இலங்கையில் அதிகரிக்கும் மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கை

இலங்கையில்  தற்போது பதிவாகும் மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 521 படுகொலைகள் பதிவாகியுள்ளன. எனினும் இவ்வாண்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் மாத்திரம் 435 படுகொலைகள் பதிவாகியுள்ளன. 

எனவே இதனைக் கருத்திற் கொண்டு குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையில் திருத்தத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வருமாறு :

உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் சட்டம், நடவடிக்கை முறை மற்றும் பிரயோகங்கள் தொடர்பாகப் பொருத்தமான திருத்தங்களை அடையாளங்கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்காக குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையை திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.