உருக்குலைகின்ற இலங்கையின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு – பி.மாணிக்கவாசகம்

உருக்குலைகின்ற இலங்கையின் உணவு
உருக்குலைகின்ற இலங்கையின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு

ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அந்த நாட்டின் உணவுப் பாதுகாப்பு உறுதியான கட்டமைப்புடன் பேணப்பட வேண்டியது அவசியம். அதேபோன்று பொருளாதாரப் பாதுகாப்புக் கட்டமைப்பும் பேணப்பட வேண்டும். இந்தக் கட்டமைப்புக்கள் உருக்குலையுமேயானால். நாட்டின் தேசிய பாதுகாப்பில் அர்த்தம் இருக்க முடியாது. அது தோலிருக்க சுளை விழுங்கப்பட்டதற்கு ஒப்பான, தவிர்க்க முடியாத ஓர் அழிவு நிலைமைக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தின் தீர்க்கதரிசனமற்ற விவசாயக் கொள்கையும், பொருளாதாரக் கொள்கையுமே நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு கட்டுக்குலைவுக்குக் காரணமாகும். இந்த நிலைமை கண்டனத்துக்கு உரியது. மிகுந்த கவலைக்குரியது.

இந்த மோசமான நிலைமையை மூடி மறைத்துக்கொண்டு, இராணுவ ரீதியிலான தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் காட்டி, இராணுவச் செயற்பாடுகளை அரசு முதன்மைப்படுத்தி உள்ளது.

தேசிய பாதுகாப்பு என்பது, புறநிலை எதிரிகளையும், பாதுகாப்புத் தொடர்பிலான பாதிப்புக்களையும் இல்லாமற் செய்வது அல்லது அவற்றுக்கு இடமளிக்காத வகையில் சட்ட ரீதியிலான நடைமுறை வலுவுள்ள ஏற்பாடுகளைச் செய்வது எனப் பொருள்படும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில், புறநிலை எதிரிகளும், எதிர்ப்பு நிலைமைகளும் குறைவு என்றே கூற வேண்டும். வேறு ஒரு நாடோ அல்லது வேறு ஏதேனும் வலிமையான சக்திகளோ நாட்டைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல்களை மேற்கொள்ளவில்லை. ஆனால் உலகப் பொருளாதார ஆதிக்கப் போட்டியில் இலங்கை வலிந்து இழுக்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இது பொருளாதார ரீதியிலான வெளிச் சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு வழியேற்படுத்தியுள்ள போதிலும், இலங்கை அரசின் தீரக்கதரிசனமற்ற – நாட்டின் இறைமைக்கு மாறான பொருளாதார அணுகுமுறை களினாலும், பொருளாதாரக் கொள்கைகளினாலுமே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்துடன் கூடிய இலங்கை தொடர்பிலான நடவடிக்கைகளைக் குறிப்பிட முடியும். சீனா வலிந்து இலங்கையின் பொருளாதாரச் சிக்கல்களில் தலையிட்டபோதிலும், அந்த சர்வதேச பொருளாதாரப் போட்டியில் இலங்கை அரசு வலிந்து தனது தலையை நுழைத்திருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம், மத்தள விமான நிலைய உருவாக்கம் என்பன இதற்கு சிறந்த உதாரணங்களாகி இருக்கின்றன. சீனாவுக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிராந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் போட்டியில் இந்தத் திட்டங்களின் ஊடாக இலங்கை அரசு தனது தலையைச் சிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

உருக்குலைகின்ற இலங்கையின் உணவுஅதேவேளை, கொழும்புத் துறைமுக நகர உருவாக்கமும், இந்த சர்வதேச பொருளாதார ஆதிக்கப் போட்டியில் இலங்கை தன்னைத் தானே வலிந்து உள்நுழைத்துக் கொண்டிருக் கின்றது. கடற்பரப்பை மண்ணைக் கொட்டி நிரப்பி, நிலத் தோற்றத்தை அமைத்து உருவாக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் வரையறையற்ற அதிகாரங்களுடனும், உரிமைகளுடனும் சீனா இலங்கையில் உறுதியாகக் கால் பதித்திருக்கின்றது.

இது நாட்டின் இறைமைக்கு மாறான, அப்பட்டமான ஒரு செயற்பாடு என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமல்லாமல், இதன் மூலம் உலகின் ஆதிக்க சக்திகளுக்கு அவற்றின் போட்டிச் செயற்பாடுகளுக்கு அரசு இலங்கையில் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

இத்தகைய பொருளாதார நெருக்கடி உருவாக்கத்தின் மூலம், புறநிலை ஆதிக்க சக்திகளுக்கு கோட்டாபய அரசும் குறிப்பாக ராஜபக்ச குடும்ப அரசியல் குழுவினரும் இடமளித்திருப்பதையே காணமுடிகின்றது. பொருளாதார ரீதியிலான வெளிச் சக்திகளின் இந்தத் தலையீட்டை அரசின் இராணுவக் கட்டமைப்பு எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த வகையில் நாட்டின் பொருளாதார ரீதியிலான தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இராணுவ சக்தியைக் கொண்டு எதிர்த்துத் தடுக்க முடியாது.

இந்த நிலையில் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஆயுத ரீதியில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள – அரசாங்கத்தினால் பயங்கரவாதிகள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பின் மீளுருவாக்க சக்திகளின் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ‘அரசு படம் காட்டி’ ஓர் இராணுவமயமான ஆட்சி நிர்வாகத்தை வலிந்து மேற்கொண்டு வருகின்றது. இது அரசாங்கத்தின் இலக்குத் தவறிய பாதுகாப்புச் செயற்பாடுகளையே சுட்டி நிற்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசின் பொருளாதார, இராணுவக் கொள்கைச் செயற்பாடுகள் இவ்விதமிருக்க, உள்நாட்டில் அரசு மேற்கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கைகளும், செயற்பாடுகளும் நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கட்டுக்குலையச் செய்திருக்கின்றன.

நிறைவான இயற்கை வளங்களைக் கொண்டுள்ள போதிலும், உணவில் சுயதேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நாட்டின் விவசாய உற்பத்தி நிலைமைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை.

சுயதேவைப் பூர்த்தியை எட்ட முடியாத அளவிலேயே இலங்கையின் உணவு உற்பத்தி நிலைமை பேணப்பட்டு வந்துள்ளது. இதனால், நாட்டின் முழுமையான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளுர் உற்பத்தியுடன் உணவு இறக்குமதியிலுமே நாடு தங்கியிருக்கின்றது.

தெளிவான தந்திரோபாய ரீதியிலான பொருளாதாரக் கொள்கைகளைக் கோட்டை விட்டுவிட்டு, சுயலாப அரசியல் ரீதியிலான அதிகார ஆதிக்கப் போட்டி நிலை சார்ந்த கொள்கைகளினால் நாடு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது.

நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் போதிய அந்நிய செலவாணியின்றி – தங்கம் மற்றும் டொலர் போதிய கையிருப்பின்றி அரசு அல்லாடிக்கொண்டிருக்கின்றது.

வெறுமனே ஆட்சி அதிகாரங்களையும், இராணுவ ரீதியிலான அத்துமீறிய அதிகாரச் செல்வாக்கையும் வைத்துக் கொண்டு, சர்வதேச பொருளாதார ஆதிக்கப் போட்டியையும்,  பற்றாக்குறை நிலைமையிலான உணவுப் பாதுகாப்புக் கட்டுக் குலைவையும் ஜனாதிபதி கோட்டாபய அரசினால் சீர் செய்ய முடியாது.

இரசாயனப் பசளை மற்றும் விவசாய உள்ளீடுகளின் இறக்குமதியைத் திடீரெனத் தடை செய்து, சேதனப் பசளை மற்றும் பீடை ஒழிப்புச் செயற்பாடுகளைக் கைக்கொள்ள வேண்டும் என்ற  கடுமையான உத்தரவுச் செயற்பாட்டின் மூலம், இரசாயன உள்ளீடுகளையே பிரதான ஆதாரமாகக் கொண்டு உணவு உற்பத்தியை மேற்கொண்டு வந்த விவசாயிகளின் முதுகெலும்பை அரசு முறித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் 2021 ஆம் ஆண்டிற்கான காலபோக நெற்செய்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்குப் பிரதேச விவசாயிகள் தமது உற்பத்தி முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்திய மிக மோசமான யுத்தகால பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட அனுபவத்தைக் கொண்டு இந்த இக்கட்டான சூழலிலும் தமது நெற்செய்கை முயற்சிகளை மேற்கொண்டிருக் கின்றனர்.

ஆனால் அரசாங்கத்தின் இரசாயன விவசாய உள்ளீடுகளின் திடீர் இறக்குமதித் தடையினால் நாட்டின் தென்பகுதி விவசாயிகள் தமது காலபோக நெற்செய்கையைப் பெருமளவில் கைவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றார்கள்.

அனைவருக்கும் உணவளித்த விவசாயிகளைக் கையறு நிலைக்குக் கொண்டு வந்துள்ள அரசாங்கத்தின் செயற்பாடு தேசிய அளவிலான உணவு நெருக்கடிக்கு வழிவகுத்திருக்கின்றது. இதனை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரிய வில்லை.

உருக்குலைகின்ற இலங்கையின் உணவுஏனென்றால் இரசாயன விவசாய உள்ளீடுகளின் இறக்குமதித் தடைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பணிந்து செல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகிய அரசு இறக்குமதித் தடையை நேரடியாக நீக்காமல், தனியார் எவரும் வேண்டிய இரசாயன உள்ளீடுகளை இறக்குமதி செய்யலாம் என்றும் அதற்கு இதுவரையில் அரசு வழங்கி வந்த மானிய – நிதி உதவியை வழங்கமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.

பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் அவசியம். இதனை அரசாங்கமே வழங்க வேண்டும். அந்த டொலர்களுக்கு நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியாருக்கு டொலர்களை வழங்க முடியாத ஓர் இக்கட்டான நிலைமைக்கே அரசாங்கம் ஆளாகி இருக்கின்றது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கறுப்புச் சந்தையில் டொலர்களைப் பெற்று இரசாயன உள்ளீடுகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமைக்கு தனியார் இறக்குமதியாளர்கள் ஆளாகி இருக்கின்றார்கள். இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் பசளையும் மருந்துப் பொருட்களும் சாதாரண விலைக்கு விவசாயிகளினால் பெற முடியாது. ஆனை விலை குதிரை விலை கொடுத்தே அவரகள் அவற்றை வாங்க வேண்டியிருக்கும் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து, விவசாய உள்ளீடுகளைப் பெற்று, நெல் உற்பத்தி செய்யும் நிலையில் விவசாயிகள் இல்லை. இது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைமைக்கே விவசாயிகளைத் தள்ளியுள்ளது. இதனால் கொஞ்ச நஞ்சம் நெல் வேளாண்மை செய்கின்ற விவசாயிகளும் அந்த முயற்சியைக் கைவிட வேண்டிய நிலைமைக்கே ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த கஷ்ட நிலைமை நெல் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல. காய்கறி உற்பத்தியாளர்களுக்கும் நேர்ந்துள்ளது. இதனால் இப்போதே பல காய்கறிச் செய்கையாளர்கள் தமது விவசாய முயற்சியைக் கைவிட்டுள்ளதாகக் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளார்கள். இதனால் மாரிகாலப் பருவ நிலையில் காய்கறிகள் உற்பத்தி மழை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு, விலைகள் அதிகரிக்கின்ற நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் வகையில் காய்கறிகளின் விலை எகிறி இருக்கின்றது.

விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நாட்டின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ள அதேவேளை, அரசாங்கத்தின் அந்நியச் செலவாணிப் பற்றாக்குறை உணவு இறக்குமதியைப் பாதிக்கும் நிலைமையிலேயே காணப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் உறுதியான நிலையில் இருந்த அந்நியச் செலவாணி, இந்த அரசாங்கத்தில் 1.5 பில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளதாக எதிரணியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதில் 300 பில்லியன் தங்கம் என்றும் மிகுதி 1.2 பில்லியனே டொலர்களாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் தேவையப் பூர்த்தி செய்வதற்கான ஒரு மாதத்திற்குரிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கே இந்த அந்நியச் செவாணி நிதி போதாது என்றும் எதிரணியினர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நிலைமை உண்மையென்றால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக சீர்குலைந்திருக்கின்றது என்பதே நிலைமையாகும். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்துடன் கொரோனா நோய்ப்பேரிடர் காரணமாகவும் அராசங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கையினாலும் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும் மோசமான நிலைமைக்கு ஆளாகியுள்ளது.

இந்த நிலையில் நாட்டின் நிலைமை புதிய வருடத்தில் நம்பிக்கை தருவதாக அமையவில்லை என்பதே யதார்த்தமாகும்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad உருக்குலைகின்ற இலங்கையின் உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பு - பி.மாணிக்கவாசகம்