Home செய்திகள் கறைபடிந்த கறுப்பு ஜூலை-துரைசாமி நடராஜா  

கறைபடிந்த கறுப்பு ஜூலை-துரைசாமி நடராஜா  

165 Views

1983 ம் ஆண்டின் கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயத்தை எழுதிச் சென்றுள்ளது. இனவாதம் என்னும் கோர அரக்கன் யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் இதயமாக விளங்கிய நூலகத்தை எரித்து, அம்மக்களின் அறிவுச் சுடரை அணைத்துவிட ஜூலை வன்முறை ஏதுவானது.

மேலும் வடபகுதி மக்கள் மற்றும் மலையக மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களும் கறுப்பு ஜுலை வன்முறைகளால் சொல்லொணாத் துன்ப துயரங்களையும், உயிர் மற்றும் உடைமைச் சேதங்களையும் அனுபவிக்க நேர்ந்தமை இலங்கை வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வாகும். இனவாதத்தின் மூலமாக இலங்கையில் கடந்த காலத்தில் இரத்த ஆறு ஓடியபோதும் இனவாத சிந்தனையாளர்கள் இன்னும் இதிலிருந்தும் விடுபடுவதாக இல்லை என்பது இலங்கைக்கு சாபக்கேடேயாகும்.

இலங்கை இனவாதத்துக்கு பெயர்போன ஒரு நாடாகும். அரசியல்வாதிகள் தமது இருப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாதத்தைக் காலத்துக்கு காலம் ஏவிவிடுவது ஒன்றும் புதிய விடயமல்ல. மக்களை பிரித்தாளுவதன் ஊடாக தமது காரியத்தைச் சாதித்துக் கொள்ள இனவாதிகள் முற்படும் நிலையில் அப்பாவி மக்கள் பலிக்கடாவாக ஆகிவருகின்றனர். இத்தகைய ஒரு பின்புலத்தை மையப்படுத்தியே ஜூலை கலவரத்திற்கு அடித்தளமிடப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக எழுச்சியை முடங்கச்செய்து அம்மக்களை சகல வழிகளிலும் நிர்வாணப்படுத்த வேண்டும் என்ற பேரினவாத சிந்தனை முடுக்கி விடப்பட்ட நிலையில், கறுப்பு ஜுலையில் அது செயல்வடிவம் பெற்றது. ஜூலை 23 ம் திகதி ஆரம்பித்த வன்முறை தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் இடம்பெற்ற நிலையில் அது தணிவதற்கு பத்து நாட்கள் வரை சென்றது. இதன் தழும்புகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் அரச தரப்பினரிடையே மெத்தனப்போக்கு அல்லது கரிசனையற்ற வெளிப்பாடு காணப்பட்ட நிலையில் காடையர்களின் கைவரிசை நீண்டுகொண்டு சென்றது.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னராயினும் சரி, அல்லது சுதந்திரம் பெறுவதற்கு முன்னராயினும் சரி, இந்திய வம்சாவளி மக்கள் தொடர்ச்சியாகவே பல்வேறு நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்து வந்துள்ளமையை வரலாறு தெளிவுபடுத்தும். இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்போகின்றது என்றவுடன்  காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு  நாடு ஒரு புதிய பாதையில் பயணிக்கப் போகின்றது என்று தமிழ் மக்கள் எண்ணம் கொண்டிருந்தனர்.  எனினும் இது மறுதலிக்கப்பட்ட நிலையில் சிறுபான்மையினரை ஓரம் கட்டும் நிலைமைகள் தொடர்ந்ததோடு, நவ காலனித்துவத்தில் இலங்கை அடியெடுத்து வைத்த வரலாறே தோற்றம் பெற்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பியும் தனது கட்டுரை ஒன்றிலே இதனைத் தெளிவுபடுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  கவியரசு வைரமுத்து கூறுவதுபோல பட்டு வேட்டி கனவில் இருந்த மக்களின் கோவணமும் சுதந்திரத்தின் பின்னர் களவாடப்பட்டது என்பதே உண்மையாகும்.

மழுங்கடிக்கப்பட்ட எதிர்பார்ப்பு

சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான வன்முறைகளில் ஒன்றாக 1983ம் ஆண்டின் ஜூலை வன்முறை அமைந்தது. ஜூலை வன்முறையால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுள் மலையக மக்கள் கூடுதலான இழப்புக்களைச் சந்திக்க வேண்டி நேர்ந்ததும் தெரிந்த விடயமேயாகும். கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் இந்திய வம்சாவளி இனத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் வர்த்தகத்துறையில் கொடிகட்டிப் பறந்தனர். காணி, வீடு என்று சொத்துக்களையும் இவர்கள் அதிகமாக சேர்த்திருந்தனர். போதாக்குறைக்கு இந்தியாவிலும் இவர்கள் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதில் ஈடுபாடு காட்டி இருந்தனர். இந்நிலையில் இந்திய வம்சாவளி மக்களின் மீது ஏற்பட்ட பொறாமையுணர்வு அவர்களின் மீது வன்முறைகளைக் காடையர்கள் கட்டவிழ்த்து விடுவதற்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. மலையகப் பகுதிகளிலும் இதன் தாக்கம் அதிகமாக எதிரொலித்தது. தமிழ் மக்களின் கடைகளுக்குத் தீவைத்தல், பொருட்களைச் சூறையாடுதல், இளம்பெண்களைக் கற்பழித்தல் போன்ற கொடூரங்கள் அதிகமாகவே இடம்பெற்றன. பெற்றோருக்கு முன்னால் பிள்ளைகளை நிர்வாணப்படுத்தும் கொடூரங்களுக்கும் மலையகத்தில் அப்போது குறைவிருக்கவில்லை என்பது மூத்தோர்களின் கருத்தாக இருக்கின்றது.

கட்டவிழ்த்து விடப்பட்ட காடையர்களின் தாக்குதல் காரணமாக உயிரிழப்புக்களையும் மலையக மக்கள் சந்திக்க வேண்டி இருந்தது. தமது வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டதன் காரணமாக வர்த்தகர்கள் பலர் இலங்கையில் இருந்தும் இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்ற நிகழ்வுகளும் அதிகமாகவே  இடம்பெற்றன. இதனால் இந்திய வம்சாவளி மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கமடைந்ததோடு இனவாதிகளின் எண்ணமும் ஈடேறியது. இடம்பெயர்ந்த தமிழ் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களைக் கைப்பற்றி அல்லது விலைக்கு வாங்கி பெரும்பான்மையினர் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்திக் கொண்டனர். இது ஏற்கனவே  திட்டமிட்ட ஒரு செயற்பாட்டின் வடிவமாக அமைந்தது. அத்தோடு  உயிரிழந்தவர்களின் நினைவில், பிரிவில் இருந்தும் மீளமுடியாத நிலையிலும் உடைமைகளைப்  பறிகொடுத்த சோகத்திலும் துன்பம் தாளவொண்ணாது  சிலர் உளரீதியான சிக்கல்களுக்கும் ஆளாகியமையும் தெரிந்த விடயமாகும். இத்தகைய சிலர் மலையக நகர வீதிகளில் சுற்றித்திரிந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை ஜூலை வன்முறையால் இன்னும் சிலர் உடல் அவயங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக உருவெடுத்திருந்ததையும் குறிப்பிட்டாதல் வேண்டும். இந்தத் தழும்புகள் நீண்ட காலத்திற்கு அவர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்தி இருந்தன.  இத்தகையோர் சிலர் உழைப்பிற்கு வழியின்றி அல்லது உழைப்பதற்கு  உடல் ஒத்துழைக்காத நிலையில் பிச்சைக்காரர்களாகவும் உருவெடுத்திருந்தனர். இது கொடுமையிலும் கொடுமையாகும். இதனிடையே  ஜூலை வன்முறை காரணமாக மலையகத்தைச் சேர்ந்த மூளைசாலிகளின் வெளியேற்றமும் இடம் பெற்றிருந்தது. இலங்கை வாழ்வதற்குப் பொருத்தமற்ற நாடு. இங்கிருந்தால் தமதும் தமது பிள்ளைகளினதும் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற சிந்தனையை மையப்படுத்தி மலையகத்தில் இருந்த மூளைசாலிகள் சிலர் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறாக ஜூலை வன்முறையால் இந்திய வம்சாவளி மக்கள் பலர் சர்வதேச நாடுகளுக்கு இடம்பெயர்ந்த நிலையில், அது இம்மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி நிலை ஏற்படுவதற்கும் ஏதுவாக அமைந்தது. இதேவேளை இனக்கலவரங்களை மையப்படுத்தி மலையக மக்கள் சிலர் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடபகுதிக்கு குடிபெயர்ந்ததையும் குறிப்பிட்டாதல் வேண்டும். இத்தகையோர் பிற்காலத்தில் தமது அடையாளங்களை மறந்து உள்ளுர் மக்களுடன் கலந்து வாழும் ஒரு போக்கும் மேலோங்கியது. இவ்வாறாக மலையக மக்களின் இடம்பெயர்வானது அச்சமூகத்தின்ரின் அரசியல் பிரதிநிதித்துவ வீழ்ச்சிக்கும் அடிகோலியது. இதனால் இம்மக்களின் அபிவிருத்தி போன்ற விடயங்களிலும் தொய்வு நிலை ஏற்பட்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஜூலை வன்முறையின் பின்னரான நிலைமைகள் மலையக மாணவர்களிடையே கல்வி ரீதியான தாக்கங்கள் ஏற்படுவதற்கும் உந்துசக்தியாகி இருந்தது.

1948 ம் ஆண்டு இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையும் பிரசாவுரிமையும் ஐக்கிய தேசியக் கட்சியினால் பறிக்கப்பட்டது. இது குறித்து அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக்க இனவாதத்தோடு தொடர்புபடுத்திப் பின்வருமாறு கூறியிருந்தார். “இது பல முகங்களைக் கொண்ட ஒரு பாவச் செயலாகும். அதீத தேசியவாதிகளான நம்மில் பலர் எமது மண்ணைப் பறித்து அதில் மக்களைக் குடியேற்றிய  காலனித்துவ அடக்குமுறையாளர்களுடன் நட்பு பாராட்டுகின்றோம்.                                                                                                                                                                              ஆனால் பலியாக்கப்பட்ட இம்மக்களை மறக்கின்றோம். பின்னர் அவர்களது குடியுரிமையைப் பறித்து அவர்களை இரண்டாம் தர பிரஜைகளாக்கினோம். எனினும் அவர்களின் உழைப்பில்தான் நாம் எல்லோரும் வாழ்ந்தோம். இந்தப் பாவத்துக்கு ஒரு பெயர் உண்டு. அதுதான் இனவாதம்” என்கிறார் ஜயதிலக்க. எனவே இனவாதத்தின் உக்கிரம் மலையக மக்களின் வாழ்வினை பலமுறை சிதைத்திருக்கின்றது. கறுப்பு ஜூலையும் அதில் ஒன்றாகும். இலங்கையின் இனவாதம் பல்வேறு தழும்புகளையும் தோற்றுவித்துள்ள நிலையில் இனவாத சிந்தனையாளர்கள் இன்னும் திருந்துவதாக இல்லை.காலத்துக்கு காலம் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் பின்னணியில் இனவாதம் தொக்கி நிற்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இளைஞர் கருத்து

இலங்கையின் கறுப்பு ஜூலை இப்போது நினைவு கூரப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எல்.இராகவன் என்ற இளைஞர் தமது கருத்தினைப் பின்வருமாறு வலியுறுத்தி இருந்தார். “எனக்கு இப்போது வயது 27 ஆகின்றது. 1983 கறுப்பு ஜூலைக் கொடூரத்தை நான் நேரில் பார்க்கவில்லை. எனினும் மூத்தோர்கள் அதுபற்றி சொல்லக் கேட்டு மனவருத்தம் அடைந்திருக்கின்றேன். அப்பாவித் தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த காடையர்களால், கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் மன்னிக்க முடியாதவை.                                                                                                                                                                                                              மக்கள் மாக்களாக (விலங்குகளாக)  செயற்பட்டு உயிர் மற்றும் உடைமைச் சேதங்களை ஏற்படுத்திய கொடூரம் மோசமானதாகும். அதிலும் அரசாங்கம் இந்த வன்முறையை அடக்குவதில்  உரியவாறு செயற்படவில்லை என்ற முன்வைப்புக்களானது அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. இங்கு அரசாங்கம் “இலங்கையர்” என்ற பொதுவரையரைக்குள் மக்களை நோக்குவதற்கு தவறி இருப்பதாகவே கருதுகின்றேன். இத்தகைய கொடூரங்கள் இலங்கையின் வரலாற்றில் இனியும் இடம்பெறாதவாறு துடைத்தெறியப்படுதல் வேண்டும்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி, அனைத்து இனங்களும் கை கோர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் இளைஞர் போராட்டத்தை காலிமுகத்திடலில் ஆரம்பித்தோம். இதில் கணிசமான வெற்றியையும் பெற்றுக் கொண்டுள்ளோம். இந்நிலையில் எமது போராட்டங்களைத் திசை திருப்புவதற்கோ அல்லது மழுங்கடிப்பதற்கோ யாரும் முற்பட்டால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை ” என்றார். இதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றுமொரு சிங்கள இளைஞரான ஆனந்த கமகே ” கறுப்பு ஜூலை இனவாதத்தின் உச்சக் கட்டமாகும். இத்தகைய சம்பவங்களை வேரறுப்பதற்காகவே நாங்கள் இன, மத, மொழி பேதமின்றி கை கோர்த்திருக்கின்றோம். எங்களின் ஐக்கியம் இனியும் இந்த நாட்டில் ஒரு கறுப்பு ஜூலை உருவாக இடமளிக்காது” என்றார்.

எவ்வாறெனினும் கறுப்பு ஜூலை என்பது இலங்கைக்கு சர்வதேசத்தின் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு மாதமாகும். இதன் தாக்க விளைவுகளால் இன்னும் பல தமிழ் உள்ளங்கள் கனத்துப்போய் இருக்கின்றன. இத்தகைய கோர நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மனித நேயத்தை கட்டியெழுப்புவதோடு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version