இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- இராமேஸ்வரம் மீனவர் சங்கம் கோரிக்கை

மீன்பிடிக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா மேலும் தெரிவிக்கையில்,

‘இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 தமிழக மீனவர்களையும் அவர்கள் சென்ற 10 படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 30ம் திகதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர்.  ஆனால் திங்கட்கிழமை (3) காலை சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மீனவர்கள் தனுஷ்கோடி கச்சத்தீவு க்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.

மேலும்  திங்கட்கிழமை (3) மாலை முதல் தொடர்ந்து கடலில் வீசி வரும் கடும் காற்று காரணமாக படகுகள் எல்லை தாண்டி சென்று விட்டால் இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மீனவர்கள் மீன் பிடிக்காமல் பாரிய நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீன் வரத்து இல்லாமல் கரை திரும்பியதால் படகு ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை  இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே  இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என  என்றார்.

Tamil News