இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கான சுதந்திர தினம் அல்ல-யாழ்.  பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்

இலங்கையின் சுதந்திர தினத்தினை தமிழர்கள்  கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ்.  பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேற்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார்,

எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கான சுதந்திர தினம் அல்ல. அது கரிநாள். எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த எழுச்சி பேரணியானது 07ஆம் திகதி மட்டக்களப்பில் நிறைவடையும். இந்த எழுச்சிப்பேரணியானது வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் நடைபெறும்.

சிவில் சமூக அமைப்புகளும் மாணவர்களும் இணைந்து இந்தபோராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். இந்த எழுச்சிப்பேரணி தொடர்பில் கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், பொது அமைப்புகள், அரசியல்வாதிகள் என பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேரணிக்கான ஆதரவினை கோரிய நிலையில் அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பேரெழுச்சியானது மக்கள் திரட்சியாக எழுச்சிபெற வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெளிக்கொணரப்பட்டு அதற்கான தீர்வுகள் எட்டப்படும் நிலைமையேற்படுத்தப்பட வேண்டும்.

கலைப்பீட மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் சில்வஸ்டர் ஜெஸ்ரின் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 04ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை எதிர்த்து கரிநாளாக அனுஸ்டிக்கவுள்ளோம்.

இதனை தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து காலை 10.00 மணியளவில் பேரணி பயணத்தை தொடங்கி கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பில் பேரணி எழுச்சியுடன் பூர்த்தியாகும்.

எதிர்வரும் 04ஆம் திகதி எழுச்சிப்பேரணி ஆரம்பிக்கும் அன்றைய நாளில் வடக்கு கிழக்கில் உள்ள 08மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வடக்கு கிழக்கினை பொறுத்த வரையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், நில அபகரிப்பு உட்பட பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்றார்கள்.

தமிழ் மக்களின் இவ்வாறான பிரச்சினைகள் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அதன்மூலம் அதற்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மக்களும், சிவில் அமைப்புகளும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பினை முன்வைக்கின்றோம் என்றார்.