சனநாயகப் போராட்டங்களைப் பயங்கரவாதத்துள் அடக்கச் சிறீலங்கா பெருமுயற்சி

இலக்கு மின்னிதழ் 143 இற்கான ஆசிரியர் தலையங்கம்

சட்டவாக்கம், நிர்வாகம், சட்ட அமுலாக்கம் என்னும் சனநாயக ஆட்சியின் மூன்று வலுக்களையும் ஒரே வலுவாக, வலுவேறாக்கமின்றித் தன்னிடத்திலேயே குவித்துக் கொள்ளும் எந்தக் கட்டமைப்பும் சர்வாதிகார ஆட்சியினைப் பாராளுமன்றத்தின் வழி நிறுவிக் கொள்ளும்.

இதற்கு கடந்த நூற்றாண்டின் தொடக்கக் கால உதாரணமாக ஹிட்லரும், இந்த நூற்றாண்டின் தொடக்கக் கால உதாரணமாகச் சிறீலங்காவின் அரச அதிபர் கோத்தபாய ராசபக்சவும் உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் மூலமே ஹிட்லரைப் போல சர்வாதிகாரத்தை, தனது ஆட்சியாக வெளிப்படுத்தும் இன்றைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா, தனது ஆட்சிக்கு எதிரான மக்களின் சனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எடுத்துள்ள புதிய அரசியல் செயற்பாடே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிபுணத்துவர்களின் விதந்துரையின் பேரில் திருத்துதல் என்னும் இன்றைய முயற்சி.

பாராளுமன்றக் கொடுங்கோன்மை மூலம் தாம் நடத்திய ஈழத்தமிழின அழிப்பை நாட்டின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தேசிய பாதுகாப்புக்கான செயற்பாடு எனக் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நியாயப்படுத்தி, அனைத்துலக சட்டங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வரும் ராசபக்ச குடும்ப ஆட்சியாளர்கள்,  இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதத் தடைச் சட்டம், வரிச் சலுகைகளுக்கான முன்நிபந்தனையாக வைக்கப்படும் ஒழுங்காற்று நடவடிக்கையைச் சமாளிப்பதற்கான புதிய முயற்சியாக, இந்த நிபுணத்துவப் பரிந்துரைகளின் வழி தங்களின் விருப்புக்கு ஏற்ப பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தும் செயற்பாட்டைத் தொடங்கியுள்ளது.

இந்த நிபுணத்துவக் குழு எதனைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பாராளுமன்ற வழிச் சர்வாதிகாரியாகத் தன்னை வளர்த்து வரும் கோத்தபாய ராசபக்ச, தானும் தனது நீதித்துறை அமைச்சரான அலிசப்ரியும், தனது வெளியுறவு அமைச்சரான தினேஸ் குணவர்த்தனாவும் இணைந்து தயாரித்த நெறிப்படுத்தல் அறிக்கை மூலம் தெளிவாக்கி, அதனையே தங்கள் அறிக்கை என இந்த நிபுணத்துவக் குழுவிடம் கையளித்து, அதனைப் பரிந்துரைக்குமாறு மூன்று மாதகால எல்லையினையும் வரையறுத்துள்ளனர்.

இந்த வகையில், பரிந்துரைப்புக்கான நிபுணர்களாக அரசால் நியமிக்கப் பட்டவர் களுக்குக் கூட சுதந்திரமாக அதனைச் செய்யும் உரிமை மறுக்கப் பட்டுள்ளதை, உலகுக்கு உலகத் தமிழர்கள் தெளிவாக்கி, மக்கள் சனநாயகப் போராட்டங்களைப் பயங்கரவாதத்துள் உள்ளடக்கி, ஆயுத படைபலம் கொண்டு, போராட்டங்களை ஒடுக்கும் சட்டவாக்க முயற்சியே இந்த நிபுணத்துவக்குழுப் பரிந்துரை நாடகத்தின் உள்நோக்கு என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அதுவும் 2009இல் ஈழத்தமிழின அழிப்பினைச் சிறீலங்கா முள்ளிவாய்க்காலில் நடத்தியதன் பின்னர், துப்பாக்கிகள் மௌனிக்கின்றன எனத் தங்கள் ஆயுத எதிர்ப்பை நிறுத்தி, சனநாயக வழிகளில் மீண்டும் தங்கள் அரசியல் உரிமைகளை அடையப் போராடிவரும் ஈழத் தமிழர்களுக்கான சனநாயகப் போராட்ட மறுப்பு முயற்சியே இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துதல் என்பதன் தலைமை நோக்கு.

ஈழத் தமிழர்களையும், முஸ்லிம் மக்களையும் இலக்கு வைத்து நடத்தப்படும் எந்தச் சிங்கள பௌத்த சட்டவாக்கங்களையும் சிறுபான்மையினத்தவர்களையே அமைச்சர்களாகக் கொண்டு நிறைவேற்றுவிப்பது, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நீண்டகால உத்தி. அந்த வகையில்தான் முஸ்லிமான அலிசப்ரி அவர்களையே நீதி அமைச்சராக வைத்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில், இலங்கையின் இனத்துவச் சிறுபான்மையினங்களாக உள்ள ஈழத் தமிழர்களின் அனைத்துலகத் தொடர்பும், முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தை மதிக்கும் சட்டங்களும் ஒரே கல்லில் இருமாங்காய்களாக வீழ்த்தப்படுகின்றன. இதற்கான மூன்று பரப்புக்களாக  இணையவழி, கறுப்பு பண மோசடி, மெய்நிகர் நாணய அம்சங்கள் என்ற மூன்றும் அமைச்சர்களின் அறிக்கையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குற்றங்கள் இடம்பெற்றால், சட்ட அமுலாக்கத்திற்கு நாட்டில் உள்ள சட்டங்களே போதியதாக உள்ள நிலையில், அவற்றைப் பயன்படுத்திச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டப் பாதுகாப்புடன், உரிய நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் அதனை மேற்கொள்ளாது, இவற்றை நாட்டின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் எதிரான செயற்பாடுகள் என பூதாகாரப்படுத்தி, அதன் பின்னணியில் சட்டத்தின் ஆட்சியை தங்கள் கைகளில் மேலும் எடுத்துக் கொள்வதே இந்த நிபுணத்துவப் பரிந்துரைக் குழு முயற்சியின் உள்நோக்கு என்பதை உலகத் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து வெளிப்படுத்த வேண்டிய காலமிது.

உண்மையில் அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவான பாராளுமன்ற ஆட்சி முறைமை ஒன்றைச் சிறீலங்காவில் தோற்றுவிக்க ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் சிறீலங்கா ஈடுபட்டு, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக உலக மக்கள் இனத்தின் தொன்மையும், தொடர்ச்சியுமான இறைமையுடன் ஈழத்தில் வாழ்ந்து வரும் ஈழமக்களின் நிலைமாற்று நீதியையும், புனர்வாழ்வு, புனர்நிர்மாண வாழ்வியல் முயற்சிகளையும் இவ்வாறான நரித்தந்திர, ராஜதந்திர முயற்சிகள் மூலம் தடுத்து வருவது சிறீலங்காவின் அரசியல் வரலாறாக உள்ளது.

இதனைப் பிரித்தானியா, இந்தியா உட்பட்ட ஈழத் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட நாடுகள் உட்பட அனைத்து உலக நாடுகளும், உலக அமைப்புக்களும் கவனத்தில் எடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துதல் என்ற நாடகத்தை விடுத்து, அதனை இரத்து செய்யுமாறு சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுத்தாலே, மக்களின் அடிப்படை மனித உரிமைகளும்,  சனநாயகமும் பாதுகாக்கப் படும் என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது.

  ilakku-weekly-epaper-143-august-15-2021