பூகோள அரசியல் சூழ் நிலைகளை இலங்கை அரசு கவனத்தில் எடுக்கவில்லை – சுரேன் குருசாமி

அரசியல் சூழ் நிலைகளை அரசு கவனத்தில்  எடுக்கவில்லை

அரசியல் சூழ் நிலைகளை அரசு கவனத்தில் எடுக்கவில்லை: ‘ஒரு நாட்டையும், அதன் மக்களையும் துன்பங்களிலிருந்து விடுபட வைப்பதற்கு பொருத்தமான செயற்பாடுகளை அந்நாட்டின் ஆளும் அரசு கைக்கொள்ள வேண்டும்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் “அதில் பிரதானமானவைகள் பூகோள அரசியல், உள்நாட்டு அரசியில், பூகோள வர்த்தகம், உள்நாட்டு இயற்கை வளங்களை பிரயோசனப்படுத்தல், விஞ்ஞான தொழில்நுட்ப வளங்கள் என்று ஏகப்பட்டவைகள் அடங்கும். நம் நாட்டை எடுத்துக் கொண்டால் பூகோள அரசியலுக்குள் நமக்கு சாதகமான நாடுகளும், நம்மை சுரண்டும் நாடுகளும் அடங்கும் அவைகளைத் தாண்டியே நாம் கால, தேச, வர்த்தமானங்களுக்கு ஏற்ப கொள்கைகளை வகுத்து முன்னேற வேண்டும். இதில் இடைவிடாத தீவிர மேற்பார்வை இன்றியமையாதது. மாற்றங்கள் அப்போதைக்கு அப்போது தேவை மாற்றத்தை விரும்பாதவர்களுக்கு முன்னேற்றம் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை யென்றும்” அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அண்மையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை மீளாய்வுக் கலந்துரையாடல் மட்டக்களப்பு நகரில் அதன் கட்சிப் பணிமனையில் இடம்பெற்றது.

அங்கு கருத்துரை வழங்குகையிலேயே சுரேன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தொடர்ந்து  கருத்து தெரிவிக்கையில், “சமகால அரசியல் நிகழ்வான ஒரு விடயத்தை நாம் உதாரணத்திற்கு எடுக்கலாம். அதாவது, ”போர்ட் சிற்றியை” சீனாவுக்கு வழங்குவதால் உலக நாடுகளிடையே ஒரு எதிர்ப்பு நிலையை நமது நாடு பெற்றிருக்கிறது இது எமது நாட்டை எங்கேயோ கொண்டு செல்லப்போகிறது. நாம் உன்னிப்பாக இதனை பார்க்க வேண்டும்.

உலக நாடுகளின் எதிர்ப்பு என்பது பொதுப்படையாக கூறப்பட்டாலும் அமெரிக்காவை இது பெருமளவு ஆத்திரமூட்டி இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அமெரிக்கா சீனா முதலீட்டு எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து சீனாவில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பை அமெரிக்காவில் தாங்கள் மூடுவதாக தெரிவித்திருந்தது. இதனால் சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறி வேறு நாடுகளில் தங்கள் முதலீடுகளை முன்னெடுத்து வருகிறார்கள். வெளிப்படையான சீன எதிர்ப்பு கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகின்ற வேளையில் வெளிப்படையாகவே இலங்கை சீனச் சார்பு கொள்கையை கடைப்பிடித்திருப்பது அமெரிக்காவை கவலை கொள்ள வைத்திருக்கலாம்.

சீனாவில் இருந்து வெளியேறி அமெரிக்க சந்தை வாய்ப்பை பயன்படுத்த, வேறுநாடுகளில் பாரிய முதலீடுகளை செய்துவரும் சர்வதேச நிறுவனங்களை இலங்கைக்கு தருவித்து நிலைபேறான அபிவிருத்தயை முன்னெடுத்திருக்கலாம். அது சிரமமான விடயமல்ல.

முக்கியமாக இலங்கை அரசுக்கு மில்லேனியம் சேலஞ்ச் கோப்பரேஷன் MCC என்ற அமெரிக்க நிறுவனத்தின் ஊடாக 480 மில்லியன் டொலர் மானிய மற்றும் முதலீட்டு அடிப்படையில் அபிவிருத்தி திட்டத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்க அரசு சமர்ப்பித்திருந்தது.

த.தே.கூட்டமைப்பின் இரட்டையர்களின் போக்கு தமிழர் நிலையில் ஒரு கேள்வி ஏற்படுகின்றது! | ILC

இதன் மூலம் பெருந்தெருக்கள் போக்குவரத்தையும் மற்றும் காணி முகாமைத்துவத்தையும் நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை முன்மொழிந்து இருந்தது.

இலங்கை அரசின் அமைச்சரவை இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்ற சரத்துக்களை ஏற்று கையெழுத்திடுவது அரசுக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அது சுட்டிக்காட்டியது. இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் இலங்கை அரசியல் யாப்புக்கும் சட்ட திட்டங்களுக்கும் முரணானவை என்று விளக்கம் கொடுத்தது. இதை நடைமுறைப்படுத்தினால் இலங்கையின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் குறை கூறியது. பொதுசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பித்து தான் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என்று கருத்துக் கூறியது. ஆகையினால் இந்த ஒப்பந்தத்தை ஒட்டுமொத்தமாக இலங்கை அரசு கைச்சாத்திடாமல் நிராகரித்தது. தாம் இந்த நாட்டின் அதி விசுவாசம் மிக்க தேசபக்தர்களாக காட்டியது.

அதையும் தாண்டி இலங்கை அரசாங்கம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது, எதை காரணம் காட்டி அமெரிக்காவை இலங்கை அரசு நிராகரித்ததோ, அதே காரணங்களுக்காக சிறப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து துறைமுக நகரத்தின் ஒரு பகுதியை சீன அரசாங்கத்திற்கு தாரை வார்த்தது.

உதவி வழங்க முன்வந்த அமெரிக்க அரசை நிராகரிப்பதற்கு கூறிய காரணங்களை கடன் வழங்கிய நாடான சீனாவிற்காக நியாயப்படுத்தியது. இலங்கை அரசு இதில் பாரிய தவறை இழைத்துவிட்டது.

அணிசேராக் கொள்கையை கடைப்பிடித்து வந்த இலங்கை நடுநிலமையான போக்கை கொண்டது என்ற நிலையிலிருந்து இங்குதான் வெளிப்படையாக வழுவியது.

உலக வல்லாதிக்க அரசான அமெரிக்க நாட்டை எள்ளி நகையாடியதாக சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இதற்கான பலாபலன்கள் பாரதூரமானது என்பது சர்வதேசம் நன்கு அறிந்திருக்கிறது. இதன் விளைவு எப்படியிருக்கப் போகிறது என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாது

இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்கு தேசபக்தியாளர்களாக தங்களை காட்டிக்கொண்டு, வழக்கம்போல சிங்கள, பெளத்த, இனவாதத்தை சிங்கள மக்களுக்கு காட்டி நியாயப்படுத்தியது. சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் கோரிக்கையை நிராகரித்தோம் என்ற கருத்தை சிங்கள மக்களுக்கு முன் வைத்தார்கள். அதன் பின்விளைவு பூதாகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதை அரசு எண்ணிப்பார்க்கவில்லை.

அண்மையில் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவந்த பிரேரணை இதற்கு முன்னோடியாக அமையும். இவ்வாறான விடயங்கள் இனி தொடரலாம். நமது நாட்டைப்பொறுத்தவரை ஆளும் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிக்குள்யேயும் ”போர்ட் சிற்றியை” சீனாவுக்கு தாரைவார்ப்பதற்கு விரும்பாத பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இச்செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, சமந்த வீரக்கொடி, பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்றோரை குறிப்பிடலாம். இந்தஎதிர்ப்புகளுக்கு அரசு அஞ்சுமா? அவைகளுக்கு தாக்குபிடிக்குமா? என்பதுபற்றி நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

துறைமுக நகரத் திட்டத்தை முன்மொழியும் பொழுதும் முந்தைய அரசாங்கத்தில் இவர்கள் அங்கம் வகித்தவர்கள். அப்பொழுது எதிர்க்காதவர்கள் இப்போது குரல் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு பலமான கட்டமைப்பில் இருக்கின்ற அரசாங்கம் ஓரிருவரின் கருத்துக்களுக்கு செவிமடுக்க போவதில்லை. அரசுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வரக்கூடிய பலமான சக்திகளின் குரலாக இதைக் கருத முடியாது. இருப்பினும் எதிர்கால அரசியல் எற்படப்போகும் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு துணிச்சலோடு அவர்கள் சொல்லும் கருத்தை வரவேற்கத்தான் வேண்டும்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால், உண்மையில் இந்தியாவை, இலங்கை நன்றாக ஏமாற்றியிருக்கிறது. இதனை இந்தியா உணர்ந்திருக்கிறதென்பதைவிட, அது நல்ல கடுப்பில் இருக்கிறது என்பதே உண்மை. இதை நாம் ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.
கப்பல் போக்குவரத்தை கையாளுகின்ற துறைமுக பரிமாற்றங்களிலும் அவற்றை வழங்குவதிலும் ஏமாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் துறைமுக நகர விடயத்தில் சற்று வித்தியாசமான நடைமுறையை இந்தியாவிடம் அவதானிக்க முடிகிறது. வர்த்தக நோக்கங்களோடும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. அத் திட்டங்களை தாங்கள் எதிர்க்கப் போவதில்லை என்று இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்திருக்கிறது. ஆனாலும் இந்த நோக்கங்களுக்கு புறம்பான செயற்பாடுகள் துறைமுக நகரத்திலும் இலங்கையிலும் நடைபெறுகின்றனவா என்பதை தாங்கள் உற்று அவதானிப்பதாகவும் இந்தியா தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் அதிக முதலீடுகளை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் அழைப்பு விடுத்திருக்கிறார். குறிப்பாக துறைமுக நகரத்தில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறையை கையாள முடியும். இதன் எதிர்கால சாத்தியப்பாடு எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இலங்கையை தம்முடன் சேர்ந்து பயணிக்க இந்தியா நட்பு ரீதியான அழைப்பையும் விடுத்துள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கான காரணத்தையும் இலங்கை கவனத்திலெடுக்க வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க, ஆளும் அரசு பொருளாதார அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்குமான செயற்பாடுகளுக்கும் அனுமதி அளிப்பது அத்தியாவசியமானது.

இதனடிப்படையில் நல்லாட்சி அரசின் காலத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகள் செய்வதற்கு காத்திருந்தன, முன்வந்தன. அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. இப்படியான அரசு இப்போது எமது நாட்டின் தலைநகரத்தில் ஒருபகுதியை சீன தேசத்திற்கு வழங்கியிருக்கிறது. அத்தோடு அதற்கென பிரத்தியேக நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. உண்மையில் நமது நாட்டு மக்களிடமிருந்து சீன தேசத்தால் போர்ட் சிற்றி மூலமாக உழைக்கப்படும் பணம் சீன தேசத்திற்குத்தான் போய்ச் சேரப்போகிறது. புலம்பெயர் அமைப்புக்களின் முயற்சியால் நம் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் நிதியால் பயனடையப்போவது நம் நாட்டு மக்கள்தான், சீன தேசத்தவர்களல்ல. இதை இனியாவது அரசு உணருமா? இனிமேல் இவ்வாறான முயற்சிக்கு அனுமதி கிடைக்குமா என்பதுபற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல நாடு முழுவதுமே நிலைபேறான வேலை வாய்ப்பினை உருவாக்கக்கூடிய நாட்டினுடைய வளங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க கூடிய எந்த முதலீடுகளைப் பொறுத்தவரை கடந்த இரண்டு தசாப்தங்களாக எந்த அரசாங்கங்களும் அவைகளை முன்னெடுக்க தவறி விட்டன. அப்படிப்பட்ட பல அபிவிருத்தியோடு கூடிய முதலீட்டுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் ஊழல் லஞ்சம் காரணமாக அவையெல்லாம் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இச் செயற்பாடு நாட்டிற்கு உதவாத ஒன்று

குறுகிய கால உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்கள் கடன்களைப் பெற்று முன்னெடுக்கப்பட்டன. இதனால் நாட்டினுடைய கடன்சுமை கட்டு மீறி உள்ளது. அந்நியச்செலாவணி, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு , வளங்களைப் பயன்படுத்துதல், நிலையான வருமானத்தை அரசாங்கத்துக்கு ஈட்டிக் கொடுத்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொள்ளவில்லை. அதனால் நாட்டின் ஒட்டு மொத்த அபிவிருத்தியும் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய முன்வந்த எங்களுடைய புலம் பெயர் உறவுகளின் முதலீடுகளை நிதி மூல ஆதாரங்களை கோரியும் பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டும் தடுத்து நிறுத்தினர். ஆனால் இன்று துறைமுக நகரத்தில் முதலீடு செய்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்பதை காணலாம். அவர்களின் நிதி மூல ஆதாரங்களை பற்றிய எந்தக் கேள்விகளையும் முன்வைக்காது செங்கம்பளம் விரித்து முதலீட்டாளர்களை வரவேற்கிறார்கள். துறைமுக நகரத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்ற களியாட்ட விடுதிகள் மூலம் காசு சலவை செய்யப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக பல தரப்பும் அக்கறை தெரிவித்துள்ளனர். ஆனால் அதைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. எமது புலம்பெயர் உறவுகளின் நிதி மூலங்கள் மாத்திரம் சந்தேகக்கண்ணோடு ஆராயப்படுகிறது. இது குறிப்பாக வடக்கு கிழக்குக்கான புலம்பெயர் உறவுகளின் பாரிய அபிவிருத்தி திட்டங்களை தடுத்து நிறுத்தம் நடவடிக்கையாகவும் கருதலாம்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் எமது மாகாணசபை குறிப்பாக வடக்கில் இருந்த அல்லது இருக்கின்ற, அதிகாரிகளும் இப்படியான அபிவிருத்திக்கு பெரும் தடையாக இருந்ததை அனைவரும் அறிந்திருப்பார்கள்.

ஏற்கெனவே பல்வேறு நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுக்க கூடிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டு கொண்டிருப்பதும் குறுகிய கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒருசில நிமிடங்களில் அமைச்சரவையில் அனுமதி வழங்கும் நிலையும் நம் நாட்டில் சமகாவத்தில் காணப்படுகிறது.

மேலும் சீனாவில் இருந்து வெளியேறும் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருவதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். சீன சார்பாக பக்கம் சாயும் இந்த அரசு மேலே சொன்ன முதலீடுகளை வரவேற்க தவறுவதோடு தமது தீர்க்க தரிசனமற்ற முதலீட்டு மற்றும் வெளிவிவகார கொள்கைகளால் அவற்றை இந்தியாவிற்கும் வேறு முதலீட்டு மையங்களுக்கும் திசைதிருப்புவதாகவே அமையும்.

எதிர் காலங்களிலும் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய முதலீடுகளை வரவேற்பதில் இந்த அரசு கவனம் செலுத்துமா என்பது சந்தேகமே.

குறுகிய கால தனிப்பட்டோர்களின் லாபநோக்கங்களை கருத்தில்கொண்டு அதன் அடிப்படையில் முன்னெடுக்கும் அபிவிருத்திகளுக்கே முன்னுரிமை வழங்குவது தான் நடைபெறுமாயின் அது அர்த்தபுஸ்டியாகாது. இந்த தவறுகளை தமிழினத்தின் உரிமைகளை மறுக்க இனவாத அல்லது பெருந்தேசிய வாதப் போக்கை கவசமாக பயன்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதால் அரசு தனது அரசியல் இருப்பை தக்க வைக்க முயலும். எதையும் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021