Home செய்திகள் இலங்கை வன்முறை- “ஜனநாயகத்திற்கு விழுந்த பலத்த அடி“-துரைசாமி நடராஜா

இலங்கை வன்முறை- “ஜனநாயகத்திற்கு விழுந்த பலத்த அடி“-துரைசாமி நடராஜா

இலங்கையின் துன்ப துயரங்கள்

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் போராட்டங்கள் இன்று (9) உக்கிரமடைந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார்.

இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை என்பவற்றுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியதில் காயமடைந்த 154  பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தாக்குதலின் எதிரொலியாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் ஊரடங்கினையும் பொருட்படுத்தாது வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை நிட்டம்புவ என்னுமிடத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்  அமரகீத்தி அத்துகோறள கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை காயமடைந்த 06 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ராஜபக்ஷவின் இராஜினாமாவைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பல இடங்களில் பட்டாசு கொளுத்தியும் பாற்சோறு சமைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மலையகப் பகுதிகளிலும் இந்நிலைமையை அதிகமாகவே காணக்கூடியதாகவுள்ளது.

அதே வேளை இலங்கையின் துன்ப துயரங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் எதிராக இடம்பெறும் மக்கள் போராட்டத்தினால் நாடு அமைதியிழந்து காணப்படுகின்றது. பொருளாதாரச்சுமை, ஊழல்கள், சர்வாதிகாரப் போக்குகள், உணவின்மை போன்ற பல விடயங்கள் மக்களின் வீதிப் போராட்டத்திற்கு அடித்தளமாகின. குறிப்பாக இந்த விடயத்தில் இளைஞர்களின் புத்தெழுச்சி சகலரினதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது பிரதமர் மஹிந்தவின் அலரி மாளிகைக்கு முன்பாகவும் அதிகளவான இளைஞர்கள் மஹிந்தவை பதவி விலகுமாறி கோரி போராட்டங்கள் பலவற்றிலும் ஈடுபட்டிருந்தனர். ஜனநாயக விழுமியங்களை தழுவிய முறையில் இடம்பெற்ற இப்போராட்டங்கள் சர்வதேசத்தின் பாராட்டுதல்களுக்கும் உள்ளாகியிருந்தன.

இதனிடையே இன்று நண்பகல் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது சில விஷமிகள் நீண்ட  பொல்லுகளைக் கொண்டு தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். இவர்கள் ஆளும் பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகின்றது. காவல்துறையினர் தாக்குதல்காரர்களை கட்டுப்படுத்த முனைந்தபோதும் அது முதலில் சாத்தியப்படாத நிலையில் பின்னர் இராணுவம் வரவழைக்கப்பட்டு  நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஊடகவியலாளர்கள் சிலரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர்.

இதேவேளை காலிமுகத்திடலில் இருந்த இளைஞர்களின் கூடாரங்கள் பலவும் தாக்குதல் நடத்தியவர்களினால் உடைத்தெறியப்பட்டதுடன் பொருட்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. காலிமுகத்திடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை கேட்டறிந்து கொண்டனர். இதேவேளை சஜித் பிரேமதாசா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இவர்கள் இருவரும் விரைவாகவே  வீடு திரும்பவேண்டி நேர்ந்தது. இதேவேளை மிலேச்சத்தனமான தாக்குதலில்  காயமடைந்த 154 பேர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை  காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

எனினும் இளைஞர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பொதுமக்கள் நாடளாவிய ரீதியில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பு, பொலநறுவை,  மஹரகமை, கந்தலை, மற்றும் வடக்கு கிழக்கில் சில இடங்களில் அதிகளவான பொதுமக்கள் அணிதிரண்டு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதேவேளை கம்பளை, குளியாப்பிட்டிய, பதுளை, களுத்துறை, காலி போன்ற பல இடங்களில் வைத்தியத்துறையினர் வீதிகளில் இறங்கி சுலோகங்களையும் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியவாறு கோஷமிட்டதையும் அவதானிக்க முடிந்தது. அத்தோடு தபால் துறை ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் பல இடங்களில்  ஆதரவாளர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை வெளிப்படுத்தி இருந்தனர். அலுத்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பதாக சட்டத்தரணிகள் தாக்குதல்களைக் கண்டித்து நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டங்களின் போது சில வாகனங்கள் சேதமாக்கப்பட்டதோடு குருணாகலில் உள்ள பிரதமர் மஹிந்தவின் அலுவலகமும் சேதத்திற்குள்ளானது. அத்துடன்  பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, அகில எல்லாவல, சனாத் நிசாந்த ஆகியோரின் இல்லங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

மேலும் குருணாகல் மற்றும் தம்புள்ளை  நகரசபைத் தலைவர்களின் இல்லங்களின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன் வில்கொடவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் காரியாலயத்தில் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அத்தோடு  பாராளுமன்ற உறுப்பினர் நிமால்  லன்சாவின் தந்தையாரின் இல்லத்தின் மீதும் மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் வருகை தந்த பேருந்துகள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு தாக்குதல் நடத்திய சிலரை ஆர்ப்பாட்டக்காரர்கள் நீரில் சிறை வைத்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் பிற்பகலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

மஹிந்தவின் இராஜினாமா நாட்டு மக்களில் அதிகமானோரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் இவர்கள் பட்டாசு கொளுத்தியும் பாற்சோறு சமைத்தும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, சன்ன ஜயசுந்தர போன்றவர்களும் மாலையில் தனது இராஜினாமாவை அறிவித்திருந்தனர்.

இவற்றுக்கும் மத்தியில் இன்று மாலை நிட்டம்புவ என்னுமிடத்தில் இருதரப்பினரிடையே துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்வத்தில் 06 பேர் காயமடைந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோறள உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பலரும் தனது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், தாக்குதல் குறித்த முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதோடு காயமடைந்தவர்களுக்கு வருத்தங்களையும் தெரிவித்திருக்கின்றார். நோர்வே, பிரித்தானியா, நியூசிலாந்து, போன்ற நாடுகளும் இன்றைய சம்பவத்தினை வன்மையாக கண்டித்திருந்தன.

இதேவேளை காவல்துறையினருக்கு  ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இராணுவத்தினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும்   அரச தரப்பு செய்திகள் வலியுறுத்தின.இதேவேளை தற்போது நாட்டில் காவல்துறை ஊரடங்கு அமுலில் இருப்பதால் மக்களை அமைதியாக வீடுகளில் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன கேட்டுக் கொண்டுள்ளதோடு ஊரடங்கிற்கு இடையூறு விளைவித்தால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தக்கூடிய கூடிய உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.எனினும் இதனை வன்முறைகள் மூலம் மழுங்கடிப்பது முறையானதல்ல. சட்டத்தையும் நீதியையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு பிரிவினருக்குள்ளது.

இதிலிருந்தும் அவர்கள் விலகிச் செல்ல முற்படுதல் கூடாது.பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உள்ளாகி வாழ்க்கைச் சுமைகளுக்கும் மத்தியில் வீதியில் இறங்கிப் போராடும் அப்பாவிகள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். சர்வாதிகார ரீதியிலான செயற்பாடுகளை இலங்கை மக்கள் ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று மதகுருமார்கள் பலரும் வலியுறுத்தியுள்ளார்கள்.

இலங்கையில் இடம்பெற்றுள்ள இன்றைய விரும்பத்தகாத சம்பவங்கள் சர்வதேச ரீதியிலும் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இலங்கையில் இன்று ஜனநாயகத்திற்கு பலத்த அடி விழுந்திருக்கின்றது.

மக்களின் உரிமைக் கோஷங்களை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு முயற்சியாகவும் இது அமைந்திருக்கின்றது. இருண்ட யுகத்தைநோக்கி இலங்கை  பயணிக்கின்றதா? என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தி இருக்கின்றது. இனி அடுத்த கட்ட நகர்வினை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version