Tamil News
Home செய்திகள் மாகாண அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – வடக்கு ஆளுநரிடம் அவைத் தலைவர் கோரிக்கை

மாகாண அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – வடக்கு ஆளுநரிடம் அவைத் தலைவர் கோரிக்கை

மாகாண அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீரை கொண்டுவர ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். 

வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்ற பி.எஸ்.எம். சாள்ஸ் இன்று (22) தனது கடமைகளை பெறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவஞானம் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய இலக்குகள், அபிலாஷைகள் என்ன என்பதை நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. நீங்கள் எங்களில் ஒருவர்.

இரண்டு விடயங்களை நான் சொல்லவேண்டிய நிலையில் உள்ளேன்.

13வது திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுகின்றோம். நான் அதற்கு மேலாக என்னுடைய கருத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தின்படி, நீங்கள் கொஞ்சம் தெளிவாகவும் இறுக்கமாகவும் இருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம். அந்த வகையில், இருக்கின்ற பல விடயங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. அவற்றை எவ்வாறு மீளப் பெறலாம் என்பது பற்றி நான் சொல்லித்தான்  தெரிய வேண்டும் என்பதில்லை. அது உங்களுக்கு தெரிந்த விடயமே.

சில ஆளுநர்கள் நிர்வாகத்திறன் அற்ற ஆளுநராகவும், மாகாண முறை தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு மாகாண அனுபவம் உண்டு. ஆகவே, எடுத்த விடயங்கள், எடுக்கப்பட்ட விடயங்கள் அல்லது பிடுங்கப்பட்ட விடயங்களை திருப்பிப் பெறுவதிலேயே உங்களுடைய முயற்சி காணப்பட வேண்டும்.

மாகாணத்துக்குரியதாக இருப்பதை மத்தி எடுப்பதை நாங்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. மாகாணத்துக்குட்பட்ட விடயங்கள் நீக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

எமது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த  பெண்மணி நீங்கள். எனவே இங்குள்ள அதிகாரிகளும் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.

வடக்கு மாகாண மக்களுக்கு உங்களால் முடிந்தளவு உதவுங்கள். அதேபோல  யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியுடன் பேசி உரிய நடவடிக்கை எடுங்கள். குறிப்பாக, இரணைமடுவில் இருந்து குடி தண்ணீர் கொண்டுவருவதாக இருந்தது. ஆனால், தற்பொழுது அது சாத்தியமற்ற விடயமாகிவிட்டது.

யாழ்ப்பாண மக்களுக்கு தேவையான குடிநீரை கொண்டுவரக்கூடிய நடவடிக்கையினை நீங்கள் உடன் செயற்படுத்துங்கள். அதற்கு நாங்கள் எங்களாலான பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார்.

Exit mobile version