கோவிட்-19 மற்றும் இன்றைய பொருளாதார நெருக்கடியில் பாதிப்புறு குழுக்களாக கர்ப்பிணி பெண்களின் நிலை | வேலம்புராசன் விதுஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

கர்ப்பம் என்பது கருத்தரித்தல் மற்றும் பிறப்பு ஆகியவற்றிற்கு இடையேயான நேரம் என வரையறுக்கப்படுகின்றது. இது பொதுவாக 40 வாரங்கள் நீடிப்பதுடன் நாடு முழுவதுமான கர்ப்ப வகிபங்குகளை கணக்கெடுப்பது கடினம். காரணம் இடைப்பட்ட காலத்தில் கருச்சிதைவுகள் ஏற்படுத்தப்படுகின்றது. ஏனைய பெண்களை விட கர்ப்பிணி பெண்களுக்கு கோவிட்-19 ல் இருந்து கடுமையான நோய்களுக்கு உட்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. முன் கூட்டியே குழந்தை பிறத்தல், பிற பாதகமான கர்ப்ப விளைவுகளை ஏற்படுத்துகின்றது. WHO இன் கூற்றுப்படி கர்ப்பிணி பெண்கள் வைரஸ் இனால் கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கான சந்தர்ப்பம் சாதாரண பொது மக்களைக் காட்டிலும் குறைவாக இருப்பினும் கர்ப்ப காலத்தில் பெண்ணிண் நோயெதிர்ப்பு அமைப்பு மாற்றங்களுக்கு உட்படுவதனால் கோவிட்-19 உட்பட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல தடுப்பு நடவடிக்கைகளை  எடுக்க வேண்டியது அவசியம்.

கோவிட்;-19 ஆரம்பித்த வேளையில் கர்ப்பிணிப் பெண்களின் மனச்சோர்வு, பதட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட போது, ஆசிய நாடுகளில் 3.8%- 17.5% ஆக இருந்தது. ஈரானில் 3.8% இலங்கையில் -17.5% ,மேற்கத்தேய நாடுகளில் 23.9%- 72% வரை காணப்பட்டது. அமெரிக்கா 23%, கனடா 72%சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 3.09%- 29.6% வரை காணப்பட்டது.( Dolatabadi.R et al, 2020 )
இங்கிலாந்தில் கோவிட்-19 உடன் மருத்துவமனையில் சேர வேண்டிய அனைத்து கர்ப்பிணி பெண்களை பற்றிய தகவல்களும் இங்கிலாந்து மகப்பேற்றியல் கண்காணிப்பு அமைப்பு பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

United States to United Kingdom ஆய்வின் படி பொது மக்களைப் போன்று பிரசவத்தில் இருக்கும் பெண்களும் SARS-CoV-2 இனால் பாதிக்கப்பட்டாலும் அறிகுறியற்று காணப்படுகின்றனர் என காட்டுகின்றது. அறிகுறி இருப்பவர்களுக்கு காய்ச்சல்  மற்றும் இருமல் இருப்பதுடன் அறிகுறியற்ற கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தின் பின்னரான காலத்தில் ஆபத்து ஏற்படுத்தப்படுகின்றது. அதே போன்று கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ICU ல் சேர்த்தல், இயந்திர காற்றோட்டம் வழங்குதல், ECMO- ஒக்சிசன் வழங்குதல் என்பன ஏனைய கர்ப்பிணி பெண்களை விட அதிகளவு தேவைப்படுகின்றது. (Nachega.B.J et al December, 2020)
இந்தியாவைப் பொறுத்த வரையிலும் அதிகளவு கர்ப்பிணிப் பெண்கள் கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு இருந்தனர். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்களில்இவ் வைரஸ் தொற்றிற்கு பிறகு நுரையீரலில் பரவலான வடு உருவாகின்றது.

இவர்களின் நுரையீரல் மென்மையாக இருப்பதுடன் இரத்தக் குழாய்களில் இருந்து நுரையீரலுக்குச் சென்ற திரவம் அவர்களின் சுவாசப் பைகளை நிரப்பியுள்ளன. இரண்டாம் அலையின் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக ஆக்ஸிசன் தேவை என மருத்துவர்கள் கூறியிருந்தனர். அறுவைச் சிகிச்சை இடம்பெறுவதுடன் குழந்தைகளின் முன்கூட்டிய பிரசவத்திற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. மத்திய மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனை கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டது. இங்கும் கோவிட்-19 பாதிக்கப்பட்ட 25-35 வயதிற்கு இடைப்பட்ட 17 கர்ப்பிணி பெண்கள்; ஏப்ரல் மாதத்தில் மட்டும் இறந்திருந்தனர். இந்தியாவில் ஒவ்வொரு நாழும் 67,000 குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவில் தடுப்பூசி போட ஆரம்பித்த போது சுமார் 2 மில்லியன் பெண்கள் கர்ப்பத்தின் 9வது மாதத்தில் இருந்தனர். (இந்திய மகப்பேற்றியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்க கூட்டமைப்பு )

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் தடுப்பூசியை எதிர்பார்த்திருக்கும் தாய்மாரிற்கு முன்னுரிமை அளித்துள்ளன. ஆனால் இந்தியப் பெண்கள் ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பாலூட்டும் தாய்மாரிற்கு தடுப்பூசி போட பரிந்துரை செய்யப்பட்டாலும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. 7.2% ஆனவர்கள் ஆபத்துள்ள கர்ப்பிணி பெண்களாக இருப்பதுடன் தீவிர சிகிச்சை பிரிவுகளின் சேர்க்கை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாகவும் வைரஸ் தொற்று ஏற்படும் எனும் அச்சத்தில் மருத்துவமனைக்கு வருகின்ற கர்ப்பிணிப் பெண்களின் வருகை குறைவதாகவும் காணப்படுகின்றது என சர்வதேச மகளிர் மருத்துவ மற்றும் மகப்பேற்றியல் இதளில் குறிப்பிடப்பட்டு காணப்படுகின்றது. (Allana.A, 2021)

உலக சுகாதார நிறுவனம் மற்றும் UNFPA  ஆகியவை கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு சுகாதாரப் பணியாளர்களை வலியுறுத்துகின்றன. காரணம் பொது மக்களை விட கர்ப்பிணி பெண்கள் சுவாச நோய்களினால் அதிகம் பாதிக்கப்படுவதனால் ஆகும். (Friends of UNFPA-2021).
முன்மாதிரியான சாதனைகள் கொண்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மகப்பேற்று பராமரிப்பிற்கு இலங்கை ஒரு முன்மாதிரியாக உள்ளது. அதிக வருமானம் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது பிரசவத்தின் போது திறமையான பிறப்பு வருகையை பெறும் இலங்கை தாய்மார்களின் சதவிகிதம் 99.5மூ ற்கும் அதிகமாக உள்ளது. 85மூ சிறப்பு மகப்பேற்றியல் நிபுணர்களின் சேவையை கொண்டுள்ளது. ((Patabendige.M March 2021)

இந்த வகையில் கர்ப்பிணி பெண்களின் கல்வி மட்டம் என்பது பெரும் சவாலாகக் காணப்படுகின்றது. அதிகளவான கர்ப்பிணிப் பெண்கள் தமது பாடசாலைக் கல்வியை முடிக்காத நிலையில், சுகாதார ரீதியான நடைமுறைகள் குறித்த விளக்கங்களை சரியான முறையில் பெற்றுக்கொள்வதென்பது கடினமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அதே நேரம் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் வட்சப், வைபர், பேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளப்பாவனைகள் குறித்தோ அல்லது இணையத்தின் மூலமாகவோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவ்வாறு தகவல்களைப் பெற்றுக்கொள்கின்ற போதும் அவற்றின் மீதான நம்பிக்கை இன்மை என்பது ஏற்படுகின்றது. அதே போன்று பிரசவம் குறித்த பதட்டம், கர்ப்ப நிலை, கருச்சிதைவு வரலாறு, பிரசவ அனுபவம் என்பனவும் இவர்களின் அறிவு, உளப்பாங்கு, நடத்தையில் தாக்கம் செலுத்துகின்றது. முன்னர் கர்ப்பம் தரித்து கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள் கொரோனா கால சூழலில் மருத்துவ ஆலோசனைகளை தவிர்க்க விரும்பவில்லை. அத்துடன் கருவினுடைய ஆரோக்கிய நிலை மற்றும் முன்னர் ஏற்பட்ட அல்லது பார்த்த அனுபவங்களினால் இவர்களுக்கு பிரசவம் குறித்த அச்சம் ஏற்படுகின்றது. இந் நிலையில் கொரோனா குறித்த தெளிவினை அவர்கள் கொண்டிருந்தாலும் தமது ஆரோக்கிய நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றுவருகின்றனர். இதன் படி ஆரோக்கியத்தை நாடிச்செல்லும் நடத்தை என்பது முக்கிய காரணியாகக் காணப்படுகின்றது. மேலும் கர்ப்பிணிப் பெண்களின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு , வயது, அறிதிறன், சுய மதிப்பீடு, நோய் நிலை என்பனவும் முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன. வீட்டு வேலைகள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் இவர்கள் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் கொரோனா குறித்த தகவல்களைத் தேடி அறிந்துகொள்வதற்கான ஆர்வமும் குறைவாகவே காணப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்த மட்டில் இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார ரீதியான நெருக்கீடு என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.

இங்கு குறித்த அளவான கர்ப்பிணி பெண்கள் தமது குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக கொரோனா கால சூழலிலும் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. அதே நேரம் இவர்களினால் சுகாதார பொறிமுறைகளைப் பின்பற்றுவதற்குரிய சுகாதார உபகரணங்களின் குறைந்தளவான கிடைப்பனவு காரணமாக சுகாதார நடைமுறைகளினை சரிவர பின்பற்ற முடியவில்லை. உயர்குருதி அமுக்கம், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்களின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்ற கர்ப்பிணி பெண்கள் கொரோனா கால சூழ்நிலையில் கர்ப்பத்தின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் மட்டுமல்லாது கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டிய நிலையில் இவர்கள் காணப்படுகின்றனர். இங்கு கொரோனா குறித்த புரிதலினை கொண்டிருப்பினும் இன்றைய காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மை, போதியளவு வருமானம் இன்மை, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாமை மற்றும் தமது உடல் நிலை காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குடும்ப பொருளாதார பின்னணி, வாழ்க்கைத் துணையின் கல்வி நிலை மட்டம், கருத்து ரீதியான முரண்பாடுகள், தனிப்பட்ட மருத்துவ ஆலோசகர்கள் இன்மை போன்ற காரணிகள் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகின்றன. கிராமப்புறங்களில் வசிக்கும் அநேகமான கர்ப்பிணி பெண்கள் கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்களினைச் சேர்ந்தவர்களாகவும் பொருளாதார ரீதியான போதியளவு ஆதரவு இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இதனால் பெரும்பாலானவர்களினால் தமது உடல், உள ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு  தேவையான விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.

அநேகமான கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மார் கூலி வேலைக்கு செல்கின்ற நிலையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார பின்னடைவு காரணமாக தமது அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றிக்கொள்வதற்கு திண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலையில் தமது ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எந்தவிதமான வழிகளும் இல்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர்.

சுற்றுச் சூழல், மருத்துவ வசதிகளின் கிடைப்பனவு, ஊடக அணுகல், தவறான கருத்துக்கள் பரப்பப்படல், தகவல்களை பெற்றுக்கொள்வதிலான  சவால்கள், சுகாதார உபகரணங்களின் கிடைப்பனவு என்பனவும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகின்றன. ஊடகங்கள் அதிகளவு தகல்களை பரப்பினாலும் அவ் ஊடகங்கள் குறித்தும் தகவல்களை பெற்றுக்கொள்வது குறித்தும் போதியளவு தெளிவு இல்லாதவர்களினால் சுகாதார ரீதியான தகவல்களை சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள முடியாது போவதுடன் அவ்வாறு பரப்பப்படுகின்ற தகவல்கள் தவறான தகவல்களாக அமைகின்ற போது அத் தகவல்கள் கர்ப்பிணிப் பெண்களிடத்தில் கொரோனா பற்றியும் சுகாதார நடைமுறைகள் பற்றி
யும் தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகின்றது.

இதனால் கொரோனா குறித்த அவர்களின் அறிவு நிலை பாதிப்படைவதுடன் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.

நாடளாவிய முடக்க நிலை மற்றும் பொருளாதார சிக்கலிலும் கர்ப்பிணிப் பெண்கள் தமது மாதாந்த மருத்துவ பரிசோதனைக்காக பொது வைத்தியசாலைக்கு சென்றுவர வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல், உள ரீதியாக அதிகளவு பாதுகாப்பு தேவைப்படுகின்ற குழுக்களாகக் காணப்படுகின்றனர். இன்று பெரும்பான்மையான தகவல்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக கடத்தப்பட்டு வருகின்ற நிலையில் கிராமப்புறங்களில் சமூக வலைத்தளங்களுடனான அணுகல் என்பது குறைவாகக் காணப்படுகின்றது. அவ்வாறு அறிந்திருப்பினும் அதனை பின்பற்றுவதற்கான வசதி வாய்ப்புக்கள் அனைவரிடமும் இல்லாது போகின்றபோது இவர்களின் ஆரோக்கிய நிலை பாதிப்படைகின்றது.

எதிர்கால சந்ததியினரை உருவாக்குகின்ற நிலையில் கர்ப்பிணி பெண்கள் கோவிட்-19 ன் போது மேற்கொள்ளும் செயற்பாடுகள், கோவிட்-19 குறித்த அறிவு, உளப்பாங்கு குறித்தும் இன்றைய பொருளாதார சிக்கலில் இருந்து எவ்வாறு தம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.