இலங்கை அதிபர் தேர்தல்: பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு

இலங்கை ஜனாதிபதி பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபத் தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள்,   தமது வேட்பு மனுவை, பாராளுமன்ற பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.

இதற்கமைய, இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்காக மூன்று வேட்பாளர்களின் பெயர்கள், பாராளுமன்றத்தில்  முன்மொழியப்பட்டன.

இதன்படி, தற்போதைய பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்வுக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று  காலை 10 மணிக்கு நடைபெறும் என்று   அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்ட போது, வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக அப்போதைய பிரதமராகவிருந்த D.B.விஜேதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக M.A. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாளைய தினம் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பில் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிய முடிகிறது.