IMF உடனான இலங்கையின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் – சீனா

சர்வதேச நாணய நிதியத்தில் சீனாவும் அங்கத்துவம் பெற்றுள்ளதால், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் என சீனா நம்புவதாக சீன தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூட்டத்தின் போது சீன தூதுவர்  உறுதியளித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong-இற்கும் இடையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

சுற்றுலாவை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும்  Qi Zhenhong இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

தென் மாகாணத்தை மையமாகக் கொண்ட ஹம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில் கைத்தொழில் மற்றும் விவசாயம் தொடர்பான சீன முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும்  இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் உடன்பாட்டை எட்டும் நோக்குடன் இலங்கை அதிகாரிகள் கடன் மறுசீரமைப்பு ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடன் வழங்குநர்களுடன் முறையாகப் பணியை ஆரம்பிக்கும் முன்னர் கடன் நடவடிக்கைக்கான பகுப்பாய்வு கட்டமைப்பில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பங்குதாரர்களுக்கும் நியாயமான, நிலையான முடிவுகளை அடையக்கூடிய விரிவான கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் அதன் கடன் வழங்குநர்களுடன்  நம்பிக்கையுடன் செயற்பட கடமைப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.