தமிழ்நாடு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளும் இணைந்து கொள்ள அனுமதி

காப்பீட்டு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளும்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளும்: தமிழ்நாடு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வழியே ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரை இலவச சிகிச்சை பெற இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளும் இணைந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்றும் இல்லாமல் இத்திட்டத்தில் சேரலாம். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிதாக சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கும் முறை குறித்து அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறுபவர்கள் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெறுவதற்காக தமிழக அரசால் 2009-ல் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்து வந்த அதிமுகஆட்சியில் இந்த திட்டத்துடன்‘பிரதான் அமைச்சர்ஜன் ஆரோக்யயோஜனா’ என்ற திட்டத்தை ஒருங்கிணைத்து, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டமாக மாற்றப்பட்டது. பயனாளிகளுக்கான காப்பீட்டுத்தொகை ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், இந்த திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது.

அதன்படி, இந்த திட்டத்தின்கீழ் இதுவரை இணையாதவர்கள் புதிதாக இணைவது குறித்து முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:

http://cmchistn.com/entrollement/EnrolmentForm2022.pdf என்ற இணையதளத்தில் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர், அதை பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று, குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்துக்கு வந்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் இணைய தகுதியுடைய நபரின் மனைவி, கணவர், குழந்தைகள், பெற்றோரின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்படும்.

வழக்கமாக, விண்ணப்பிக்க வரும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் புகைப்படமும் எடுக்கப்படும். ஆனால், தற்போது கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குடும்ப தலைவர் அல்லது தலைவி மட்டும் வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் என்ன முகவரி உள்ளதோ, அதற்குட்பட்ட மாவட்டத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்து ஆறு மாதத்துக்கு அதிகமாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழக தொழில் துறையிலிருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம். முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்றும் இல்லாமல் இத்திட்டத்தில் சேரலாம்.

Tamil News