Home செய்திகள் அகதிகள் முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

அகதிகள் முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

அகதிகள் முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு

கொரோனா ஊரடங்கு குறிப்பிடத்தக்க அளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குமாறு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் ராமு மணிவண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,“கொரோனா ஊரடங்கு காலத்தில் அகதிகள் முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. அதுமட்டுமல்லாமல் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டி அவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கும் தமிழக அரசு முன்னுரிமை கொடுத்தது.

நீதிமன்றமும் அவர்களிடம் அடையாள அட்டையை காட்டுமாறு வற்புறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது. இப்போது, கொரோனா இரண்டாவது அலை காலத்திலும் ரேஷன் பொருட்களை வழங்குமாறு உத்தரவிட மனுதாரர் கோரியுள்ளார்.

தற்போது ஊரடங்கு போதுமான அளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதால் மனுதாரர் இதுதொடர்பாக கோர முடியாது. தடுப்பூசியை பொறுத்தவரை அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Exit mobile version