Home செய்திகள் சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்

சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்

இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஆங்கில மொழி ஊடகங்களில் பணியாற்றும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சில சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஊடக நிறுவனங்களிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் காணப்பட்டதை தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதாக, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை நிறுத்துமாறு, ஊடக நிறுவனத் தலைவர்களை அறிவுறுத்துமாறு, ஜுன் 25ஆம் திகதி அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில், இந்த கருத்துக்களை இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள முக்கிய ஊடக நிறுவனங்களில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை நடத்துவதில் சமூக ஊடகங்களில் கலந்துரையாடல்களை ஆரம்பமானதை அடுத்து ஊடகத்துறை அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

அந்த வெளிப்பாடுகளில் அரசாங்க ஆங்கில ஊடகங்களின் பெயர்கள் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஊடகங்களில் பெண்கள் இத்தகைய துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளதோடு, பெண்கள் இவ்வாறு தொடர்ச்சியாக எதிர்நோக்கும், பாலியல் துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில ஆலோசனைகளையும் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திற்கு முன்வைத்துள்ளது.

இலங்கையில் சில ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், அலுவலகத்திற்கு வெளியே பணிபுரியும் ஊடகவியலாளர்கள் (பிராந்திய ஊடகவியலாளர்கள்), ஊடகங்களின் பிற பிரிவுகளில் பணிபுரியும் பெண்கள் மாத்திரமன்றி, ஊடகங்களில் சில ஊடகவியலாளர்களால் மாத்திரமன்றி, ஆசிரியர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களாலும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பாதிப்பிற்குள்ளான ஊடகவியலாளர்கள் மற்றும் பிற ஊடகவியலாளர் குழுவினால் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த ஆதாரங்களையும், சில  தகவல்களையும் நிறுவனத் தலைவர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் பெரும்பாலான சம்பவங்கள் நிறுவனத் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் என்ற வகையில், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் மிகுந்த கவலையடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில ஊடக நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் பல வழிகளில் நடைபெற்று வருவதாக இளம் ஊடகவியலாளர் சங்கம் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

1. ஊடகத் துறையில் நுழையும் புதிய பெண்கள் (பயிற்சியாளர்கள் அல்லது புதியவர்கள்) அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்

2. பிராந்திய ரீதியிலும், சுயாதீன ஊடகவியலாளராகவும் பணிபுரிபவர்களுக்கு அவர்களது அறிக்கையிடல்கள் வெளியிடப்படும் விதத்தில் பணம் செலுத்தப்படுகிறது, இதனடிப்படையில், அவர்களது செய்திகளை வெளியிட முடியாது என அச்சுறுத்துவதோடு, பாலியல் ரீதியில்  துன்புறுத்தப்படுகிறார்கள்.

3. ஊடகங்களில் உயர் பதவிகளை வகிக்கும் சில நபர்களால் தமது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றார்கள்.

4. ஒரே பிரிவில் பணிபுரியும் நபர்களால் பாலியல் துன்புறுத்தல்;

5. பத்திரிகைகளுக்கு புதிதாக எழுதுபவர்களிடம், அவற்றை வெளியிடுவதாகக் கூறி  பாலியல் இலஞ்சம் கோருதல்.

6. சில சமயங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களை, துன்புறுத்திய சந்தேகநபர்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, ஊடக அதிகாரத்தை பயன்படுத்தி, சிலர் அவர்களை அவ்வப்போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குதல்.

7. சில ஊடகவியலாளர்கள் கள ஆய்விற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும்போது, புகைப்படக் கலைஞர்கள் அல்லது சக ஊடகவியலாளர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல் துன்புறுத்தல் காரணமாக பெண் ஊடகவியலாளர்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறிய சம்பவங்கள் பல காணப்படுவதாக, இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமையில், அரசாங்கத்திற்கும் இதுபோன்ற நிலைமைக்கு பொறுப்பானவர்களுக்குமான, பொறுப்பு குறித்து ஊடக அமைப்பு நினைவூட்டியுள்ளது.

”ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் தங்கள் சொந்த அமைப்புகளுக்குள்ளும், ஊடகங்களிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படாமல், சுதந்திரமாக பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான பெரும் பொறுப்பு, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் காணப்படுவதாக நாங்கள் நம்புகிறோம்.” என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே, பின்வரும் தகவல்களைக் கருத்தில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தவும், இந்த கோரிக்கைகளை ஊடக நிறுவன நிறுவனத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பெண்கள்  சுதந்திரமாக பணியாற்றக்கூடிய சிறந்த சூழலை உருவாக்குமாறும், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

1. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பின்னர் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, நிறுவனத் தலைவரிடம் முறைப்பாடு செய்யவும், சட்டத்தை அமுல்படுத்தும் காவல்துறையிடம் முறைப்பாடு செய்யவும் ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை தெளிவுபடுத்த வேண்டும்.

2. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அறிந்தவுடன் அவளது பாதுகாப்பை உறுதி செய்யவும்,  குற்றவாளிகள் மீது நிறுவனம் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கவும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும், வேறு பிரிவின் பிரதானிகளுக்கும் தெளிவுபடுத்தல்களை வழங்குதல்.

3. ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்தால் அதுத் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும், ஊடகங்களில் இடம்பெறும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கவும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் சுயாதீன பிரிவை நிறுவுதல்.

4. பணியிடத்திலும் கடமையிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைக் குறைப்பதற்கும் இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும் ஊடகங்களில் தனி பெண் அதிகாரியை நியமித்தல்.

5. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களுக்கு இலவச உளவியல் ஆலோசனை சேவைகளை வழங்க ஒரு சுயாதீன நிறுவனம் அல்லது பிரிவை நிறுவுதல்.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், இலத்திரனியல் ஒளிபரப்பாளர்கள் சங்கம், செயலாளர், வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பத்திரிகை உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்

Exit mobile version