Home உலகச் செய்திகள் ‘தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை நிறைவேற்ற வேண்டும்’- வைகோவின் கேள்விக்கு அமைச்சர் பதில்

‘தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை நிறைவேற்ற வேண்டும்’- வைகோவின் கேள்விக்கு அமைச்சர் பதில்

274 Views

indiatv7dd492 bjp 1627561122 'தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை நிறைவேற்ற வேண்டும்'- வைகோவின் கேள்விக்கு அமைச்சர் பதில்

தமிழ் சமூகத்தின் நலன்களை பாதுகாப்பது குறித்த தனது பொறுப்பை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? என கேள்வி எழுப்பி ஆறு முக்கிய கேள்விகளை முன் வைத்திருந்தார்.

அதாவது,

1.இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு நீதி விசாரணை கோரி இருக்கின்றார்களா?

  1. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
  2. இலங்கை அரசு இதுவரை எந்தவிதமான உள்ளக விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறுவதற்கான முயற்சிகளை, இந்திய அரசு மேற்கொள்ளுமா?
  3. இலங்கையில் முஸ்லிம்கள் உடல் அடக்க உரிமைகளைத் திரும்பத் தருவதற்கும், தமிழர்களுடைய நிலங்களில் இலங்கைப் படையினர் நிலை கொண்டு, தமிழர்களைக் கண்காணித்து வருவதையும், அவர்கள் மீது தொடர் அடக்கு முறைகளைத் தடுப்பதற்கும், தூதரக முறையில் இந்தியா ஏதேனும் முயற்சிகளை மேற் கொண்டதா?
  4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக;
  5. இல்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன?

வைகோவின் குறித்த ஆறு கேள்விகளுக்கும் உள்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளிக்கையில்,

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு விசாரணை கோரி இருக்கின்றன. பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சமயங்கள் கொண்ட இலங்கை நாட்டில், தமிழர் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமமாக வாழ்வதற்கும், பாதுகாப்பு மற்றும் சமய நல்லிணக்கம் நிலவுதற்கும், அவர்களுடைய முன்னேற்றம், எதிர்காலக் கனவுகளை, ஒன்றுபட்ட இலங்கை என்ற நாட்டுக்கு உள்ளே நிறைவேற்றிக் கொள்வதற்கும், இந்தியா எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றது.

இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றது; பல்வேறு நிலைகளில் இருதரப்பு பேச்சுகள் நடைபெற்று உள்ளன; இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதி மொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றது.

2019, 2020 ஆம் ஆண்டுகளில், இலங்கைக் குடிஅரசின் தலைவர் இந்தியா வருகை தந்த போதும், 2020 செப்டெம்பர் 26 ஆம்நாள், இரண்டு நாடுகளின் பிரதமர்கள் இணையக் காணொளி வழியாக நடத்திய இருதரப்புப் பேச்சுகளிலும், 2021 ஜனவரி மாதம், இந்திய அயல் உறவு அமைச்சர் இலங்கை சென்ற போதும், மேற்கண்ட கருத்துகளை, இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தின் (United Nations Human Rights Council – UNHRC), 46 ஆவது கூட்டத் தொடரில், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிய வாழ்வு என்ற தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தியது.

தமிழர்களின் உரிமைகளை மதிக்கின்ற வகையில், உண்மையான அதிகாரப் பகிர்வு தான், இலங்கையின் ஒருமைப் பாட்டைப் பாதுகாக்கும் என்பதையும் எடுத்துக் கூறியது.

கூடுதலாக, இலங்கை அரசு நல்லிணக்க  முயற்சிகளை மேற்கொள்ளவும், மறுவாழ்வுப் பணிகளைச் செயல் படுத்தவும், தமிழர்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றவும், பன்னாட்டு சமுதாயத்துடன் இணைந்து அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும்,  விடுதலை உணர்வுடன், மனித உரிமைகள் பாதுகாப்புடன் வாழ வகை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு பெறுப்புக் கூறுவது உள்நாட்டு பொறி முறைகள் மூலம் சாத்தியமில்லை என்பதால் இந்தியா சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் வி முரளீதரன் நேரடியான பதிலை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version