அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு – காங்கேயன்

மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு

அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு

பிரித்தானிய அரசியல் முறைமையில் கார்த்திகை மாதம் 11ம் திகதி 11 மணிக்கு தேசமாக மாட்சிமை தாங்கிய மகாராணி 2வது எலிசபேத் அவர்களின் தலைமையில் மக்கள் எழுந்து நின்று, இருநிமிட அமைதி வணக்கம் செய்து உலகப் பெரும்போரில் போரரடி உயிரிழந்த வீரர்களை நினைவுகூரல் தேசியப் பெருவிழா. தேசமெங்கும் சிவந்த பொப்பி மலர்ச்சின்னம் தேசிய வீரர்களின் அடையாளச் சின்னமாக மக்களால் கார்த்திகை மாதம் முழுவதும் அணியப்பட்டு, அதில் கிடைக்கும் நிதி நாட்டுக்காக உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளுக்காக அன்பளிப்புச் செய்யப்படுவதும் பொது மரபு.

இவ்வாறு உலகநாடுகள் ஒவ்வொன்றும் தாயக தேசிய தன்னாட்சிக்காகப் போராடிய தங்களின் தேசிய வீரர்களை நினைவுகூர்ந்து வீரவணக்கம் செய்தல் உலகப் பொதுத் தன்மையதான ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக சட்டங்களால் பாதுகாக்கப்படும் சட்டரீதியான தேசிய விழாக்களாக உள்ளன. கொடித்தினம் அமைத்து மாவீரர் குடும்பங்களைப் பேணுவதும் இன்றுவரை பலநாடுகளில் தொடர்கிறது.

இந்த உலக அரசியல் பொது முறைமைக்கு ஏற்ப, ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் முறைமையிலும் 27.11.1989 முதல் கார்த்திகை 27 இல் தங்களுடைய தேசிய வீரர்களை நினைவுகூரும்  மாவீரர் நாளை 32 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர். இன்று ஈழத்தமிழர்களும், உலகெங்கும்  புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும், இனவுணர்வுடைய தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இணைந்து உலகெங்கும் கொண்டாடும்  ஈழத்தமிழர் மாவீரர் நாள் உலகத் தமிழர் வரலாற்றில் தொடர்கிறது.

1982ம் ஆண்டு கார்த்திகை 27இல் ஈழத்தின் கம்பர்மலையைப் பிறப்பிடாகக் கொண்ட 21 வயது இளைஞர் செல்வச்சந்திரன் சத்தியநாதன், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் லெப்டினன்ட் சங்கராக மாலை 6மணி 05 நிமிடத்திற்கு தான் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தமிழக மண்ணில் முதல் வீரச்சாவு அடைந்தார்.  மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்புமதுரை கீரைத்துரை மயானத்தில் மாவீரப் பேரொளியாக இவரின் வித்துடல் ஒளியானது. இந்த வரலாற்றின் பின்னணியில்  ஏழு ஆண்டுகளின் பின்னர் 27.22.1989இல் அதுவரை வீரச்சாவடைந்த 1307 மாவீரர்களின் ஓளிவீச்சாக அடர்ந்த காட்டில் இருந்து மாவீரர் பேரொளி மேலெழுந்து ஒளிவீசத் தொடங்கியது. இந்த மாவீரப் பேரொளி முன்பாகத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஈழத்தமிழினத்தின் தேசிய விடுதலைப்போராட்ட வீரர்களை ஈழமக்கள் தேசமாக எழுந்து நின்று ஒளியேற்றித் தொழுதேத்தும்  மாவீர்நாள் ஈழமக்களின் தேசிய வீரர்கள் நினைவேந்து நாளாகத் தொடக்கி வைக்கப்பட்டமை வரலாறு.

அன்று முதல் இன்று வரை ஈழத்தமிழ் மக்களின் மாவீரர் நாளான கார்த்திகை 27 அனைத்துலக நாடுகளின் மன்றம் எவ்வாறு ஒரு மக்களினம் தன் மாவீர்களைத் தனது தேசியச் சொத்தாகப் போற்றுவதை அனைத்துலகச் சட்டங்களின் மூலம் வரையறுத்து உள்ளதோ அந்த வரைமுறைகளுக்கு அமைய ஈழத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர்களால் மாவீரர்நாள்முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆயினும் 17.05.2009 இல் இன்றைய மில்லேனியத்தின் முதல் இனஅழிப்பாக கடந்த நூற்றாண்டின்  ஹிட்லரின் இனஅழிப்புக் கொடுமைகளை வெல்லும் வகையில் மிகக்கொடுமையான ஈழத்தமிழின அழிப்பை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தியது சிறிலங்கா அரசாங்கம்.

மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்புஅன்று முதல் இன்று வரை அனைத்துலகச் சட்டங்களை மீறி, மனிதாயத்திற்கு எதிரான குற்றமாக, யுத்தக் குற்றமாக, மனித உரிமைகள் வன்முறைக் குற்றமாக, ஈழத்தமிழ் மக்களின் மாவீரர் நாளை நோக்கிய நிகழ்ச்சித் திட்டமிடல்களையும், மாவீரத் தினத்தையும், மாவீரர் துயிலகங்களையும், மாவீரர் பொதுச் சுடரேற்றும் தமிழர் தாயகத்தின் பலபாகங்களில் உள்ள பொது மேடைகளையும் சிதைக்கும் குலைக்கும் அனைத்துலகக் குற்றச் செயல்களை அனைத்துலகச் சட்டங்களுக்கு எள்ளளவும் மதிப்பின்றி தொடர்கின்றது.

அதிலும் சிறிலங்காப் பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தைத் தனது சிங்கள நாடு சிங்கள மொழி சிங்கள பௌத்த மதம் என்னும் ஒரு நாடு ஒரு சட்ட ஆட்சிமுறைமையை உருவாக்கப் பயன்படுத்தித் தமிழர்களின் மக்களாட்சிக்கான பங்களிப்பை மறுக்கும் போக்குக் கொண்டவர்கள் சிங்கள பௌத்த காவலர்களான ராசபக்ச குடும்ப ஆட்சியாளர்கள்.

நிறைவேற்று அதிகாரமுள்ள அரசத்தலைவர் என்னும் ஒரு தனிமனிதனில் சட்டவாக்க நிர்வாக சட்ட அமுலாக்க அதிகாரங்கள் அனைத்தும் ஒன்று குவிக்கப்பட்ட ஆட்சி முறையைத் தனது  வலுவாகவும், தனது இராணுவ நிர்வாக ஆட்சிக்கான பலமாகவும் கொண்ட  கோத்தபாய சிங்கள பௌத்த பேரரசு ஒன்றை ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் சீனப் பாணியான ஆட்சி முறைமையாக இலங்கைத் தீவின் எல்லைக்குள் சீனப் பொருள் வளத்திலும், இந்திய நிதி உதவிகளிலும், புலனாய்வு இரணுவக் கூட்டுறவிலும், ஆசிய நாடுகளின் பாதுகாப்புக் கவசமொன்றை உருவாக்கி, அனைத்துலக நாடுகளின் மன்றத்தின் நியாயமான நேர்மையான செயற்பாடுகளைத் தனது சிறிலங்கா அரசில் தடுக்கும் இராஜதந்திர உத்தியிலும், கட்டமைத்து வருகின்றார்.

இத்தகைய காலகட்டத்தில் சிறிலங்கா எந்தவித அச்சமுமின்றி மாவீரர் மாத வார நாள் முயற்சிகளைப் படைபலம் கொண்டு ஒடுக்கி, ஈழத்தமிழர் மீதான பண்பாட்டு இனஅழிப்பை வேகப்படுத்தி வருகிறது. இந்த வேகப்படுத்தலுக்கான காரணம் தற்பொழுது சமகாலத்தில் வாழும் தமிழ் இளையவர்களுக்கு அவர்களுடைய வரலாற்றை அறியாது தடுத்தல் மூலம் அவர்களுடைய தாயகம் தேசியம் தன்னாட்சி என்பன குறித்த சிந்தனையில்லாத அரசியல் எதிர்ப்பின்றி  தன்னால் அடிமைப்படுத்தக் கூடிய ஈழத்தமிழினமொன்றை விரைவாக உருவாக்குதல் என்கிற அரசியல் சதியாக உள்ளது.

இதற்காகவே ஈழத்தமிழர்களின் வரலாற்றை நினைவுபடுத்தக் கூடிய அனைத்தும் தொடர்ச்சியான முறையில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இவ்வாரத்தில் மன்னார் மாந்தை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளியில் சிறிலங்கா இராணுவ நிலையெடுப்புக்கு அருகில் உள்ள மாவீரர் துயிலகத்தின் பொதுச்சுடரேற்றும் பீடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இச்செயல் சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் நெறிப்படுத்திய யுத்தநினைவுச் சின்னங்களைப் பேணலுக்கான மக்களின் உரிமை பேணப்படல் வேண்டும் என்கிற மனித உரிமை பாதுகாப்பை வெளிப்படையாக வன்முறைப்படுத்திய செயலாக அமைகிறது. ஆயினும் இதுவரை உலகநாடுகளின் மன்றம் சிறிலங்கா மீதான மனித உரிமைகள் வன்முறைகள் குறித்த எந்த அனைத்துலகச் சட்ட அமுலாக்கத்தையும் செய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்தாது இருப்பது சிறிலங்காவுக்கான  மறைமுக அனுமதியாக உள்ளது.

தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தினத்திற்கு தடைவிதிக்கும் நீதிமன்றப் பிடியாணையுடன் அதனை வழங்குவதற்காகச் சிறிலங்காப் படையினர் அரசியல் விழிப்புணர்ச்சியுள்ள ஈழத்தமிழர்களைத் தேடி சுற்றிவளைப்பு முற்றுகையொன்றை யுத்தக்கால முற்றுகைப் பாணியிலேயே நடத்தி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்செயல் அனைத்துலகச் சட்டங்களுக்கு மாறாக இனங்காணக் கூடிய அச்சத்தை மக்களின் வாழ்வாக்கி, அவர்களின் அரசியல் பணிவைத் தனது படைபலம் கொண்டு பெறும் சிறிலங்காவின் தொடர் உத்தியாக உள்ளது. இதுவே ஈழத்தமிழர்கள் 1950ம் ஆண்டு அகதிகள் மரபுசாசனத்தின் அடிப்படையில் உலக நாடுகளில் அரசியல் புகலிடம் கோரும் நிலையை 1983முதல் இன்று வரை தொடர்வதற்கான மூலகாரணமாக உள்ளது. ஆனால் இது குறித்து அனைத்துலக நாடுகளின் மன்றம் அமைதி காத்து வருவது சிறிலங்காவுக்கு இதனை அதன் அரசியற் செயற்திட்டமாகவே முன்னெடுக்க ஊக்கமளிக்கிறது.

1974 ஜனவரி 11ம் திகதி யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடாத்தும் பண்பாட்டுச் சுதந்திரம் ஈழத்தமிழர்களுக்கு இல்லையென, ஈழத்தமிழர்கள் 11 பேரை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம், அன்று முதல் இன்று வரை 176000க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த பின்னணியில் கூடச் சற்றும் பின்வாங்கலின்றி ஈழத்தமிழினம் மீதான பண்பாட்டு இனஅழிப்பை எல்லாவகையிலும் தொடர்வதையே இவ்வாண்டு மாவீரர் மாதத்து வாரத்துச் சிறிலங்காவின் செயற்பாடுகள் உறுதி செய்கின்றன.  உண்மையில்  இவை அனைத்தும் அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலின் விளைவாகவே எடுத்து நோக்கப்பட வேண்டியனவாக உள்ளன.

உலக நாடுகளும், உலக அமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பினைக் கண்டும் செயற்டாதிருந்தமையே இன்றைய ஈழத்தமிழ் மக்களின் மேலான சிறிலங்காவின் எல்லாவிதமான இனஅழிப்பு முயற்சிகளுக்கும் உந்துசக்தியாக உள்ளது. இந்த விடயத்தில் உலகத் தமிழர்கள் தங்களுக்குள் ஒன்றமைந்த குரல்தரவல்ல ஈழத்தமிழர் அமைப்பு ஒன்றை நிறுவிடக் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முயற்சிக்காமையும், மிக முக்கிய ஈழத்தமிழின அழிப்புக்கான காரணியாக உள்ளது. புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களின் முனைவாக்கங்களும், பன்நிலைப்பட்ட செயற்பாடுகளும் அவர்களால் தாங்கள் ஏதோ சாதனை செய்வதாகக் காட்டிக் கொள்ளும் பாணியிலேயே கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. ஆனால் இந்தப் பன்னிரெண்டு ஆண்டுகளில் சிங்களக் கட்சிகள் அனைத்தும் எவ்வாறு தங்களுக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒரு நாடு ஒரு சட்டம் என்பதைச் சிங்கள பௌத்த ஆட்சிக்கான அரசியல் சட்டவலுவாக மாற்ற உழைக்கின்றன என்பது உலகறிந்த விடயம். ஈழத்தமிழர்களால் மட்டும் ஏன் இது நடைமுறைச்சாத்தியமாகாது உள்ளது. தனிமனிதப் புகழ்விருப்பும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சொத்துக்குவிப்பும் செய்வதே புலம்பதிந்த ஈழத்தமிழர்களின் அரசியலா என்கிற பலத்த சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

இதனால் உலகில் பன்மொழி பல்கலாச்சார சூழலில் வாழும் இளைய தமிழர்கள் தங்களின் தமிழினத்தன்மையில் பலத்த பாதிப்புக்களை அடைகின்றனர். இந்த இக்கட்டான ஆனால் நடைமுறை உண்மையைப் புலம்பதிந்து வாழும் தமிழர்கள் கடக்க மறுப்பார்களானால், பன்னிரெண்டு ஆண்டுகளில் சமுகநீதியை நிலைமாற்று நீதியை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் தாயக ஈழத்தமிழர்கள் பெருஞ்சமுகத்தினரால் உள்வாங்கப்படுவது இயல்பானதொன்றாகிவிடும். எனவே புலம்பதிந்த தமிழர்களுடைய ஒரே அணியில் தங்கள் தங்கள் வேறுபாடுகளுடன் இணைவதற்கான முயற்சி மட்டுமே மாவீரர்கள் முன்னெடுத்த மண்ணையும் மக்களையும் பாதுகாத்தல் என்ற இலட்சிய நோக்கை நோக்கி ஈழத்தமிழ் மக்களைப் பயணிக்க வைக்கும் என்பதே உறுதியும் இறுதியுமான உண்மையாக உள்ளது.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு - காங்கேயன்