இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது
இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமான கொள்கைகளையே இலங்கை எப்போதும் வகுத்து வந்துள்ள நிலையில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. இந்நிலையில் இந்தியாவை சமாளிக்கலாம் என நீங்கள் நினைத்து அதற்கு ஏனைய வல்லரசுகளுக்கு சில பகுதிகளையும் இந்தியாவிற்கு சில பகுதிகளையும் வழங்கலாம் எனக் கருதினால், இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு,பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு,வெகுசன ஊடக அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் வெளிவிவகார கொள்கையில் தேசிய வேலைத்திட்டம் உள்வாங்கப்படுவது அவசியம்.ஆனால் இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பெளத்த,சிங்கள கொள்கையில் பயணித்து, சிங்கள பெளத்த அடையாளத்தை வெளிப்படுத்தவே முனைகின்றனர். அதன் விளைவாக உள்நாட்டிலேயே எதிரிகளை உருவாக்கிக்கொண்டுள்ளன. இதற்கு தமிழர்கள் பிரதான இலக்காகியதுடன், இன்று முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொள்கையில் அரசு பயணிப்பதால் இந்த நாட்டின் தமிழர்கள், தென்னிந்திய தமிழர்களுடன் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் இலங்கையை இந்தியா ஆக்கிரமிக்கிறது என்ற நோக்கத்தில் பார்க்கும் மனநிலையும் உருவாக்கப்பட்டது. இவ்வாறான சூழலால் இந்தியாவையும் எதிரி என நினைக்கும் நிலை ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. ஆகவே இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமான கொள்கைகளையே இலங்கை எப்போதும் வகுத்து வந்துள்ளது. ஒவ்வொரு அரசும் இதே கொள்கையில் தான் பயணிக்கின்றன.

1980களில் ஜெயவர்த்தன அரசின் காலத்தில், உலக பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக உறவை பின்பற்றிய சூழ்நிலையில், இலங்கை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவை வெறுப்பேற்றியது. இதன் விளைவாக இந்தியா தலையிட்டு இலங்கையை அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்பட வேண்டாம் என வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நிலைமைகள் மாறின.

தற்போது உலகை வல்லரசாக சீனா ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், இலங்கை மீண்டும் சிங்கள பெளத்த கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு தமது அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ள சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் சீனாவின் நலனுக்காக அவர்கள் நாட்டுக்குள் ஊடுருவவும் இடமளித்துள்ளனர். சீனாவும் இதனை உறுதிப்படுத்திக்கொண்டு இலங்கையில் அவர்களின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இது பூகோள அரசியலில் பாரிய நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது.

வல்லரசுகளான இந்தியா, சீனா, அமெரிக்காவை நாட்டுக்குள் இடமளித்து இலங்கை நெருக்கடிக்குள் விழுந்துள்ளது. ஆனால் இந்த பூகோள அரசியலை இலங்கை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு முதலில் உள்நாட்டு கொள்கையில் மாற்றங்களை செய்தாக வேண்டும். அதன் மூலமாக நமது நலனுக்காக வல்லரசுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் நாம் அவ்வாறான வெளிப்படை கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்பதில்லை., சிங்கள பெளத்த பேரினவாதத்தையே ஆட்சியாளர்கள் கையில் தக்கவைத்துக்கொண்டுள்ளனர். இவர்கள் சிங்கள பெளத்த வாக்குகளில் ஆட்சிக்கு வந்ததாக கொண்டாடி வருகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய செயற்பாடு.

ஒரே நாடு ஒரே சட்டம் எனக் கூறி நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு அடிப்படைவாதியான ஞானசார தேரரை நியமித்துள்ளீர்கள், பல செயலணிகளில் இராணுவத்தை உள்நுழைத்துள்ளீர்கள். இந்த கொள்கை, ஒருபோதும் நலன்களுக்கு கைகொடுக்காது.

அரசியல் நிலைப்பாட்டில் எதுவாக இருந்தாலும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறித்து தனிப்பட்ட மரியாதையை நாம் கொண்டுள்ளோம். சட்ட வல்லுனராக மிகப்பெரிய மதிப்பை அவர்மீது கொண்டுள்ளேன். ஆனால் இப்போது அவர் வெளிவிவகார அமைச்சராக இத்தாலியில் கூறிய சில விடயங்களை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அதே மாநாட்டில் அவ்வாறான கருத்தை முன்வைத்தார். அவரது கொள்கை அதுவாகவே இருக்கும் என்பதில் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பீரிஸும் இந்த நாட்டில் பல்லின சமூகம், மத கலாசார அடையாளங்களை வெளிப்பாடு வேண்டிய அவசியம் இல்லையென கூறியது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இது பீரிஸின் நிலைப்பாடாக இருக்க கூடாது. சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சியில் இருக்கின்றோம் என அவரும் கூறுவது மதிப்புக்குரிய விடயம் அல்ல.

இன்று நாம் பல்வேறு பிரச்சினைகளில் சறுக்கி வருகின்றோம்.. இவ்வாறான நிலையில் உங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வரையில், பூகோள அரசியலில் வெற்றி கொள்ள முடியாது. குறிப்பாக இந்த வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம். அவர்களும் இங்கு வேறு வல்லரசுகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. இந்தியாவை சமாளிக்கலாம் என நீங்கள் நினைத்தால் அதற்கு ஏனைய வல்லரசுகளுக்கு சில பகுதிகளையும் இந்தியாவிற்கு சில பகுதிகளையும் வழங்கலாம் என நீங்கள் கருதினால் அது ஒருபோதும் வெற்றிபெறாது.

இதற்கு எமக்கு இருக்கும் ஒரே வழிமுறை, இலங்கையை பன்மைவாத நாடாக்குவதுடன் ,தேசிய கொள்கையை மாற்றிக்கொள்வதும், புதிய அரசியல் அமைப்பின் மூலமாக அதனை உறுதிப்படுத்துவதும் மட்டுமேயாகும். பிரிவுகளுக்கு இடமளிக்காது பூகோள அரசியலை கையாளுவதுமே சகலருக்கும் சாதகமாக அமையும் என்றார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்