தஞ்சம் கோரி படகுகளில் பயணமாகும் இலங்கையர்கள்: நாடு கடத்தி வரும் அவுஸ்திரேலியா

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,  அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்று தஞ்சம் கோரிய  183 இலங்கையர்களை  அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தி இருக்கிறது. 

அண்மையில், இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய கடலோர காவல்  படைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற  அவுஸ்திரேலியாவின் கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் தளபதியுமான ஜஸ்டின் ஜோன்ஸ் இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டதை உறுதிச் செய்திருக்கிறார்.

நெடுந்தூர கடல் பயணத்திற்கு தகுதியற்ற 6 மீன்பிடி படகுகளில்  அவுஸ்திரேலிய  எல் லைக்குள் இந்த இலங்கையர்கள் வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

“இலங்கையிலிருந்து (படகு வழியாக)  அவுஸ்திரேலியாவை அடைய 21 நாட்களாகும். கடல் வழியாக  அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் எந்த ஆட்கடத்தல் படகுகளையும் நாங்கள் தடுப்போம். அதில் வருகிறவர்களை புறப்பட்ட இடத்திற்கோ அல்லது சொந்த நாட்டிற்கோ அல்லது பிராந்திய பரிசீலனை (மையம் உள்ள) நாட்டுக்கோ அனுப்பி வைப்போம்,” என  அவுஸ்திரேலிய  எல்லைக் கட்டளைத் தளபதி ஜோன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

“அவுஸ்திரேலிய  அரசாங்கம் மாறியிருக்கலாம், ஆனால் சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பான  அவுஸ்திரேலியாவின் கொள்கை மாறவில்லை,” என அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும்  அவுஸ்திரேலிய  அரசு,கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம் எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

கடந்த மே மாதம்  அவுஸ்திரேலியா வில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் படகு வழியாக வரும் அகதிகளை  அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற பார்வை இருந்தது. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்த  அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி படகு வழியாக சட்டவிரோதமாக வருபவர்களை நாடுகடத்தும் கொள்கை தொடரும் என்பதை தனது நடவடிக்கைகளின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளது. படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்குவதாக புதிய  அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

இலங்கையில் நிகழ்ந்த போர் மற்றும் இனரீதியான அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள்  அவுஸ்திரேலியா   இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான தஞ்சக்கோரிக்கை பயணங்கள்  அவுஸ்திரேலிய  அரசின் உந்துதலால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் அவ்வாறான பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. தற்போதைய தஞ்சக்கோரிக்கை பயணங்களில் சிங்கள மக்களும் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.