சிறீலங்காவின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு பொருண்மியம் மட்டும் காரணம் அல்ல | தமிழில்: ஜெயந்திரன்

சிறீலங்காவின் இனவாத அரசியற் கட்டமைப்புகளும் வரலாற்று ரீதியான அட்டூழியங்களுமே இன்று அந்த நாடு சந்திக்கின்ற நெருக்கடிக்கான மூலகாரணம் என்பது தெளிவான உண்மையாகும். இவ்வாறான அரசியல் அணுகுமுறை, உறுதியற்ற தன்மை, வன்முறை, பொருண்மிய வங்குரோத்து நிலை போன்ற விடயங்களுக்தே தொடர்ந்தும் இட்டுச்செல்லும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

சிறீலங்காவின் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால், இப்படிப்பட்ட இனவாதப் போக்கை மாற்றி அமைத்து, இந்தத் தீவின் பிரச்சினைகளுக்கான அடிப்படைக்காரணத்துக்கான தீர்வை வழங்கக்கூடிய பல வாய்ப்புகள் சிறீலங்காவுக்குக் ஏற்கனவே கிடைத்திருந்தன. ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்த ஒவ்வொரு தடவையும் சீறீலங்கா அதனைத் தவறவிட்டதே வரலாறாகும்.

சிறீலங்கா தற்போது ஒரு மோசமான பொருண்மிய நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிக்கான முழுப்பொறுப்பும் முன்னைய அதிபர் கோட்டாபயவின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு, அவரது பணிமனையைக் கைப்பற்றியிருந்தார்கள். கோட்டாபய ஊழல்களை மேற்கொண்டதாகவும், தனக்கும் தனது குடும்பத்துக்கும் சொத்துக்களை சேகரித்ததுமான குற்றச்சாட்டுகள்  அவர் மீது சுமத்தப்பட்டன. கோட்டாபய அமுலுக்குக் கொண்டுவந்த வரிக்குறைப்பு, உரவகைகளுக்கான தடை உள்ளிட்ட அவரது செயற்பாடுகள் தவறான அணுகுமுறைகளாக முன்வைக்கப்பட்டன. இது எவ்வாறு இருப்பினும், சிறீலங்கா தற்போதைய நெருக்கடி நிலையைச் சந்திப்பதற்கு அடிப்படைக்காரணமான மிகவும் முக்கியமான அதன் கொள்கை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுத்தவர்கள் எதுவும் பேசவில்லை. அதாவது சிறீலங்கா அரசு வடக்கிலும் கிழக்கிலும் முன்னெடுத்து வருகின்ற இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

சிறீலங்காவில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், மிக அதிக இராணுவத்தைக் கொண்ட ஒரு நாடாக சிறீலங்கா தற்போது திகழ்கிறது. 2018ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி சிறீலங்காவின் இராணுவம், அதன் சனத்தொகையின் 1.46 வீதத்தைப் பிரதிபலித்தது. சிறீலங்காவை பொறுத்தவரையில் வடக்கிலும் கிழக்கிலுமே இராணுவப்பிரசன்னம் மிக அதிகமாகப் பேணப்படுகிறது. நாட்டின் 21 இராணுப் பிரிவுகளில் 14 வடகிழக்கில் நிலைகொண்டிருக்கின்றன. ஓக்லாண்ட் அமைப்பின் கணிப்பின்படி ஒவ்வொரு 6 தனிநபர்களுக்கும் ஒரு இராணுவவீரர் என்ற அடிப்படையில் இராணுவம் வடகிழக்கில் நிலைகொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. சிறீலங்காவின் சனத்தொகையில் 0.6 வீதத்தைப் பிரதிபலிக்கும் 130,322 எண்ணிக்கையிலான சனத்தொகையைக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60,000 இராணுவவீரர்கள் நிலைகொண்டிருப்பதாக கொள்கை ஆய்வு அமைப்பான அடையாளம் அமைப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு இரு தனிநபர்களுக்கும் ஒரு இராணுவ வீரன் விகிதத்தில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பதாகும். இவ்வாறான தரவுகள் ஓர் இப்பிரதேசத்தில் ஓர் உண்மையான இராணுவ ஆக்கிரமிப்பைச் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரையில், இராஜபக்சாக்கள் வெறுமனே ஊழல்வாதிகளும் பொருண்மிய வல்லாண்மை அற்றவர்கள் மட்டுமல்ல. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போது, இழைக்கப்பட்ட இனவழிப்பு உட்பட்ட அனைத்துக் கொடுமைகளுக்கும் தலைமை தாங்கிய ஒரு மோசமான போர்க்குற்றவாளியாகவே கோட்டாபயவை நோக்குகின்றனர். எந்தச் சிங்கள பௌத்த தேசியவாதம், 2019 இல் பெரும்பான்மை வாக்குகளுடன் கோட்டாபயவை ஆட்சிக்கொண்டுவந்ததோ, அதே சிங்கள பௌத்த தேசியவாதம் தான் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை முன்னெடுத்தது. தமிழ் மக்கள் இராஜபக்சாக்களை போர்க்குற்றவாளிகளாகக் கருதிய அதே நேரம், சிங்கள பௌத்த தேசிய வாதம் அவர்களைப் போரை வெற்றிகொண்ட வீரர்களாகக் கொண்டாடியது. தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் அடக்குமுறைக்கு உள்ளாக்கிய கோட்டாபயவின் இனவாதக்கொள்கைகளை அலட்சியம் செய்த சிங்கள-பௌத்த தாயகம் தங்களது பாதுகாவலனாகக் கோட்டாபயவைப் போற்றிப்புகழ்ந்தது.

மருந்து, உணவு, எரிபொருட் பற்றாக்குறையால் முழுத்தீவுமே சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற வடக்குக் கிழக்கில் நாட்டின் மொத்தத் தேசிய வருமானத்தின் கணிசமான பகுதியை இராணுவ ஆக்கிரமிப்புக்காக அரசு செலவிட்டுக் கொண்டிருக்கிறது. 2020ம் ஆண்டில், அரசின் மொத்தச் செலவினத்தின் 15 வீதம் இராணுவக்கட்டமைப்புக்காகச் செலவிடப்பட்டது என ஜேன்ஸ் சுட்டிக்காட்டுகிறார். சிறீலங்கா போன்ற சிறிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, சிறீலங்கா மிக அதிகமான தொகையை இராணுவத்துக்காகச் செலவிட்டுவருகிறது. 2020ம் ஆண்டில் இஸ்ரேலுக்கு அடுத்தாக (12.08 %) இராணுவத்துக்காக மிக அதிக தொகையைச் செலவிடும் இரண்டாவது நாடாக (10.29 %) சிறிலங்கா விளங்குகிறது.

சிறீலங்காவின் இனவழிப்புப் போர் 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போது, 169,796 அப்பாவித் தமிழ் மக்கள் சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்று தொட்டு, நாட்டின் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் மக்களின் நாளாந்த வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்திலும் இராணுவம் மூக்கை நுழைத்துக்கொண்டே வருகிறது. இனவழிப்புப் போரில் உயிர்தப்பி பல்வேறு உடல், உளக்காயங்களோடு தொடர்ந்து இப்பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்குத் தொடர்ச்சியாக மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய தொன்றாக இராணுவப்பிரசன்னம் விளங்குகிறது. இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகள், விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள் போன்றவை வடக்குக் கிழக்கு முழுவதிலும் வியாபித்திருக்கின்றன. போரின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் கையளித்தபின் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு அந்த வேதனையில் ஒவ்வொரு கணப்பொழுதையும் கழிக்கும் இந்த உறவுகள், இந்தக் கொடுமைகளைப் புரிந்த அதே இராணுவத்தினரின் நடுவில் தமது நாளாந்த வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பயம், நம்பிக்கையீனம், மனஉளைச்சல், பாதுகாப்பற்ற தன்மை போன்ற உணர்வுகளுடன் இந்த மக்கள் தமது வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் அதே நேரம், தமிழ் மக்களுக்கு உதவுவதற்காகவே தாம் அங்கு பிரசன்னமாக இருப்பதாக இராணுவம் நியாயம் கற்பிக்கிறது.

சிறீலங்காவில் எதிர்காலத்தில் இவ்வாறான பொருண்மிய நெருக்கடிகள் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமாயின், தமிழர் தாயகமான வடக்குக்கிழக்கில் இராணுவத்துக்காகச் செலவிடப்படும் நிதி குறைக்கப்பட்டு, அப்பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். அவ்வாறாயின் தமிழ் மக்கள் மீது இனவழிப்பை முன்னெடுக்கின்ற அரசின் கொள்கை ஒவ்வொன்றும், அமைப்பு ஒவ்வொன்றும் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டு, அந்தக் கொள்கைகள் அத்தனையும் முற்றாக நீக்கப்படவேண்டும். சிறீலங்காவில் சிங்கள-பௌத்த தாயகத்தைக் கட்டியெழுப்புகின்ற இராஜபக்சாக்களின் செயற்பாட்டில் ஓர் அரச நிறுவனமான இராணும் முக்கிய பங்குவகித்தது. இந்த நாடு வரலாற்றில் சந்தித்திருக்கும் மிக மோசமான பொருண்மிய நெருக்கடி ஏற்படுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது. வடக்குக்கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் எப்போது இராணுவம் இல்லாத, இராணுவ ஆக்கிரமிப்பு இல்லாத ஒரு சூழலுக்குள் வாழக்கூடிய ஒரு இயல்புநிலை ஏற்படுகின்றதோ, அப்போது தான் சிறீலங்கா பொருண்மியத்தில் உறுதியான நிலையையும் உண்மையான இயல்புநிலையையும் அடையமுடியும்.

 
நன்றி: www.countercurrents.com