படலாம்.

இதற்கான உந்துதல் பிக்காசோ குறிப்பிடுகின்ற ஆக்கபூர்வமான உந்துதலாக இருக்கலாம். ‘பிக்காசோ பலஸ்தீனத்தில்’ (Picasso in Palestine Project)’ என்ற செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்களின் அனுபவங்களிலிருந்து வாசிக்கின்ற போது, பிக்காசோவின் ஓவியம் பலஸ்தீனத்திற்கு எடுத்து வரப்பட்ட அனுபவம், அந்த ஓவியம் ஏற்படுத்திய அதிர்வலைகள், அதன் பின்னரான கொதிநிலை எல்லாமே அரசியல் சார்ந்தது. வெறுமனே அழகியல் சார்ந்தது மட்டுமல்ல. அடக்குமுறையைப் பிரதிபலிப்பதும், பிரதிநிதித்துவப் படுத்துவதற்குமான பொதுப்படிமம், குறியீடு.

அப்படிமம் இன ஒருங்கிணைப்பை, இனத்தால் அல்லது இன அடையாளத்தால் ஒடுக்குமுறைக்குள்ளாவதனால், ஒருங்கிணைப்படுகின்றோம் என்ற பொது அடையாளப்படுத்தலும், உரிமங் கொள்ளலும், பொது இயக்கமாதலும், பொது படிம மையத்தினை இயங்கு தளமாக்கிய வெளியும் அவசியமாகின்றது.

அழகியல் சாணக்கியம் (Aesthetic diplomacy) வடக்கு-கிழக்கைச் சார்ந்து அவதானிக்கின்ற போது, அரசு அல்லாத இயக்கியால் மட்டுமே உருவாக்கப்பட முடியும். (Non-State actor) அவ்வாறான இயக்கியின் இயங்குதளம் விளிம்புமையத் தந்திரோபாயத்தை கொண்டிருத்தல் அவசியமாகின்றது. Joseph Nyeயினுடைய மென்வலு பூகோளமயப்படுத்திய சந்தைப்படுத்தலை உத்தியாக பயன்படுத்துகின்றது.

அது பண்பாடு, விழுமியம், கலை இன்னும் பிற சார்ந்ததாக அமையலாம். Joseph Nye குறிப்பிடுகின்ற மென்வலு பின்வரும் மூன்று பண்புகளில் தங்கியிருப்பதாக கூறுகின்றார். கலாச்சாரம், அரசியல் விழுமியங்கள், வெளியுறவுக் கொள்கைகள் (பக்கம் 97). இதனூடான அணுகுமுறையும், தொடர் உறவாடலும் நீண்டகால இலக்குக் கொண்டது.

தெரு ஓவியங்களில் பிரதிபலிக்கும் கலாச்சார மேலாண்மை கொண்ட ஓவியங்கள் மேலாண்மை அடையாளக் கட்டமைப்பிற்கு மிக இன்றியமையாதவை. அடக்குமுறை சார்ந்து எழுகின்ற தெரு ஓவியங்களின் அடக்கப்படுகின்ற மக்களின் கலாச்சார மீளவெழுச்சியை முதன்மைப்படுத்துகின்ற, மீள உறுதிப்படுத்தி வலியுறுத்துகின்ற படிமங்கள் கலாச்சார சாணக்கியத்திற்கூடாக (Cultural diplomacy) தேசக் கட்டுமானத்திற்கு பங்களிப்புச் செய்கின்றது.

மிக அண்மைய காலங்களில் கலாச்சார சாணக்கியம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஏற்படுத்தவும், பலப்படுத்தவும் ஒரு கருவியாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. கலாச்சார சாணக்கியம் தொடர்பான விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. சிலர் இதனை ஏகாதிபத்தியத்தின் சிந்தனைக்கரு முகமாக விபரிக்கின்றனர். அதிசக்தியுடைய அரச அல்லது அரசசார்பற்ற முகவர்களின், நாடுகளுக்கிடையிலான அல்லது நாடுகள் கடந்த நிலையிலான தொடர்புகளை முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கின்றது. நாடு கடந்த நிலையில் அரச, அரசசார்பற்ற முகவர்களுக்கு எங்களுடைய இலக்கினை எவ்வாறு கலாச்சார சாணக்கியத்துடனூடு மெய்மை உறைப்பித்தல் ஆய்வு செய்யப்பட வேண்யது. கலாச்சார சாணக்கியத்தில் அரச சார்பற்ற முகவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மேற்குறிப்பிட்ட பங்களிப்பு பன்முகப்படுத்தப்படுவதில், குறிப்பாக மைய ஆட்சியை வலுத்தளர்த்துவதில் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. அது ஒரு வகையில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அரசியல் வரலாற்றுத் தளத்தில் தமிழினம் பட்டறிவுடன் கண்ட அனுபவம்.

மையம் தவிர்த்து பன்முகப்படுத்தப்பட்ட தந்திரோபாயத்தின் கூட்டு கட்டமைக்கப்பட்டமையால் பன்முகப்படுத்தப்பட்ட முகவர்களினால் கட்டமைக்கப்பட்ட இலக்குகள் தொடர்பிலும், அதன் அணுகுமுறை தொடர்பிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடான, மறுதலித்த புதிய யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முரண்பாட்டுப் பிரதிபலிப்பு எதிர்மறை விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. இவ்வாறான முரண்பாட்டுச் சூழலில் உருவான எதிர்மறை விளைவுகளை கட்டமைக்கக் கூடிய அரச சார்பற்ற முகவர்களின் செல்வாக்கு அதிகரித்து, அவர்கள் இலக்கிற்கு முற்றிலும் முரணான புதிய முகவர்களாக மாறியிருந்தனர் (Kelley 2010). மேற்குறிப்பிட்ட புதிய யதார்த்தத்திற்கு இணையத்தளப் பயன்பாடும், தொழிநுட்ப வளர்ச்சியும் காத்திரமான பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. நாடு கடந்த ஆனால் கலாச்சாரங்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் தொடர்பாடல்கள், கலாச்சார சாணக்கியத்தின் தளத்தை இன்னும் விரிவாக்கின என்று கூறலாம்.

Joseph Nye யினுடைய ‘மென்வலு’ முன்வைப்புத் தொடர்பாக விமர்சனங்கள் நிறையவே எழுந்துள்ளன. ‘மென்வலுக்’ கருத்தாக்கம் அமெரிக்க உருவாக்கம் என்பது மட்டுமல்லாமல், ‘மென்வலுச்’ சொல்லாடல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சொல்லாடல்களுள் உள்வாங்கப்பட்டு, அது முற்போக்கான கருத்தியலாக ஏனைய நாடுகளிலும் விவாதத்திற்குட்படுத்தப்பட்டது. இச் சொல்லாடலின் பொருத்தப்பாடு அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அதற்கு மாற்றீடான சொல்லாக, உதாரணத்திற்கு ‘மாற்றத்திற்கான சக்தி’ (transformative power), சிவிலியன் சக்தி போன்றன மேற்குலக அரசியற் பரப்பில் முன்வைக்கப்பட்டது.

சீனாவின் அரசியற் பரப்பில் ‘மென்வலு’, ‘பண்பாட்டு வலுவாக’(culural power)) (A.Patalakh – 2018) மாற்றமடைந்தது. மென்வலுவினுடைய பிரதான பொறிமுறையாக ‘வசீகரம்’, ‘கவர்ச்சி’ (attraction)) இயங்குகின்றது. 2009இல் Joseph Nye முன்வைத்த மென்வலுவிற்கான முதன்மைக் காரணியாக ‘கவர்ச்சி’ அமைகின்றது. அது நாளடைவில் சிக்கலுக்குட்படுத்தப்பட்டது.

ab395d02 c9f3 492f bb9d fae4ee477507 தெரு ஓவியங்களும் மென்வலுவும் (soft power) கலாச்சார சாணக்கியமும் (cultural diplomacy) – பாகம் 2

இராணுவ, பொருளாதார வலுவும் கவர்ச்சியானதாக இருக்கலாம் என்றதன் அடிப்படையில் (A.Patalakh 2015 unpublished) மீண்டும், கருத்தாய்வு மீள்வாசிப்பின் பின் 2011இல் பின்வருமாறு மீள் வரைவிலக்கப்படுத்துகின்றார். ‘ஒரு தனிநபர் விரும்பிய விளைவுகளைப் பெறுவதற்கு ஒத்துத் தேர்ந்தெடுத்தல் (Co-optive means) வழிமுறைகளைக் கையாளுதல், அவை நிகழ்ச்சி நிரல் கட்டமைப்பு, இணங்குவித்தல், நேர்மறைக்கவர்ச்சி (2011a.19) போன்றன. மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்ட சாணக்கியம் ‘வலுப்’ பின்புலம் அற்ற முகவர்களால் குறிப்பாக அரச சார்பற்ற முகவர்களால், நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சிக்கலுக்குரியது. வலுப் பின்புலத்தினூடு தான் நிகழ்ச்சித் திட்டமைப்பும், இணங்குவித்தலும் நடைமுறைச் சாத்தியமாகும். Antonio Gramsciயினுடைய மேலாதிக்கத்தன்மை (hegemony) பற்றிய புரிதல் அவசியமாகின்றது.

Joseph Nye தன்னுடைய எழுத்துக்களிலே ‘வன்வலு’ விற்கானதும் ‘மென்வலு’ விற்கானதுமான இடைவெளி அல்லது வித்தியாசம் குறித்து தெளிவின்மையைக் கொண்டிருந்தாலும், ஒரு தருணத்தில் ‘கொள்கை மையப்பார்வையில் ‘வன்வலு’, ‘மென்வலு’ விற்கிடையே உள்ள உறவு சிக்கலானது. சில வேளைகளில் இரண்டுமே ஒன்றையொன்று உறுதி செய்கின்றன. சில வேளைகளில் ஒன்றையொன்று விலக்குகின்றது. (Eg.20116, 22-23) அதனால் ‘வன்வலு’ வும் ‘மென்வலுவும்’ உள்ள வளங்களை இணைத்து ‘வினைத்திறன் மிக்க வலு’(Smart power) என்ற கருத்துருவாக்கத்தை முன் வைக்கின்றார்.

தெரு ஓவியமும் சனநாயகமும் 

தெரு ஓவியத்திற்கும், தெரிவு செய்யப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட சொல்லாட்சிக்கும் (deliberative rhetoric) இடையிலான தொடர்பு முக்கியமானது. திட்டமிடப்பட்ட சொல்லாட்சி மக்களை ஒரு புதிய கோணத்தில் பார்க்க அழைப்பதோடு, அது தகவலையும், அறிவையும் கொடுக்கின்றது. அதன் விளைவாக ஆழ்ந்து சிந்திக்க (reflective) அழைப்பு விடுக்கின்றது. (Chawlers 2009) மேற்குறிப்பிட்ட செயற்பாடு ஒரு கருத்துருவாக்கத்திற்கு மக்களை வழிநடத்திச் செல்கின்றது.

இக்கருத்துருவாக்கம் ஏற்கனவே உள்ள சொல்லாடல் செல்நெறியில் செல்வாக்குச் செலுத்தும். ஒலிவியர் டபேன் (Olivier Dabene) தெரு ஓவியம் மூன்று விதங்களில் சனநாயகத்திற்கு பங்களிப்புச் செய்வதாகக் குறிப்பிடுகின்றார் (2020) முதலாவது அரசியல் வெளிப்படுத்தலை மேம்படுத்தல் (Enhancing Political Expression) இரண்டாவது நகர குடியுரிமையும் அதிகாரம் கொடுத்தலும் (empowerment and Urban citizenship) மூன்றாவது பொது வெளியை நீட்சியாக்கல் அல்லது விரிவுபடுத்தல் (stretching the public sphere) மேற்கூறப்பட்ட மூன்றையும் தனித்தனியாக ஆராயலாம்.

அரசியல் வெளிப்படுத்தலை மேம்படுத்தல்

இது குறித்து ஏற்கனவே முதலாவது பாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவெளி என்ற தலைப்பில் ஓரளவிற்கு பார்த்திருக்கின்றோம். விமர்சனக் கோட்பாட்டாளர்களின் பார்வையில் சனநாயம் என்பது, ‘அரசியலுடன் உரையாடுவதற்கு அல்லது ஈடுபடுவதற்கு ஒருவருக்குள்ள சுதந்திரமே சனநாயகத்தை தீர்மானிக்கின்றது’(O.Dabene 2020). Downey (2014) சொல்லுகின்ற விளக்கமும் இங்கு கருத்தில் கொள்ளப்படுவது சிறந்தது. ‘அரசியல் எனப்படுவது தீர்மானித்தல் அடிப்படையில் முடிவு செய்யப்படுமாயின், உதாரணமாக யாருக்குப் பேசுகின்ற அதிகாரம் உள்ளது, கேட்கப்படுகின்ற அல்லது பார்க்கப்படுகின்ற தளத்தில் தற்கால ஓவியம், அரசியலையும் அதன் செல்நெறியையும், வெவ்வேறு உத்தியினூடு சிக்கலுக்குட்படுத்துகிறது, விரிவாக்குகின்றது, மீள் – கற்பனை செய்கின்றது என்பது விளங்கும்’ (2014)

சனநாயக வெளி சுருங்கும் போது அல்லது இறுக்கமடையும் போது தெரு ஓவியங்களினூடாக அவ் வெளியை விரிவுபடுத்தல் என்பது அவசியமாகின்றது. இது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்விகளுக்கு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பிரேசில், ஆர்ஜென்டினா போன்ற நாடுகளின் தெரு ஓவியர்களின் அனுபவம் எங்களுக்கு வழிகாட்டலாம். ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவெளியை மீளப்பெற்று அரசியல் தெரு ஓவியத்தை, எதிர்ப்பின் மாற்று ஊடகமாக மாற்றுவதென்பது வெறுமனே ஓவியம் சார்ந்த விடயமல்ல, நம்பிக்கை சார்ந்தது.

அடக்குமுறைக்குள், அடக்குமுறைக்கெதிரான மிகச் சிறிய விடயமும் அதிகாரம் அல்லது நம்பிக்கை இழந்தவர்களுக்கு அதிகாரத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதாகும். பிரதிநிதித்துவ சனநாயகத்தில், குறிப்பாக சிறீலங்காவில் கடந்த பாராளுமன்ற, சனாதிபதி தேர்தல் சிறுபான்மை இனங்களின், எண்ணிக்கை அடிப்படையில், வாக்குகளை செல்லாக் காசாக்கியுள்ளன. சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள், பல்லைப்பிடுங்கிய சிறுத்தைகளாக்கப்பட்ட நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதிநிதித்துவ சனநாயக செய்முறை மூலம் எதிர்ப்பை, மாற்றத்தை ஏற்படுத்துவதென்பது சிக்கலான விடயமாகவே தென்படுகின்றது. இந்த நிலையில் அடக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவ ஊடகமாக தெரு ஓவியம் மாற்றப்பட்டுள்ளது. மெக்சிகோ, ஆர்ஜென்ரீனா, சிலி போன்ற நாடுகளில் மேற்குறிப்பிட்ட அடக்குமுறையையும், அதன் எதிர்ப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதிபலிக்கும் ஓவியர்களும் சமூக செயற்பாட்டாளர்களே ஏனெனில் மக்களுக்கான மாற்று வழியைச் சிந்திக்க தெரு ஓவியங்கள் உதவி செய்கின்றன.

நகர குடிமையும் அதிகாரம் கொடுத்தலும்

Roland Barthes குறிப்பிடுகின்ற ‘படைப்பாளியின் இறப்பு’(death of the author) அவருடைய கருத்துப்படி குறிப்பாக இலக்கிய விமர்சனத்தில் படைப்பாளி கலந்துரையாடலின் மையப்புள்ளி அல்ல மாறாக ‘படைப்பு’. படைப்பாளியின் படைப்பே மையப்புள்ளியாக மாறுகின்றது. அது போலவே தெரு ஓவியத்திலும், ஓவியர் மறைந்து, ஓவியரின் படைப்பே சனநாயகப் புரட்சிக்கான மையப்புள்ளியாக மாறுகின்றது. ஓவியர், ஓவியத்தின் விவரணத்தை பார்வையாளரின் கையில் விட்டு விடுகின்றார். இந்த உத்திதான் அரசியல் மேலாதிக்க சொல்லாடலைக் கட்டவிழ்க்கின்றது. அதற்குப் பின்னால் சனநாயக கட்டமைப்பின் உள்நோக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. (Nachtergeal (2015) பொது வெளியூடு அடக்குமுறைக்கெதிரான பிரதிநிதித்துவத்தை தெரு ஓவியங்களுக்கூடாக வெளிப்படுத்துதல், Semiotic democracy எனக் கூறப்படுகின்றது. Lyman Chaffee (1993) தெரு ஓவியம் பற்றி குறிப்பிடுகையில் ‘தெரு ஓவியம் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களுக்கான வெகுஜன ஊடகம்’ எனக் குறிப்பிடுகின்றார்.

சிறீலங்காவில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் நிலை என்பது வாக்கு இருந்தும் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலை. Cassandra வும் Guick (2015) மேற்குறிப்பிட்ட அந்த நிலையை பெண் ஓவியர்கள் ஆணாதிக்க ஓவிய வெளியில் சமத்துவம் தேடுதல் போன்றது என குறிப்பிடுகின்றனர். Dryzek (2000) கருத்துப்படி அரசியல் பொறுப்புக்கூறல் தொடர்பில் தெரு ஓவியங்கள் வீரியமான பங்களிப்பை வழங்கலாம். இவ்வாறாக அவர் குறிப்பிடுகின்ற ‘Difference Democracy’ வரலாற்று ரீதியாக அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும்’. நகர குடிமை என்று Holston (2008) குறிப்பிடுவது அரசுக்கு எதிரான கிளர்ச்சியை நோக்காகக் கொண்டது. உரிமைகளை பெறுவதற்கும், நிலைநிறுத்துவதற்கும், அடக்குமுறைக்கெதிராக கருத்துருவாக்கம் செய்கின்ற ஓவியர்களின் தூரிகை பலமானது. இவர்களின் கூட்டுப்பலம் புதியதொரு சனநாயக வெளியை திறக்கவல்லது.

 

பொதுவெளியின் நீட்சி

Olivier Dabene இவ் நீட்சி மூன்று தளங்களில் நிகழ்வதாகக் குறிப்பிடுகின்றார். முதலாவது தளத்தில் புதிய செயற்பாட்டாளர்கள் உள்வாங்கப்படுகின்றனர். குறிப்பாக பொது விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும், இரண்டாவது, பொது வெளியின் நீட்சி, ஓவிய வெளி தொடர்பாக, மூன்றாவது இணையத்தள பாவனையால் உருவாக்கப்பட்ட எண்ணிம பொது வெளியும் (Virtual space) அதன் நீட்சியும். பொது வெளி பெரும்பாலும் அதிகாரம் கொண்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும், விளிம்பு நிலை (Subaltern) மக்களுக்கான பொதுவெளி மறுக்கப்பட்டே வந்துள்ளது. இது தாராளவாத சனநாயக வெளியில் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான சனநாயக வெளியை உருவாக்கக்கூடிய சனநாயக விழுமியங்களை வரவேற்கின்ற மனநிலை உண்டு.

ஆனால் ஏனைய ஆட்சிமுறைகளில் இந்த வெளியின் உடைப்பைச் சாத்தியமாக்கக்கூடிய பலம் தெரு ஓவியர்களிடமே அதிகமாகவே உள்ளது.

-எழில்-