Home செய்திகள் வடக்கின் இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக- தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக சமலுக்கு...

வடக்கின் இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக- தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக சமலுக்கு கடிதம்

வடக்கின் இனப்பரம்பலை மாற்றி

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து நீர்ப்பாசன அமைச்சரும் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அவர்களின் கிராமத்தினுடனான மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் கடந்த 03.04.2021 இல் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள ” போகஸ்வெல” என தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள கொச்சியான் குளம் என்ற தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட கெப்பிட்டிகொலாவ பிரதேச செயலாளர் பிரிவின் கனுகாவெல கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 600 குடும்பங்களும் பதவியா கிராம அலுவலர் பிரிவு மற்றும் கம்பிலிவெலலெதகன்ன கிராமங்களைச்சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவுடன் இணைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு வவுனியா மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபரினால் சமன் பந்துலசேனவின் கோரிக்கை முன்மொழிவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு – வடமத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல்க் கோலத்தை மாற்றி அமைத்து அதனால் அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற செயற்பாடாக இது திட்டமிடப்பட்டுள்ளது என்பதுடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும் இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும் இது அமையும் என்பதால் இந்நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அரசின் இவ்வாறான செயல்முறைகளை வன்மையாக கண்டிப்பதுடன் செயல்பாட்டை உடன் நிறுத்துமாறு தங்களை நாடி நிற்கிறோம்.

இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தத்திற்கு வித்திட்டதாகவும் இன நல்லுறவை பாதிக்கும் விடயமாக அமைந்திருப்பதையும் நினைவுபடுத்துகிறோம். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version