சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுள்ளது-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும்

சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மேம்போக்கான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்  மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் தனது மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சர்வதேச அளவில் அதிகரிக்கும் அழுத்தங்களில் இருந்து தப்புவதற்காக மேம்போக்கான மாற்றங்களுடன் திருத்தச்சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை நிபுணர்களும்,ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கனவே இந்த திருத்தங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மிகவும் ஆபத்தான ஏற்பாடுகளிற்கு தீர்வை காண்பதற்கு போதுமானவையில்லை.  தனது திருத்தச்சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் குழுநிலை விவாதத்தை தவிர்த்துக்கொண்டது.

குழுநிலை விவாதத்தை முன்னெடுத்திருந்தால் மனித உரிமை குழுக்களின் உள்ளீடுகளை உள்வாங்கியிருக்கலாம்,இது இலங்கை தனது சட்டமூலத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்றதாக மாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பாக  காணப்பட்டது.

நான்கு தசாப்தங்களிற்கு மேலாக இலங்கை அதிகாரிகள் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதையை நீடிப்பதற்காகவும் – சிறுபான்மை சமூகத்தினரையும் சிவில் சமூகத்தினரையும் இலக்குவைப்பதற்காகவும் பயன்படுத்தியுள்ளனர்.

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கம் எவரையும் ஒரு வருடகாலத்திற்கு குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் – எந்த ஆதாரங்களும் இல்லாமல் – பிணைக்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் – தடுத்துவைப்பதற்கு தொடர்ந்தும் அனுமதிக்கின்றது.

புதிய திருத்தங்கள் சித்திரவதையிலிருந்து எந்த பாதுகாப்பையும் வழங்கவில்லை, மாறாக காவல்துறை உத்தியோகத்தருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலான தண்டனைகள் காரணமாக சித்திரவதைகளை ஊக்குவிக்கின்றது.

பொருளாதாரத்தை தவறான விதத்தில் கையாண்டமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் பாரிய ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்கின்றது. பொருளாதாரம் தவறான விதத்தில் கையாளப்பட்டமை அத்தியாவசிய பொருட்களிற்கு பாரிய தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதுடன் பணவீக்க அதிகரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நிதி உதவியை கோரும் இலங்கை அரசாங்கம் தொடரும் மனித உரிமை துஸ்பிரயோகம் காரணமாக அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள நிலையில், மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க முயல்கின்றது என மேலும் தெரிவித்துள்ளது.